சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நிலையான சமாதானத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கான அவசியத்தையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
சுமந்திரன் எம்.பி.யின் சமீபத்திய அமெரிக்க பயணம், திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் வடக்கில் பாரிய புதைகுழிகள் கண்டறியப்பட்டமை தொடர்பாக தாம் இருவரும் கலந்துரையாடியதாகவும் டுவிட்டர் பதிவில் ஜூலி சங் தெரிவித்துள்ளார். மோதல்களின் முடிவில் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நினைவுகூர்ந்தார்.