மாணவர்களை அச்சுறுத்துகின்ற துன்புறுத்தல் முகாம்களாக மாறிவரும் பல்கலைக்கழகங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களை அச்சுறுத்துகின்ற துன்புறுத்தல் முகாம்களாக மாறிவரும் பல்கலைக்கழகங்கள்

ஒருவரது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது கல்வி. அதேபோன்று சமூகத்துக்கும் நாட்டுக்கும் அவசியமானது கல்வி. தனிநபரினதும் சமூகத்தினதும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கல்வி அளிக்கின்ற பங்களிப்பை போன்று வேறொன்றும் அளிப்பதில்லை. அதிலும் குறிப்பாக உயர்கல்வி அதிக முக்கியத்துவம் பெற்றதாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
 
இந்நிலையில் இன்றைய நவீன உலகில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வியின் தேவையும் அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டிருப்பதன் வெளிப்பாடே அதுவாகும்.
 
இந்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பே இலவசக்கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் சி.டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர, 1945 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலவச கல்விச் சட்டத்துடன் கல்வித் துறையில் மிக முக்கியமான மாற்றத்தை முன்வைத்தார். இச்சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் எந்த பாரபட்சமும் இல்லாமல் முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வியை பெறக்கூடிய வாய்ப்பு உருவானது. இது இந்நாட்டின் கல்வித்துறை பெற்றுக்கொண்ட மிகப்பெரிய கொடையாகும்.
 
இலவசக்கல்வி அன்று முதல் இன்று வரையும் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்நாட்டில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் அவர்களது பெறுபேறுகளின் அடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்விக்காக உள்வாங்கப்படுகின்றனர். நாட்டில் 25 பல்கலைக்கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
 
தனிநபர் விருத்திக்கும், சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்கும் கற்றறிந்தவர்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்கும் தளங்களாக விளங்கும் இப்பல்கலைக்கழகங்களில் இற்றைக்கு ஏழெட்டு தசாப்தங்களுக்கு முன்னர் பகிடிவதை அறிமுகமாகியுள்ளது. இது இந்நாட்டின் கல்வி முறையில் காணப்படாத ஒன்று. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு இந்நாடு உள்ளாகி இருந்த காலப்பகுதியில் இந்நாட்டு உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களுக்குள் இந்த பகிடிவதை ஊடுருவியுள்ளது.
 
உயர்கல்வி பெற வரும் புதிய மாணவர்களுடன் அறிமுகமாகிக் கொள்வதையும், அவர்களுடன் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதையும் நோக்காகக் கொண்டு பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகவே பகிடிவதை கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் புதிய மாணவர்களை உடல், உள ரீதியில் அநாகரிகமான முறையில் இம்சிப்பதாகவும் துன்புறுத்துவதாகவும் பகிடிவதை மாற்றமடைந்தது. இப்பகிடிவதை பேச்சு, உடல், பாலியல் ரீதியில் துன்புறுத்தும் ஒரு சேஷ்டையாக உருவானது. அத்தோடு வன்முறைகளுக்கு இட்டுச் செல்லப்படக் கூடிய ஒரு செயற்பாடாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது பகிடிவதை.
 
இந்நாட்டின் உயர்கல்வி வரலாற்றில் களனி பல்கலைக்கழகத்தில் மிக மோசமான பகிடிவதை 1974 இல் இடம்பெற்றுள்ளது. அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவாக நான்கு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். 12 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, மூன்று பேர் இடைநிறுத்தமும் செய்யப்பட்டனர். இந்நாட்டில் பகிடிவதைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை இது.
 
ஆனாலும் பகிடிவதை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில்தான் 1975 இல் பேராதனைப் பல்கலைக்கழக மாணவியொருவர் பகிடிவதையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் இராமநாதன் விடுதியின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதன் விளைவாக அவர் ஊனமுற்றார்.
 
அதேநேரம் பகிடிவதை காரணமாக றுஹுணு பல்கலைக்கழகத்தில் 1993 இல் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 1997 இல் இதே பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டார். இதே ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட முதலாம் வருட மாணவரான செல்வநாயகம் வரப்பிகாஷ் கடுமையான பகிடிவதைக்கு உள்ளானதால் சிறுநீரகச் செயலிழப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
 
இவ்வாறான நிலையில் பகிடிவதைக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு வெளிப்படலானது. குரூரத்தனமான இம்சிப்பாகவும் துன்புறுத்தலாகவும் இப்பகிடிவதை வளர்ச்சி பெற்று வருவதில் பரவலாகக் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு பகிடிவதை தொடருமாயின் இந்நாட்டின் உயர்கல்வி பாரிய பின்னடைவுக்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருந்தது. அத்தோடு அன்றைய சூழலில் பகிடிவதையைக் காரணம் காட்டி பல மாணவர்கள் உயர்கல்விக்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொண்டனர்.
 
இந்நிலையில் பகிடிவதையால் ஏற்பட்டுவரும் விளைவுகள் குறித்து விரிவான கவனம் செலுத்தப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலான வன்முறைகளை தடைசெய்யும் சட்டத்தின்படி பகிடிவதை ஒரு குற்றச்செயல் என அங்கீகரிக்கப்பட்டது. அத்தோடு இலங்கையிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இவற்றோடு சேர்த்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 919 ஆம் இலக்கச் சுற்றறிக்கைப்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறும் மாணவர் ஒவ்வொருவரும் பகிடிவதையைத் தொடங்கவோ தூண்டவோ செய்யவோ மாட்டேன் எனவும் பகிடிவதைக்கு உதவ மாட்டேன் எனவும் கட்டாயம் கையொப்பமிட வேண்டும். இந்த ஏற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது.
 
இவ்வாறான ஏற்பாடுகளின் விளைவாக அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெறுவது குறைவடைந்திருந்தாலும் அது முற்றாக ஒழிந்ததாக இல்லை. 1997 இல் அம்பாறை ஹார்டி உயர்தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் ஒருவர் பகிடிவதையால் உயிரிந்தமையும், 2002 இல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிரான கலந்துரையாடலை நடாத்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதும் அதற்கு பின்னரான இன்னும் பல சம்பவங்களும் நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
 
இவ்வாறான நிலையில் அண்மையில் மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. இவ்வருடம் (2022) றுஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் பிரவேசித்துள்ள மாணவர்களைப் பகிடிவதைக்கு உள்ளாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அப்பல்கலைக்கழகத்தில் 200 இற்கும் மேற்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. இதனை அப்பல்கலைக்கழத்தின் மருத்துவபீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹதுகொட கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
 
சட்டரீதியாக பகிடிவதை ஒரு குற்றச்செயலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது பல்கலைக்கழகங்களில் இன்னும் இடம்பெறுவதையே இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து வடிவிலான பகிடிவதைகளையும் துணைவேந்தர்களும் பணிப்பாளர்கள் குழுவினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். எந்தவொரு துணைவேந்தரும் பகிடிவதையினை ஏற்றுக்கொள்வதோ அல்லது ஆதரிப்பதோ அல்லது அதில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதோ இல்லை.
 
மர்லின் மரிக்கார்

Comments