ஒரு வீட்டுத்தோட்டத்தில் காணப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு வீட்டுத்தோட்டத்தில் காணப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்

வீட்டுத் தோட்டம் என்பது நாம் வாழும் வீட்டைச் சூழவுள்ள சுற்றாடல் ஆகும். குடும்பத்தவர்களின் கூட்டு உழைப்புடன் வீட்டைச் சூழ உள்ள நிலப்பகுதியை எமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய வகையில் நுகர்வுக்குப்  பொருத்தமான ஓர் அலகாக மாற்றுவதே வீட்டுத் தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். நமது வீட்டைச் சூழவுள்ள நிலத்தை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்தி அதன் மூலம் உணவுப் பாதுகாப்பும், போசணைச்சத்துக்களின் பன்முகத்தன்மையும் கிடைக்கக்கூடிய வகையில் ஆண்டு முழுவதும் பயிரிடுவதற்காக வீட்டுத் தோட்டங்களிற்கான பயிர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இன்றைய தொடரில் சற்று அதிகளவான நிலப்பகுதியைக் கொண்ட வீட்டுத்தோட்டங்களில் காணப்பட வேண்டிய முக்கிய அம்சங்களைக்  கவனிப்போம். எனினும் சிறியளவான பிரதேசத்தில் நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பயிரிடலாம் என்பதை பின்னர் விரிவாக ஆராய்வோம்.

ஒரு வீட்டுத்தோட்டமொன்றில் காணப்பட வேண்டிய பல்வேறு அம்சங்களைத் திட்டமிடும்போது  கிடைக்கக் கூடியதாக உள்ள இடம், கிடைக்கும் சூரிய ஒளி, குடும்பத்தினரின் விருப்பு, காலநிலை, பயிர்ச்செய்கைப் போகம், நீர் வசதி ஆகியன கிடைக்குமா என்பது தொடர்பாகக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

குறைந்த பராமரிப்பின் கீழ் பயிரிடக் கூடிய பயிர்கள்,  வீட்டுத்தோட்டத்தில்    நிலைத்திருக்கும் தன்மையை பேணக்கூடிய முறையில் பயிர்களைத் தெரிவு செய்தல், ஏனைய அம்சங்களை சேர்த்துக் கொள்ளல் ஆகியவற்றைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதேபோன்று  தரைத்தோற்ற அலங்கார முறைகளைப் பயன்படுத்தி இப்பயிர்களையும், அங்கங்களையும் ஸ்தாபிப்பது வீட்டுத்தோட்டத்தின் அழகை மேம்படுத்தும்.

போசணைப் பாதுகாப்பிற்கு வித்தியாசமான வண்ணங்களைக் கொண்ட பயிர்கள் ஒன்று சேரக்கூடிய வகையில் அவற்றைத் தெரிவு செய்வதன் மூலம்  வீட்டுத்தோட்டச் சூழலை மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக மாற்ற முடியும். பீடைக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகளைப் பாதுகாக்கவும்,  அவற்றைத் தோட்டத்தை நோக்கி கவர்வதற்கும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

மரக்கறிகள்

ஒரு வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர் வகைகளில் ஒன்று மரக்கறி. தோட்டத்தில் சூரிய ஒளி கிடைக்கும் தன்மை, நீரைப் பிடித்து வைத்திருக்கும் தன்மை போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப மரக்கறிகளை நிலத்தில் நட வேண்டும். இங்கு பெரும் நிலப்பரப்பில் ஒரு மரக்கறியை பயிரிடுவதற்குப் பதிலாக, அதிக எண்ணிக்கையான மரக்கறிகளை சிறியளவான பரப்பில் பயிரிடுவதன் மூலம்  பல்லினமான போசணைகள் கிடைப்பதோடு, அதிக சுவையுடன் குடும்பத்தவர்களின் நுகர்விற்கு வீட்டுத் தோட்டத்தின் உற்பத்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இங்கு ஒரு மரக்கறியில் குறைந்தது 5 ,- 6செடிகள் இருந்தாலே போதுமானதாகும்.

மரக்கறிப் பயிர்களைத் தெரிவு செய்யும் போது, பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

 காலநிலைக்கு ஏற்ப மரக்கறிகளைத் தெரிவுசெய்தல்.

 இலகுவாகப் பயிரிடக் கூடியதாயிருத்தல்.

 நோய், பீடைகளைத் தாங்கி வளரும் தன்மை.

 குடும்ப சுவைக்கு  பொருத்தமான பயிர்கள்.

 போசணை பன்முகத்தன்மை.

 குறைந்த பராமரிப்பு நடவடிக்கைகள்.

 நீண்ட காலத்திற்கு அறுவடை செய்யக் கூடியதாயிருத்தல்.

