மக்கள் வழங்கும் ஆதரவை ஆற்றில் கரைத்த புளியைப்போல கரைத்துவிடும் தமிழ் தலைமைகள் | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் வழங்கும் ஆதரவை ஆற்றில் கரைத்த புளியைப்போல கரைத்துவிடும் தமிழ் தலைமைகள்

“தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது? எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து இன்று வரை அது சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல. இருந்தாலும் அதைத்தானே தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்! இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டதால்தான் தமிழ்க்காங்கிரஸ் பிழைத்தது. இதை மிகப் பெரிய கெட்டிக்காரரான ஜீ.ஜீ. பொன்னம்பலமே புரிந்து கொண்டு செயற்பட்டார். இதன் விளைவாக உருவானதே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஜீ.ஜீ. பொன்னலம்பலத்துக்கு விளங்கியது குமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. அதனால்தான் அவர்கள் அதிதீவிரமாகச் சிந்திக்கிறார்கள். அதிதீவிரமாகச் சிந்திப்பது பிரச்சினையில்லை. அப்படிச் சிந்திக்கின்ற அளவுக்கு அவர்கள் அதிதீவிரமாகச் செயற்படவும் வேண்டும். ஆனால், அப்படியொன்றும் இல்லை. அப்படியான ஆட்களையே விட்டிட்டு தமிழரசுக் கட்சியை மட்டும் இலக்கு வைத்துத் தாக்குவதன் உள் நோக்கம் என்ன? ஒப்பிட்டளவில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் தமிழரசுக் கட்சியை இணக்கமாகத்தான் பார்க்கிறார்கள். மற்றக் கட்சிகளை விட தமிழரசுக் கட்சியோடுதான் முஸ்லிம்களுடன் உறவும் உண்டு. ஹக்கீமுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் உள்ள அரசியல் உறவையும் நெருக்கத்தையும் உலகமே அறியும். அதைப்போல சிங்களக் கட்சிகளும் அரசியலிலும் அரசியலுக்கு அப்பாலும் தமிழரசுக் கட்சியை ஒரு முக்கியமான தரப்பாகவே பார்க்கிறார்கள். இந்தளவுக்கு வேறு எந்தத் தமிழ்க்கட்சிக்கும் ஒரு முக்கியத்துவமும் கிடையாது. இதற்குக் காரணம், தமிழரசுக் கட்சியின் நிதானமான அரசியல் நிலைப்பாடுதான். நீங்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழரசுக் கட்சியோடு காங்கிரஸ் உறவு வைத்திருந்ததால் அது தப்பிப் பிழைத்தது. அதைப்போல இப்பொழுது ரெலோவும் புளொட்டும் உறவு வைத்திருக்கின்றன. அந்த உறவை ரெலோவும் புளொட்டும் கை விட்டால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு நடந்த கதைதான் நடக்கும். ஆகவே தமிழரசுக் கட்சியை ஒதுக்கி விட்டு யாரும் தனித்து நின்று ஜெயிக்க முடியாது. அன்றைய தந்தை செல்வா தொடக்கம் அமிர்தலிங்கம், இன்றைய சம்மந்தன் ஐயா வரை அனைவரிடத்திலும் காணப்படும் அரசியல் முதிர்ச்சியும் இதற்குக் காரணம். சம்மந்தன் ஐயாவைச் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவரை விட்டால் வேறு யார் நல்ல தலைவர் உண்டு? இதையெல்லாம் புரிந்து கொண்டு கருத்துச் சொல்லுங்கோ.அதுதான் நல்லது.” என்று என்னுடைய கடந்த வாரக் கட்டுரையைப் படித்து விட்டுத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.

“தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்?” எப்படி இருக்கும்? என்ற தலைப்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரைக்கான பதிலே அதுவாகும். அந்தக் கட்டுரையில் (கடந்த வாரம் அதைப் படிக்க முடியாதவர்களுக்காக) தமிழரசுக் கட்சின் கடந்த கால, நிகழ்காலத் தவறுகளைப் பேசி, அது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று எழுதியிருந்தேன். அதனுடைய பிரதிபலிப்புகள் தமிழரசுக் கட்சிக்குள்ளும் வெளியிலும் எதிரொலிக்கின்றன.

அரசியல் விருப்புகளும் தெரிவுகளும் எப்போதும் தனிநபர் விருப்பங்களோடு மட்டுப்பட்டிருப்பதில்லை. அதனுடைய செல்வாக்கும் தாக்கமும் பொதுவானது. அரசியலின் இயல்பும் குணமும் அதுவாகும். எனவேதான் அதைத் தனிநபர்களின் தெரிவு என்பதாகப் புரிந்து கொள்ள முடியாது எனப்படுவதுண்டு. அது ஒரு கூட்டுத்தீர்மானமாகப் பரிமாணம் கொள்வதால் அதனால் உண்டாகும் நன்மை தீமைகள் அனைவரையும் பாதிக்கும்.

தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவருக்கும் விருப்புக்களும் தெரிவுகளும் இருக்கலாம். அது அவர்களுடைய உரிமையும் சுதந்திரமும் கூட. ஆனால் அந்த விருப்பமும் தெரிவும் பரவலாக நிகழும்போது – திரட்சியடைந்திருக்கும்போது அது ஒரு கூட்டுத் தெரிவாகவும் தீர்மானமாகவும் மாறி விடுகிறது. அதுவே குறித்த தரப்பின் அரசியல் போக்காகவும் அடையாளமாகவும் மாறி விடுகிறது. இது அந்தத் தரப்பின் (மக்களின்) நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.

இதற்குப் பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தும். எதிர்த்தரப்பின் நடவடிக்கைகள். உரிய கட்சிகளின் கொள்கையும் நடைமுறைகளும். ஊடகங்களின் செயற்பாடும் ஆதரவும், பிரதேச ரீதியாக உள்ள இன, மத, சாதிய, பிரதேச, பால் ரீதியான அறிமுகங்களும் செல்வாக்கும், பிராந்திய, சர்வதேச சக்திகளின் தூண்டல்கள் அல்லது அமுக்கல்கள் எனப் பலவாக இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் அரசியற் பயணத்திலும் இதெல்லாம் உண்டு. சிங்கள அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறையை தமிழரசுக் கட்சி வலுவாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்பொழுதும் அதையே அது பயன்படுத்துகிறது. இதை அந்தக் கட்சியின் 60 ஆண்டுகளுக்கு மேலான பாராளுமன்ற வரலாறே நிரூபிக்கும். வேண்டுமானால் அந்தக் கட்சியைப் பிரதிநித்துவம் செய்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளே சான்று பகரும்.

தொடக்கத்தில் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை மையப்படுத்திப் பேசி வந்த தமிழரசுக் கட்சி, பின்னாளில் தமிழ் – சிங்கள முரண்பாட்டுவாதத்தில் சிக்கி விட்டது. இப்பொழுது அது தமிழ் – சிங்கள மோதலாகவும் சிங்கள வெறுப்புவாதமாகவும் சுருங்கி விட்டது. ஆகவே தமிழரசுக் கட்சி சுயமாக எதையும் சிந்திப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தரப்பிலிருந்தும் சிங்களத் தீவிரவாதத் தரப்பிலிருந்தும் வருகின்ற கருத்துகளுக்கு மறுப்புச் சொல்கின்ற – மறுத்தான் அரசியலையே செய்கிறது. இதைப்பற்றி நாம் பேசினால் அது தமிழரசுக் கட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளப்படுகிறது. தமிழரசுக் கட்சியினருடைய பார்வையில் அது தங்களை மட்டும் இலக்கு வைத்துத் தாக்கியதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

