ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் முயற்சிகளை குழப்பும் நோக்கில் அர்த்தமற்ற போராட்டங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் முயற்சிகளை குழப்பும் நோக்கில் அர்த்தமற்ற போராட்டங்கள்!

நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கானபடிப்படியான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசின் முயற்சிகளைப் பாதிக்கும் வகையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்பொழுதும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போராட்டக்காரர்கள் சரியான குறிக்கோள் இன்றி தற்போதைய ஜனாதிபதியையும் வீட்டுக்குச் செல்லுமாறு போராட்டத்தை நீடித்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் மக்கள் போராட்டம் ஒன்றின் காரணமாக நாட்டின் தலைவர் ஒருவர் பதவி விலகும் நிலைமை ஏற்பட்டு ஆட்சிமாற்றமொன்று உருவாகியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கின்ற போதும், இந்தப் போராட்டம் ஒவ்வொருவருக்கும் எதிராக விஸ்தரிக்கப்பட்டுச் செல்வது பல்வேறு தரப்பிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கள யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட போராட்டமாக இது தென்படவில்லையென்று பொதுவாக அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது. 

மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படவில்லையென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவு செய்துள்ளனர் என்பதே உண்மை. அதுவும் எமது நாட்டின் அரசியலமைப்பின்படியே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகவே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு நியாயமான காலஅவகாசத்தை வழங்க வேண்டும். அவ்வாறு காலஅவகாசத்தை வழங்காது அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது என்பது நியாயமானதாகத் தென்படவில்லை.

இலங்கையில் காணப்படும் நெருக்கடி நிலைமை ஒரு இரவில் தீர்க்கப்படக் கூடியதொன்று அல்ல என்பதை போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தற்பொழுது முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் சக்திகள் செயற்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது.

அதேநேரம், நாட்டில் தோன்றியுள்ள நெருக்கடி நிலையைத் தணிப்பதற்கு அரசியல் கட்சிகள் தமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையும் காணப்படுகிறது. நாட்டின் அரசியலில் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்ட நாளிலிருந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் அடிபட்டுக் கொண்டிருந்தாலும், இதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள் முன்வரவில்லையென்றே கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தேசிய அரசாங்கமொன்றை அமைத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வாருங்கள் என அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இருந்தபோதும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஏனைய எதிர்க்கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்தவொரு கட்சியுமோ இதற்குத் தமது இணக்கத்தைத் தெரிவித்திருக்கவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையில், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும், அதில் இணைந்து நாட்டுக்காக சேவையாற்றுமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பினை அரசியல் கட்சிகள் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரியவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல தலைவர்கள் அராசங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்ற சமிக்ஞையை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதியைப் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுடன் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் ஜனாதிபதி சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் நலன் சார்ந்த 10முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாக இதில் பங்கெடுத்த உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, கல்முனை உபபிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவது, காணிகளை விடுவிப்பது, தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தப்படுவதை நிறுத்துவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

சர்வகட்சிகளின் தேசிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்ற விடயமும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத போதும் தனது முழுமையான ஒத்துழைப்பைத் தெரிவித்து கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும் என்ற விடயத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமன்றி ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையை வரவேற்றிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் வரவேற்றிருந்ததுடன், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

மறுபக்கத்தில் ஜனாதிபதி சார்பில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுடனும் நேரடியான சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து அதிருப்தியடைந்து எதிர்க்கட்சியில் உள்ள சுயாதீனக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலும் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

இவ்வாறு கட்சிகளுக்கிடையில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டதும் சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதும் அரசாங்கத்தின் சர்வகட்சி வேலைத்திட்டத்தில் தாம் இணைந்து கொள்ளப் போவதில்லைனெ தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அதேநேரம், அரசியல் ஸ்திரத்தன்மையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்துக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பலத்தை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ள பல அம்சங்கள் 22வது திருத்தச் சட்டமூலத்தில் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் சந்தர்ப்பத்தில் 22வது திருத்தச் சட்டத்தையும் விரைவில் நிறைவேற்றி அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்த முடியும். அரசியல் கட்சிகள் தமது சார்பில் எடுக்கும் முயற்சிகளைப் போராட்டக் காரர்கள் வீணாகக் குழப்பாதிருப்பதே காலத்தின் தேவையாகும்.

பி.ஹர்ஷன்

Comments