யுத்தம் ஓய்ந்த பின்னரும் முடிவின்றி தொடரும் இனவாத விமர்சனங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

யுத்தம் ஓய்ந்த பின்னரும் முடிவின்றி தொடரும் இனவாத விமர்சனங்கள்!

இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலக நாடுகளின் பிரதிநிதிகள்விசேட தூதுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். இந்நாட்டின்அண்மைக்கால வரலாற்றில் அவ்வாறு பணியாற்றிய விசேடவெளிநாட்டுத் தூதுவர்களில் நோர்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம், ஜப்பானைச் சேர்ந்த யசூசி அகாசி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

குறிப்பாக எல்.ரி.ரி.ஈயினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற போது இரு தரப்புக்கும் இடையில் யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவந்து, சமாதானப் பேச்சுக்களை நடத்துவதில் விசேட தூதுவராகப் பணியாற்றியவர் எரிக் சோல்ஹெய்ம்.

பாதுகாப்புப் படைகள் மற்றும் புலிகள் தரப்புகளுக்கு இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியிருந்த அவர், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்த தன்னாலான முயற்சிகளை நேர்மையான முறையில் எடுத்திருந்தார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினருடனும் முன்கூட்டியே அறிமுகமான ஒருவர், ஒரு தசாப்தத்துக்கு மேலான காலத்தின் பின்னர் மீண்டும் இலங்கையின் விசேட பிரதிநிதியாகச் செயற்பட முன்வந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சோல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த விடயத்தில் இலங்கை மோசமான நிலையில் இருப்பதாகவும், காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இதன் ஒரு கட்டமாகவே எரிக் சோல்ஹேய்ம் அவருடைய சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு பசுமையான பாதையைக் கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் அவருடைய குழுவினருடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக எரிக் சோல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் சவால்களுக்கு எதிர்கொடுத்துள்ள நிலையில் காலநிலை மாற்றமும் நிலைமைகளை மோசமாக்குவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனை சர்வதேச நாணய நிதியமும் எச்சரித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியின் இந்த நியமனம் முக்கியமானதொன்றாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

எரிக் சோல்ஹேய்ம் நோர்வே நாட்டின் அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவி உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் பதவிகளை வகித்த அனுபவம் கொண்ட ஒருவர். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுடன் முன்னறிமுகம் உள்ளவர் என்பதால் காலநிலை மாற்றம் மற்றும் பொருளதார நெருக்கடி போன்ற விடயங்களில் இலங்கைக்கு உதவக் கூடியவராக இருக்கின்றார்.

இவர் ஏற்கனவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இது இவ்விதமிருக்க, எரிக் சோல்ஹெய்மின் நியனம் உள்ளிட்ட விடயங்களை எதிர்ப்பவர்களும் இலங்கையில் இருக்கின்றனர். கடந்த காலத்தில் சமாதான முயற்சிகள் மீது விமர்சனங்களை முன்வைத்த தரப்பினர் தற்போதும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் பின்னணியில், கடந்தகால சமாதானப் பேச்சுக்களில் விசேட பிரதிநிதியாக இருந்த எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளார். இலங்கையைப் பொறுத்த வரையில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து அல்லது அவற்றின் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய தேவைப்பாடு இருப்பதால் இதுபோன்ற சர்வதேச பிரதிநிநிதிகள் பல்வேறு மட்டங்களில் உதவுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது.

மறுபக்கத்தில் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்துவாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் சிலர் தமது சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்குப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதானது பயங்கரவாத அமைப்பை மீண்டும் பலப்படுத்துவதாக அமைந்துவிடும் என இனவாதரீதியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பேரிலேயே சோல்ஹெய்ம் இலங்கை வந்திருப்பதாகவும் சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு முன்வைக்கப்படும் கருத்துக்களில் எவ்விதமான அடிப்படைகளோ, ஆதாரங்களோ இல்லை. இந்தச் செய்திகளை ஒரு சில ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து அரசியலுக்கான கருத்தாடல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

இருந்தபோதும், கடந்தகாலத்தில் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் நம்பிக்கையீனங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை போன்ற சர்வதேச அரங்குகளுக்குச் சென்று தீர்க்க வேண்டிய தேவைப்பாடு இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜெனீவா செல்லத் தேவையில்லை. இலங்கைக்கு வந்து வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு அனைவரும் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

கடந்தகால கசப்பான அனுபவங்களை நிவர்த்தி செய்வதற்கு உண்மையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல்களே அவசியம். அதேநேரம் கடந்த கால நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான நம்பிக்கை கட்டியெழுப்பப்படவும் வேண்டும். இதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பி.ஹர்ஷன்

Comments