இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை "லண்டன் காதர்" | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை "லண்டன் காதர்"

இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவர். முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக, இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையிலான வாழ்வு முறைக்கு, அன்றைய இளைஞர் - யுவதிகளுக்காக கல்வித்துறையில் பங்களிப்புச்செய்த ஆளுமையின் சொந்தக்காரர் "லண்டன்" காதர்.

இவர் மாளிகாவத்தை பிரதேசத்தில் வாழ்ந்த நாட்களில், நான் அவருடன் நெருங்கிப் பழகினேன்.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் (18. -07. 2022) தன்னுடைய 90ஆவது வயதில், மாளிகாவத்தை இல்லத்தில், இறையடி சேந்தார் லண்டன் காதர்.

வயது, அனுபவம், செயல்திறன், ஆகியவற்றில் மூத்தவரான லண்டன் காதரை நான் நேசிப்பதற்கும், நெருக்கமாய் பழகுவதற்கும் பல காரணங்கள் இருந்தன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும்,கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவருமான நண்பன் ஏ.சீ.எம் சப்ரியின் அன்புத்தந்தை தான் லண்டன் காதர்.

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் ,சுங்க அத்தியட்சகராக ஏ.சீ.எம்.சப்ரி தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தில் இவர்கள் எல்லோருடனும் இணைந்து நானும் செயற்பட்டுக் கொண்டிருந்தேன்.

தற்போது ஐக்கிய அமீரக இராச்சியத்தில், சிரேஷ்ட நிதி முகாமையாளராகக் கடமையாற்றும் மற்றுமோர் நண்பன் கே.எம். எம்.அம்ரி, லண்டன் காதரின் சகோதரர்களில் ஒருவரான கிழ்று மொஹிதீனின் புதல்வர் மாத்திரமல்ல, இவரும் எமது சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவராவார். நண்பன் அம்ரியின் மூத்த சகோதரர் கே.எம். அஸ்கர் கூட மூத்த உறுப்பினரும் தீவிர செயற்பாட்டாளருமாவார்.

நண்பன் சப்ரியின் தந்தை என்ற வகையில், அவர் மீதான அன்பு கலந்த மரியாதையும், எங்களுடன் அவர் பழகிய முறையும், நீண்ட காலத்தொடர்பும் எங்களை பிணைத்திருந்தன.

மாளிகாவத்தை,கெத்தாறாமை சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் அமைந்துள்ள மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளிவாசலில்,தொழுகையை நிறைவேற்றுவது அவரது வழக்கமாக இருந்தது.

அதிலும் குறிப்பாக,வெள்ளிக்கிழமைகளில் ஜும் ஆ தொழுகைக்குப்பின்னர் , நான் வெளியே வரும்வரை காத்து நின்று, ஸலாம் என்ற முகமன் வாழ்த்து சொல்லிவிட்டுத்தான் வீட்டுக்கே போவார். நான் கூட, அவர் வரும்வரை காத்திருப்பதை வழக்கப்படுத்திக்கொண்டேன்.

அவருடைய இந்தச்செயற்பாடு, என்னை அவர்பால் ஈர்த்தது என்றே சொல்லலாம். அதிலும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் அன்பாகவும், அமைதியாகவும்,பேசுவார். மாளிகாவத்தையில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக " ஸ்ரீ லங்கா முஸ்லிம் கல்விப்பேரவை" என்ற ஓர் அமைப்பை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், என்னுடைய தலைமையில் ஆரம்பித்திருந்தேன். அதில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார். உப தலைவர் பதவியையும் வகித்தார். என்னையும் ஊக்குவித்துக்கொண்டிருந்தார்.

லண்டன் காதர் என்ற ஆளுமையின், நட்பும், நற்பண்புகளும், நெருக்கமான தொடர்பும் மாத்திரமல்லாது, இந்த நாட்டினதும், தான்சார்ந்த சமூகத்தினதும் வளர்ச்சிக்காக, அவர் ஆற்றிய பங்களிப்புக்களும் பதிவு செய்யப்படவேண்டும் என்று என்னுள் எழுந்த வேட்கையும், இந்தக்கட்டுரை எழுதுவதற்கு தூண்டுகோலாய் அமைந்தன.

