நவீன மருத்துவத்தைத் தமிழில் கற்பித்த முன்னோடி கிறீனின் இருநூறாண்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

நவீன மருத்துவத்தைத் தமிழில் கற்பித்த முன்னோடி கிறீனின் இருநூறாண்டு விழா

உலகின் நவீன மருத்துவத்தைத் தமிழில் கற்பித்த முன்னோடி> தென் ஆசியாவின் முதலாவது மருத்துவக் கல்லூரியை இலங்கையில் நிறுவியவர்> அறிவியல் தமிழின் காரணகர்த்தா என்ற சிறப்புகளால் அவரது 175வது பிறந்த ஆண்டை முன்னிட்டு 1998இல் இலங்கை அரசால் முத்திரை வெளியிட்டுக் கௌரவிக்கப்பட்ட அமெரிக்கன் சிலோன் மிஷன் வைத்திய மிஷனரியான சாமுவேல் கிறீனின் 200வது பிறந்த ஆண்டை நினைவுபடுத்தி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

1822ஆம் ஆண்டு இதே ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி கிறீன் அமெரிக்காவில் பிறந்தார். தமது 19வது வயதில் 1841ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மருத்துவக் கல்லூரியில் இணைந்துகொண்டார். 1847ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25வயது நிரம்பிய ஒரு வைத்திய மிஷனரியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். ஏறத்தாழ 25வருடப் பணிகளுக்குப் பின் அவர் 1873இல் மீண்டும் அமெரிக்கா சென்றார். இவ்வாறு தன்னிகரில்லாத் தமிழ்த் தொண்டாற்றிய கிறீனை நினைவு கூருவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

இலங்கையில் அமெரிக்க வைத்திய மிஷன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இலங்கைக்கு வரத் தொடங்கிய அமெரிக்கன் கிறிஸ்தவ மிஷனரிமார் மதம் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தனராயினும் மறைபரப்புதலுடன் மருத்துவம்> கல்வி போன்ற மனிதநேயப் பணிகளையும் செய்தனர். மருத்துவப் பணியின் தேவை அதிகரிக்க ‘வைத்திய மிஷனரி’களாகவும் சிலர் வரலாயினர். வைத்திய மிஷனரிமாரின் தொடர் வருகையும் பணியும் ஈழத்தில் பரவலடைந்தன.

அறிவியல் தமிழ்ப் படைப்புக்கள்

கிறீனின் முயற்சிகளால் வெளிவந்த அறிவியல் தமிழ்ப் படைப்புக்களை இரண்டு வகையாக நோக்கலாம். அவை அறிவியல் தமிழ் பாட நூற் படைப்புக்கள் மற்றும் அறிவியல் சார் வெகுஜன தொடர்பாடல் கட்டுரைகள் என்பனவாகும். இவ்வாறு> அறிவியல்சார் விடயங்களை நூல்களாகவும்>  கட்டுரைகளாகவும் கொண்டு வருவதற்கு “அறிவியல்பூர்வமான”காரணங்களை கிறீன் கொண்டிருந்தார். அவற்றை அவர் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள்> கடிதங்கள் என்பவற்றின் மூலம் அறியமுடிகின்றது. தமிழில் வைத்தியக் கல்வியை நடத்துவது தமிழ் மாணவர்கள் வைத்தியத்தைப் பற்றிப் பூரணமாகப் புரிந்து கொண்டு மக்களுக்கு முறையாகச் சேவையாற்றப் பயிற்றுவிப்பது> தவறான வைத்திய முறைகளை நீக்குவது> பொது மக்கள் மத்தியில் காணப்படும் மூடநம்பிக்கைகளை விலக்குவது தமிழில் தொடர்ந்து அறிவியல் தமிழ் நூல்கள் எழுவதற்கு வழிகாட்டுவது என பொதுமக்களின் தேவைக்கும்> சமகால நோய்ப் பரவல்களுக்குத் தீர்வு கொடுப்பதற்கும்> நீண்டகாலத் தேவைகருதிய வைத்திய மாணவர்களுக்குமாக அவரது படைப்புகள் அமைந்திருந்தன.