 கிடைக்கும் இடத்திற்கு ஏற்ப பொருத்தமான மரக்கறிகளைத் தெரிவு செய்தல். 

 தோட்டத்திற்கு சூரிய ஒளி  கிடைத்தல், நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்கள்.

போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப பயிர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

மரக்கறிகளைப் பொறுத்த வரை இயலுமான வரை உள்நாட்டு வர்க்கங்களை நடுவது மிகவும் நல்லதாகும். நீங்கள் கடைகளில் விதைகளை வாங்கும் போது சிலவேளைகளில் கலப்பின வர்க்கங்களை வாங்க நேரிடும். அவை எமது வீட்டுத்தோட்டங்களுக்ககு உகந்தனவல்ல.

ஆனால் வர்த்தகப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பெரும்பாலான மரக்கறிகளில் ஏராளமான பல்லினத்தன்மை காணப்படுகின்றது. உதாரணமாக கத்தரி, தக்காளி, வெண்டி போன்றவற்றில் அதிகளவான வேறுபாடுகளை நீங்கள் காண முடியும். அவை தோற்றம், சுவை, நிறம் என பல்லினத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே இவற்றை நடுவதன் மூலம் உங்கள் சுவைக்கு ஏற்ற, காலநிலைக்கேற்ற உள்நாட்டு அதாவது தேசிய வர்க்கங்களை நடல் வேண்டும்.

கீரைகள்

ஒரு வேளை நிறையுணவிற்கு ஒரு கீரை வகையேனும் காணப்பட வேண்டியது இன்றிமையாததாகும். பொன்னாங்காணி, கங்குன், பசளிக் கீரை, வல்லாரை, முளைக்கீரை (சிறுகீரை), அகத்தி ஆகியவற்றை இலகுவாகப் பயிரிடக் கூடிய கீரைகளாக கருத முடியும்.

இவற்றிற்கு மேலதிகமாக இயற்கையாகவே வளரும் கீரைகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்லினத் தன்மை கொண்ட ஒரு  உணவு வேளையை ஆயத்தம் செய்து கொள்ள முடியும். உதாரணமாக குறிஞ்சா, பால் குறிஞ்சா,  தெபு, முடக்கொத்தான், கொவ்வை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.  ஏனைய சில பயிர்களின் இலைகளையும் கீரைகளாகப்  பயன்படுத்தலாம். உதாரணமாக மரவள்ளி, முருங்கைப் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

பழங்கள்

தோட்டத்தில் கிடைக்கக் கூடிய இடத்திற்கு ஏற்ப பழங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.  விசாலமான ஒரு தோட்டத்திற்கு நீங்கள் ஒரு பெரிய விதானத்தைக் கொண்ட பழத் தாவரத்தை தெரிவு செய்யலாம். வருடம் முழுவதும் விளைச்சல் தரும் பழ வகைகளைச் சேர்ப்பது குறைந்த இடவசதியுள்ள வீட்டுத்தோட்டத்திற்கு ஏற்றது. குட்டை அம்பரெல்லா, அன்னாசி, கொய்யா, வாழை, கொடித்தோடை காலநிலைக்கு ஏற்ற வர்க்கங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

 மா – கறுத்த கொழும்பான் (உலர் வலயத்திற்கு ஏற்றது,  ஆனால் ஈர வலயத்திற்கு     ஏற்றதல்ல)

  வாழை – கோழிக் கூட்டு   (உலர் வலயத்திற்கு மிகப் பொருத்தமானது)

இடவசதி குறைவான தோட்டத்திற்கு சாடிகளில் பழங்களைப் பயிரிடலாம். இங்கு சுமார் 2 x 2  அடி அளவுள்ள சாடிகளில் பயிரிடலாம்.  தரையில் பயிரிட முடியாத நன்கு சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் சாடிகளில் பழங்களைப் பயிரிடலாம். 

மறு வயற் பயிர்கள்

சோளம், பாசிப்பயறு, கௌபீ, உழுந்து, எள்ளு, குரக்கன், இறுங்கு போன்ற பயிர்கள் உலர் வலயத்தின் வீட்டுத்தோட்டங்களிற்கு ஏற்றவை. காணப்படும் இடம், காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து, இந்த பயிர்களை தோட்டத்தில் பயிரிடலாம். போசணை பன்முகத்தன்மைக்கும்,  உணவு பாதுகாப்பிற்கும் முக்கியமானது.

சரக்குப் பயிர்கள்

மிளகாய், மிளகு, சின்ன வெங்காயம், மஞ்சள், இஞ்சி, ரம்பை, கறிவேப்பிலை போன்ற பயிர்கள் தோட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய முக்கியமான சரக்குப் பயிர்கள் ஆகும்.