இலங்கையின் தேசிய ரீதியிலான இடது சாரி இயக்கங்களின் அரசியல் தலைவர்களினாலும், அங்கத்தவர்களினாலும், சாதாரண ஒரு பொது மகனாலும் அடையாளம் காணப்பட்ட ஓர் ஆளுமைதான் "லண்டன் காதர்".

குதுப் மொஹிதீன் அப்துல் காதர் என்ற முழுப்பெயரையும் கொண்டிருந்த "லண்டன் காதர்" கொழும்பு மத்திய தொகுதியில் அமைந்துள்ள புதுக்கடையில் 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி பிறந்தார்.

இவருக்கு எப்படி “லண்டன் காதர்” என்று பெயர் வந்தது என்பதை இக்கட்டுரையின் ஒரு பகுதியில் குறிப்பிடவுள்ளேன். புதுக்கடை, பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள ஃபாத்திமா முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை "லண்டன் காதர்" மேற்கொண்டிருந்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து, மருதானை சென்ட்ரல் ஆங்கிலக் கல்லூரியில் கல்வியைத்தொடர்ந்தார். கொழும்பு மத்திய தொகுதியில், இப்பரீட்சையில் சித்தியடைந்த முதலாவது மாணவர் லண்டன் காதர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதிலேயே,சமூக செயற்பாடுகளில் ஈடுபாடுமிக்கவராகத் திகழ்ந்த லண்டன் காதர், எஸ் எஸ் சீ பரீட்சை சித்திய​ைடந்த பிறகு, குடும்பச் சுமைகள் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டார். இந்த கால கட்டத்தில் தான் கொழும்பு, தெவட்டகஹ பள்ளிவாசலுடன் இணைந்ததாக உஸ்மானிய்யா ஆங்கிலப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இப்பாடசாலையில் ஆங்கில போதனாசிரியராகக் கடமையாற்றிய லண்டன் காதரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பிற் காலத்தில், பல உயர் பதவிகளை வகித்தார்கள். முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர்கூட லண்டன் காதரிடம் கல்வி கற்றவராவார். அவரே இதனைப் பலமுறை கூறியிருக்கின்றார். 19ஆம் நூற்றண்டின் கடைசிப்பகுதியில்தான் முதலாவது முஸ்லிம் பாடசாலையொன்று பேருவளையில் உருவாக்கப்படுகின்றது. கொழும்பில்தான், ஆண்களுக்கென்று முதலாவது முஸ்லிம் பாடசாலை உருவாக்கப்பட்டது 1800களில், மத்ரசதுல் ஃகைரியா என்ற பெயரில் ,கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் இணைந்ததாக இப்பாடசாலை அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில ஆண்டுகள் கழித்துத்தான் கொழும்பு ஸாஹிராக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. நீதியரசர் அக்பரின் தலைமையிலான முஸ்லிம் கல்விப்பேரவை (Muslim Educational Forum) என்ற அமைப்பின் மூலம் இரண்டு பாடசாலைகள் உருவாக்கப்படுகின்றன.

ஒன்று பாத்திமா முஸ்லிம் பாடசாலை (பண்டாரநாயக்கா மாவத்தை) மற்றையது 1906ஆம் ஆண்டளவில் ஹுஸைனியா என்ற ஆங்கிலப் பாடசாலை (Hussainiya English School) கொழும்பு 12, ஹல்ஸ்டோர்ப் பகுதியில் உருவாக்கப்பட்டது. பாத்திமா முஸ்லிம் பாடசாலையைத்தவிர, ஏனைய பாடசாலைகளில், மேல் மட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கில மொழியில் தான் கல்வி கற்றார்கள். 1904ஆம் ஆண்டளவில், மத்ரசதுல் ஃகைரியா பாடசாலை ஹமீதியா என்று பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது.

"இளநெஞ்சன்"
முர்ஷிதீன்
-
மாளிகாவத்தை

 

Comments