அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சபையில் மீண்டும் உறுதிப்படுத்திய இரு நிகழ்வுகள்! | தினகரன் வாரமஞ்சரி

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சபையில் மீண்டும் உறுதிப்படுத்திய இரு நிகழ்வுகள்!

புதிய பிரதமர் பதவியேற்றதைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றிய நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியது.

புதிய பிரதமர் பதவியேற்றதைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றிய நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியது.

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் பிரச்சினைக்குப் பாராளுமன்றத்தில் ஊடாகத் தீர்வொன்றைப் பெறுவதற்கு முயற்சிப்பார்கள் என்ற சிறியதொரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்பட்டது. இருந்தபோதும் நான்காவது பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான உறுதியான தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாமை மக்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராகவிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமாச் செய்திருந்தார். அவர் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியைத் தொடர்ந்து அப்பதவியை ஒரே நாளிலேயே இராஜினாமாச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் வெற்றிடமாகியுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்குப் புதியவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியது.

குறித்த பதவிக்குப் பெண் உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறான பின்னணியில் தமது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியதும் பிரதி சபாநாயர் பதவிக்கான பெயர்களைப் பரிந்துரைக்குமாறு சபாநாயகர் கோரினார்.

இதற்கமைய ரோஹினி விஜேரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார். மறுபக்கத்தில் ஆளும் கட்சி சார்பில் அஜித் ராஜபக்ஷவின் பெயரை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் முன்மொழிந்தார்.

இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பை நடத்தி மக்கள் பணத்தை வீணாக்குவது மாத்திரமன்றி மக்களின் விசனத்தையும் சம்பாதித்துக் கொள்ளாது பிரதமரின் பரிந்துரைக்கு அமைய பெண் உறுப்பினரைப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என விமல் வீரசன்ச, மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தமது கோரிக்கையையும் மீறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் செல்லுபடியற்ற வாக்குகளாகப் பதிவு செய்வோம் என அவர்கள் கூறியிருந்தனர். இருந்தபோதும் இரு தரப்பும் இதற்கு இணங்காதமையால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் அஜித் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 109வாக்குகளும், ரோஹினி விஜேரத்னவுக்கு ஆதரவாக 78வாக்குகளும் பதிவாகியிருந்தன. 31மேலதிக வாக்குகளால் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதமர் முன்வைத்த கோரிக்கையைக் கூட நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியினர் தயாராக இல்லையென்பதை இந்த வாக்கெடுப்பு முடிவுகள் எடுத்துக் காட்டியிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். அத்துடன், பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் தம்மிடம் இன்னமும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உள்ளது என்பதைக் காண்பிக்கும் நோக்கில் இதனைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில், அன்றைய தினம் பாராளுமன்றத்தில் மற்றுமொரு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அதாவது ஜனாதிபதி மீது அதிருப்தியைத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட விசேட பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நிலையியற் கட்டளைகளை ஒத்திவைப்பதா இல்லையா என்பது குறித்ததே அந்த வாக்கெடுப்பாகும்.

இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார். இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுமந்திரனின் பிரேரணைக்கு எதிராக 119வாக்குகளும், ஆதரவாக 68வாக்குகளும் பதிவாகியிருந்தன.

அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும் கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமல் போனதன் மீதான பாராளுமன்றத்தின் அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை எதிர்க்கட்சி முன்வைத்திருந்தது. குறித்த பிரேரணை ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின்னரே அதனை விவாதிக்க முடியும்.

இருந்தபோதும் ஐந்து நாட்கள் பூர்த்தியடையாமையால் நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைத்து அதனை விவாதத்துக்கு எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இருந்தபோதும் ஆளும் கட்சியினர் இதனை எதிர்த்தமையால் குறித்த விடயத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளாட்சி மன்ற அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை குறித்து சபை ஒத்திவைப்பு விவாதம் நான்கு நாட்கள் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணயில் உள்ளவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தினர். இந்த வன்முறைகளின் பின்னணியில் ஜே.வி.பியினர் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இருந்தபோதும் இதனை மறுத்த ஜே.வி.பியினர் வன்முறைகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி அனைவரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதேநேரம், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்காது தமக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இழப்புக்கள் குறித்தே அரசியல்வாதிகள் அதிக அக்கறை காண்பிக்கின்றனர் என்றும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை துரதிஷ்டமானதாகும்.

பி.ஹர்ஷன்

Comments