உண்மையில் தமிழரசுக் கட்சி அரசியல் ரீதியாக ஒரு செத்துப் போன பாம்பே. அதனால் எந்தச் சாதனைகளையும் நிகழ்த்த முடியாது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்றவையும் அவ்வாறானவையே. தமிழரசுக் கட்சி மீதான விமர்சனம் என்பது அதனுடைய அரசியலை வெவ்வேறு விதமாக முன்னெடுக்கின்ற ஏனைய தரப்புகளுக்கும் பொருந்தும். அவை எதற்கிடையிலும் எந்தப் பெரிய வித்தியாசங்களையும் காண முடியாது. குமுதம் பத்திரிகையில் வருகின்ற ஆறு வித்தியாசங்களில் கூட ஊன்றிக் கவனித்தால் சிறிய வித்தியாசங்களைக் காண முடியும். இவற்றில் நுணுக்குக் காட்டியை வைத்துப் பார்த்தாலும் வேறுபாடுகள் எதையும் காண முடியாது. அத்தனையும் ஒரே அரசியல் வியாபாரக் கம்பனிகளே!

எனவேதான் இந்த வணிகக் கம்பனிகளோடு இந்தியாவும் சர்வதேச சமூகமும் தென்னிலங்கையும் தமக்குத் தோதான வணிகப் பேச்சுகளை தமக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் மேற்கொள்கின்றன. தமக்குத் தேவையான விதத்தில் உறவையும் வைத்துக் கொள்கின்றன.

இதொன்றும் புதினமல்ல. இது பலரும் அறிந்த உண்மை. இனியும் இதுதான் நடக்கப் போகிறது. இதைச் சரியாகச் சொன்னால், இவை தமது மக்களுக்குச் சேவை செய்வதைவிட, தமது மக்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதை விட, தமது மக்களுடைய நலன்களைக் குறித்துச் சிந்திப்பதை விட பிறருக்கு லாபகரமாகவே சிந்திக்க முற்படுகின்றன. இதனால்தான் இவற்றினால் தமிழ் மக்கள் எந்த நன்மைகளையும் பெற முடியாமல் உள்ளது. இனியும் இதுதான் நடக்கும். தமிழ் மக்கள் எவ்வளவு ஆதரவைத் திரண்டு நின்று வழங்கினாலும் அதை ஆற்றில் புளியைக் கரைப்பதைப் போல கரைத்து விடுவர். பதிலாக அந்த ஆதரவைத் தமக்குரிய அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு தமக்கான பேரத்தைப் பேசி முடித்து விடுவர்.

இதனால்தான் மக்கள் மேலும் மேலும் பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரச்சினைகளின் மேல் பிரச்சினைகள். சுமைகளின் மேல் சுமைகள் எனச் சுமைகாவிகளாகி நிற்கின்றனர். காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, உடல் உறுப்புகளை இழந்த நிலையிலான பிரச்சினை, உளநிலை பாதிக்கப்பட்ட பிரச்சினை, உறவுகளை இழந்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினை, நிலத்தைப் பறி கொடுத்ததால் சந்தித்துள்ள பிரச்சினை, தொழில் வாய்ப்பையும் வருவாயையும் இழந்ததால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, வளங்களையும் வாழ்நிலையையும் இழந்ததால் உருவாகியுள்ள பிரச்சினை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள்.

தலைவர்களோ இந்தப் பிரச்சினைகளைப் பேசிப் பேசியே தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்றனர். எந்தத் தலைவரும் எந்தப் பிரதிநிதியும் மக்களோடு சேர்ந்து வாழ்வதேயில்லை. அவர்கள் வேறு. தாம் வேறு என்ற பிரிகோட்டினைப் பக்குவமாக வைத்துக் கொண்டே செயற்படுகின்றனர். இதனால்தான் இந்த அரசியல் மக்கள் அரசியலாக இல்லாமல் பிரமுகர் அரசியலாக உள்ளது.

கருணாகரன்

Comments