19ஆம் நூற்றாண்டில் நவீன சமூகத்தின் தேவையில் ஒன்றான அறிவியலைத் தமிழ்ப்படுத்தும் முயற்சிகள் தமிழகத்தைவிட ஈழத்தில் அதிகம் நடைபெற்றன என்று கூறலாம். அதில் கிறீனின் பங்கு முதன்மையானது. அறிவியல் என்பது தெளிவுடன் எடுத்துக் கூறப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சொற்செட்டு மிகுந்த வாக்கியங்கள்புதிய சொற்கள்பழைய சொற்களுக்குப் புதிய விளக்கங்கள் என்பன அவரின் படைப்புகளில் வெளிப்பட்டன. புதிய ஒரு மொழிக் கையாளுகை தமிழில் நிகழத் தொடங்கியது. கிறீனைப் பொறுத்தவரை, முதன்முதலில் தமிழுக்கு அறிவியல் வருகின்றது என்ற எண்ணம் அவரிடம் இருந்தாலும் பல வருடப் பழக்கம்போல் மருத்துவ நூல்களைப் படைத்திருப்பது அவரது மொழிக் கையாளுகையையே காட்டுகின்றது. “எனது ஆறுமாதகால முயற்சியில் நான் இரு பலன்களைப் பெற்று விட்டேன். நல்லதொரு விடயத்தைத் தமிழில் இணைத்துள்ளேன். தமிழில் எழுதும் அனுபவம் பெற்றுள்ளேன். இவ்விடயத்தில் குறிப்பாக எனக்கிருந்த ஆர்வத்தாலேயே மிகவும் அக்கறையுடன் எனது பணியைக் கவனித்தேன். குறிக்கோளின்றித் தமிழைக் கற்பதிலும் பார்க்க ஒரு நோக்கத்துடனேயே கவனமாகத் தமிழை அணுகி நல்ல அனுபவம் பெற்றுள்ளேன்”என நீண்டகாலப் பயிற்சியால் நோக்கத்துடன் தமிழை எழுதுவதால் தனது தமிழ்நடை வளம் பெற்றது என கிறீன் கூறுகிறார்.

தான் மேற்கொண்டுள்ள முயற்சியானதுதமிழில் மேனாட்டு வைத்தியம் பரவ ஓர் அத்திவாரமாகவும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டும் என விரும்பிய கிறீன்> தனக்குப் பின்னும்> அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து புதிது புதிதாக நூல்கள் தமிழில் வரவேண்டும் என்றும் விரும்பியவர். தாம் இறப்பதற்கு முன் ‘மனுஷ சுகரணம்’என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில்> ‘சுகரணகல்வி தீவிர வளர்ச்சியுடையதாதலால் அதை ஏற்ற விதமாய் விளக்குவதற்கு ஓர் புத்தகத்தைப் பிரசித்தப்படுத்துவதில் வேளைக்கு வேளை அதில் புதிதாக விளையும் அறிவைப் பத்திரிகையில் பதித்துப் பரப்புவதே தகும்”என அறிவியலின் தொடர்ச்சியைஅதன் இற்றைப்படுத்தலைபரப்புகையை முக்கியத்துவப்படுத்தினார்.

இதனால்அவரது காலத்தில் ஈழம்இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்கள் அறிவியல் தமிழ்கலைச் சொல்லாக்க நடைமுறைகள் பற்றிய விளக்கங்களைவிபரங்களை கிறீனிடம் கேட்டு அறிந்து கொண்டமை, அக்காலத்தில் அவருக்கிருந்த மதிப்பையே எடுத்துக்காட்டுகிறது.

உதாரணமாகசென்னை அரசினர் கல்லூரி பேராசிரியர் தமிழில் விஞ்ஞானத்தின் அறிமுகம் தொடர்பாகவும் கலைச்சொல்லாக்கம் பற்றியும் கேட்டறிந்ததுடன்கல்கத்தாவில் உருவாக்கப்பட்ட கலைச்சொல்லாக்க ஆவணங்களைத் திருத்தும்படியும் அனுப்பியிருந்தார்.

இத்தகைய செயற்பாடுகள் கிறீனுக்கு அறிவியல் தமிழ் உலகில் கொடுக்கப்பட்ட முதன்மையையே காட்டின.

கிறீனின் மாணவரான எதெர் நாயகம் “கிறீன் ‘எமது குருடொக்கடர்’என அழைக்கப்படத்தக்கவர். முதன்முதலில் மருத்துவத்தைத் தமிழில் தந்ததால் தமிழ் விளங்கும் நிலமெங்கும் பெறமதிமிக்க ‘அகஸ்தியர்’என்றும் திகழ்வார்”என்றும் கூறியுள்ளார். ‘அகஸ்தியர்’என்ற எண்ணக்கரு தமிழில் எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் கிறீனின் முதன்மை நன்கு புலப்படும்.

அறிவியலைத் தமிழில் தந்தமை, நூல்கள், கட்டுரைகள் என்பவற்றை அறிவியல் மொழி நடையில் எழுதியமை –அறிவியல் தமிழுக்கு தேவையான கலைச்சொற்களை விதிமுறையிட்டு உருவாக்கியமை என்பவற்றை கிறீனே தமிழ் உலகில் சீராகவும்தெளிவாகவும்தொடர்ச்சியாகவும் செய்தமையை நோக்குகின்றபோதுகிறீன் ‘அறிவியல் தமிழின் தந்தையாகவே’போற்றப்படக்கூடியவர் என்பது புலனாகின்றது.

மார்க்கண்டன் ரூபவதனன்
முதுநிலை விரிவுரையாளர்
ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்

Comments