மூலிகைகள்

தினசரி கை மருந்தாகப் பயன்படுத்தத் தேவையான செடிகளை நீங்கள் நடுகை செய்யலாம்.

தேங்காய்ப்பூக் கீரை, கற்றாழை, இஞ்சி, மஞ்சள், திப்பிலி, ஹதாவரியா, நீரமுல்லி

கிழங்குப் பயிர்கள்

மரவள்ளி, வற்றாளை, சேம்பு, குட்டிக் கிழங்கு, கொடிக் கிழங்கு போன்றவற்றைச்  சேர்க்க வேண்டும். குறைந்த பராமரிப்பின் கீழ் பயிரிடக் கூடியதாக உள்ளதோடு, உணவுப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

மலர்ச் செய்கை  

தோட்டத்திற்கு அழகை வழங்க பூக்களையும், அலங்கார செடிகளையும் சேர்க்கலாம். அந்தூரியம், ஓர்கிட், அலங்கார தாவரங்கள் ஆகியவற்றை இயற்கையாக நிழலில் பயிரிடலாம். நீங்கள் கூடுதல் வருமானத்தையும் ஈட்டலாம்.

வேறு பயிர்கள்

தென்னை, கமுகு, வெற்றிலை போன்ற பயனுள்ள பயிர்கள், அதே போல் இடம் காணப்படுமாயின் அரி மரங்களை எல்லைக்கு அருகில் நட முடியும்.

கால்நடை வளர்ப்பு

குடும்ப புரதத் தேவையைப் பூர்த்தி செய்ய பால், முட்டை  ஆகியன முக்கியமாகும். சேதன உரங்களை உற்பத்தி செய்வதற்கு கால்நடைக் கழிவுகள் முக்கியமானவையாகும். இட வசதி, சுற்றாடல் நிலைமைகள், மனிதவளம்,  விலங்கு தீவனம்  ஆகியவற்றில்  கால்நடை வளர்ப்பு  தங்கியுள்ளது. மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காடை, ஆடு வளர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ள  முடியும்.

காளான் பயிர்ச்செய்கை

கூடுதல் வருமானம் தரும் ஒரு வழியாகும்.  வீட்டுத்தோட்டத்திலேயே சிறியதொரு கொட்டிலை  அமைத்து அதில் காளான் வளர்ப்பை மேற்கொள்ள  முடியும்.  இதற்காக  வைக்கோல் அல்லது மரத்தூளைப் பயன்படுத்தலாம். குடும்ப உழைப்பையும் பயன்படுத்தலாம். 

அலங்கார மீன் வளர்ப்பு

மேலதிக வருமானம் தரும் ஒரு வழியாகும்.  வீட்டுத்தோட்டத்தில் ஆயத்தம் செய்யப்பட்டத் தொட்டிகளில் வளர்க்கலாம்.

சேதன உர அலகு

வீட்டுத்தோட்டச் செய்கையானது முக்கியமாக சேதன உரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், ஒரு  சேதன உர அலகை வைத்திருப்பது முக்கியம். இதன் மூலம் வீட்டிலும், தோட்டத்திலும் சேரும் சிதைவடையக் கூடிய கழிவுகளை சேதன உரங்களாகப் பயன்படுத்தலாம்.

மண்ணிற்கு சேதன உரங்களை தொடர்ந்து  இடுவதால்  மண்  நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுவதோடு, போசணைகளும் நீண்ட காலத்திற்கு மண்ணில் பிடித்து வைத்திருக்கப்படும். 

வீட்டுத்தோட்டத்திலுள்ள இடவசதி, காலநிலை ஆகியவற்றிற்கு அமைய  பொருத்தமானதொரு  முறையைப் பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதில் குவியல் முறை, குழி முறை, தடிகளினால் கூடுகளை அமைத்து கூட்டெரு தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதற்கு மேலதிகமாக மண்புழு திரவப் பசளையையும் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

நாற்றுமேடை அலகு

ஒரு நிலைபேறான வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதற்கும், தொடர்ச்சியாக பயிர்ச் செய்கையைப் பராமரிப்பதற்கும் நாற்றுமேடை அலகைப் பராமரிப்பது முக்கியமாகும். தொடர்ச்சியான விளைச்சலுக்காக ஒரு வீட்டுத் தோட்டத்தைத் திட்டமிடும்போது, ஒரு பயிரை  தோட்டத்திலிருந்து அறுவடை செய்யும் போது இன்னொரு பயிரை நடக் கூடியதாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.  நீர் நன்கு வடிந்தோடக் கூடிய, நன்கு சூரிய வெளிச்சம் விழக் கூடிய இடமொன்றை இதற்காக தெரிவு செய்ய வேண்டும்.

சீரங்கன் பெரியசாமி
ஓய்வுநிலை பணிப்பாளர்,
விவசாயத் திணைக்களம்

Comments