இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’. இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புக்குள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின்போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை, ஹன்சிகா சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதுதான் இந்தக்கதை.
ரொமாண்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் ‘மை3’ வெப்தொடரை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கணேசன் இசையமைத்துள்ளார். ‘மை3’ வெப்தொடர் செப்டம்பர் 15-ஆம் திகதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.