"அப்பா என்று குரல் கேட்ட மறுகணமே மகள் துப்பாக்கி சன்னங்கள் துளைத்து அசைவற்று விழுந்து கிடந்தாள்" | தினகரன் வாரமஞ்சரி

"அப்பா என்று குரல் கேட்ட மறுகணமே மகள் துப்பாக்கி சன்னங்கள் துளைத்து அசைவற்று விழுந்து கிடந்தாள்"

 

நெடுங்கேணியில் கொல்லப்பட்ட யுவதியின் தந்தையின் வாக்குமுலம்

 

அன்று இரவு 8.30 மணி இருக்கும், பிருந்தாமலர் தான் அன்று இறக்கப்போவது தெரியாமல் வழமைபோன்றே பல கனவுகளுடன் உறங்க தயாரானார். உறங்க முன்னர் வௌியே ஏதோ சத்தம் கேட்கவே அவசரமாக வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார். "அப்பா" என்று அவலக் குரல் எழுப்பினார். அவ்வளவுதான் அடியற்ற மரம்போல் இரத்தம் பெருக்கடுக்க கீழே சாய்ந்தார். வவுனியா நெடுக்ேகணியை உலுக்கிய யுவதியின் கொலைச் சம்பவம் வவுனியா எங்குமே பீதி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெடுங்கேணி சிவா நகர் கிராம மக்கள், பொலிஸார், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான யுவதியின் தந்தை ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டே இக் கொலைச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் பகிரப்படுகின்றன.

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி பகுதியில் சிவா நகர் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட் கூலி வேலை, காடுகளுக்கு சென்றும் வருமானம் தேடல், விவசாயம், வீட்டுத்தோட்டம் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது. அத்தகைய கடினமான போராட்டத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்கின்ற நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் எல்லோரையும் நிலைகுலைய வைத்திருக்கின்றது.

வவுனியா, நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் சிதம்பரப்பிள்ளை துரைராஜசிங்கம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தந்தை ஓய்வு பெற்ற தபால் ஊழியர். தாய் மரணமடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. குடும்பத்தில் பிள்ளைகள் எட்டுப்பேர். அதில் ஒரு சகோதரர் வாகன விபத்திலும், இன்னுமொரு சகோதரர் யுத்தத்திலும் இறந்துவிட்டார்கள். ஏனைய சகோதரர்கள் திருமணமாகி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். மரணமடைந்த இளம் யுவதிதான் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அந்த யுவதிதான் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினார்.

யுவதியை சுட்டுக்ெகாலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யுவதியின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசிக்க கடந்த நான்கு மாதங்களுக்கு குடிவந்ததாகவும், மரணமடைந்த யுவதியின் குடும்பத்துக்கும், சந்தேக நபருக்கும் ஏற்பட்ட தகராறினால் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாடகைக்கு குடியிருப்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சேமமடுவை சேர்ந்த 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பிருந்தாமலர் என்ற யுவதி தனது 21ஆவது பிறந்ததினத்தை சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற தினத்துக்கு முதல்நாள் தனது தந்தையாருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். மறுநாள் இரவு தனது வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து வெளியே வரும்போது (சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்றதனை கண்டு தனது தந்தையை அழைத்துள்ளார். அழைத்த அடுத்த கணமே, துப்பாக்கிச்சூட்டு சத்தமும் கேட்டுள்ளது. தந்தை மகளின் அலறலையும், துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்டு பதறியடித்து வெளியே போய்ப் பார்க்கையில், மகள் துப்பாக்கி சன்னங்கள் துளைத்து குருதிவழிந்த நிலையில் அசைவற்று விழுந்து கிடப்பதனை கண்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவ இடத்தினை பார்வையிட்டதோடு மரணமடைந்த யுவதியின் தந்தையிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே பல விடயங்கள் வெளிவந்தன.

கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபருக்கும், குறித்த யுவதியின் குடும்பத்தாருக்கும் இடையே சில மாதத்திற்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. கொலைச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் யுவதியின் தொலைபேசியை சந்தேகநபர் பறித்து உடைத்திருக்கிறார். கோபமடைந்த யுவது இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளார். அதன்பின்னர் சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து வௌியேறி வேறு பகுதியில் வாடகைக்கு குடியமர்ந்துள்ளார்.

சந்தேகநபர் யுவதியின் வீட்டிற்கு வந்து பயிற்றங்காய் பிடுங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளளார். அவ்வாறு அன்றையதினம் பயிற்றங்காய் பறிக்க வந்தபோதே யுவதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு யுவதியின் தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் காதல் விவகாரம் எனச் சிலரும், குடும்பத் தகராறு, முன்விரோதம் எனவும் ஒவ்வொரு கோணத்தில் சிவா நகர் கிராம மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் தற்போது வசிக்கும் வீட்டில் குற்றவியல் தடய பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடாத்திய போது கைத் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் வியாழக்கிழமை (20.10.2022) அன்று நீதிமன்றில் முற்படுத்திய போது 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியின் தந்தை மேலும் கருத்துக் கூறுகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்று போதையில் இருந்ததாகவும், போதையிலேயே தமது வீட்டிற்கு வந்து பயிற்றங்காய் ஆய்ந்து சென்றதாகவும் கூறியிருந்தார்.

தமக்குள் வேறொரு பிரச்சினையும் இல்லை எனவும், உயிரிழந்த மகளின் தொலைபேசியினை சந்தேகநபர் பறித்து உடைத்ததாகவும், மகள் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். சந்தேக நபரிடம் இருந்து தொலைபேசி மற்றும் 5500 வாடகைப்பணம் என்பனவற்றை தனது மகள் பெற்றதாகவும், அந்தப் பணத்திலேயே தனது மகள் தனது பிறந்த தினத்தை கொண்டாடியதாகவும் தந்தை கூறினார்.

கடந்த சில வருடங்களில் தமது இரண்டு மகன்களை இழந்து, பின்னர் தனது மனைவியை இழந்து விட்டதாகக் கூறிய அவர் தற்போது தனது செல்ல மகளையும் இழந்துவிட்டதாக கதறியழுதார்.

யுவதியின் தந்தை அளித்த வாக்கு மூலத்தினையும், தொலைபேசி தகவல்கள் மற்றும் சந்தேகநபர் குடியிருந்த வீட்டில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் என்பனவற்றைக் கொண்டு உண்மையான குற்றவாளி யார் என்பதனை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரை இழந்தால் திரும்பப்பெற முடியாது. உயிருக்கு விலைமதிப்பில்லை என்பார்கள் ஆனால் இன்றைய போதையுலகில் மனித உயிரை மனிதனே பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றோம்.

எமது நாடு பொருளாதார நெருக்கடியால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் கொலை, கொள்ளை, போன்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற வடக்கு மாகாணத்திலே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. இதற்கு இந்த கொலைச்சம்பவமும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

பாலநாதன் சதீஸ்

Comments