தொடரும் சீரற்ற காலநிலை; நாட்டைப் புரட்டிப் போட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் | தினகரன் வாரமஞ்சரி

தொடரும் சீரற்ற காலநிலை; நாட்டைப் புரட்டிப் போட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள்

இருவர் பலி, 11மாவட்டங்களில் 22ஆயிரம் பேர் பாதிப்பு

கடும் மழை, மண் சரிவு,வெள்ளம், கடும் காற்று மின்னல் தாக்கம் என சில தினங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் பாதிப்புகள் நாட்டின் பல பிரதேசங்களை   புரட்டிப் போட்டு விட்டது.

குறிப்பாக மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம்  என ஏழு மாகாணங்கள் இந்த பாதிப்புக்குள் அகப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தங்களில் இரண்டு மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளன. வீடுகள் சேதம், சொத்துக்கள் சேதம், மக்கள் இடம்பெயர்வு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின் படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் இந்த இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில தினங்கள் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை 11மாவட்டங்களைச் சேர்ந்த 5212குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த குடும்பங்களில் உள்ள சுமார் 22, 000பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 64குடும்பங்களைச் சேர்ந்த 264பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்தும் மேலும் 117வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் உள்ளதுடன் கம்பஹா மாவட்டத்திலேயே கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மாவட்டத்தில் 4,608குடும்பங்களைச் சேர்ந்த 19ஆயிரத்து 585பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பு நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடரும் என்றும் இடியுடன் கூடிய மழையும் சில மாவட்டங்களில் 100மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழையாகப் பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இத்தகைய மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடரும் என கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அனர்த்தங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வானிலை அவதான நிலையங்கள் மக்களை அறிவுறுத்தி வருவதுடன் இயற்கை அனர்த்துங்களினால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  அறிவுறுத்தியுள்ளன.

இந்த பாதிப்புகளின் உச்சமாக நேற்று முன்தினம் வரக்காப்பொல பகுதியில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அது அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரக்காப்பொல  கும்பலியத்த பிரதேசத்தில் மண்மேடொன்று இரண்டு மாடி வீடு ஒன்றின் மீது சரிந்து வீழ்ந்ததில் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 47வயது தாயும் 24வயதுடைய மகனும் இவ்வாறு பலியாகியுள்ளனர்

மண் சரிவில் சிக்குண்ட மூன்று பேரில் ஒருவர் மாத்திரம் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏனைய இருவரையும் உயிரோடு மீட்டெடுப்பதற்கு மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர், பொலிசார் மற்றும் பிரதேச மக்களினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஒரு நாள் கழித்து நேற்றைய தினம் அவர்களின் சடலங்களையே அவர்களால் மீட்க முடிந்தது.

உயிரோடு மீட்கப்பட்டவர் 51வயதுடைய குடும்பத்தின் தந்தை என்றும் அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ​ெடாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அந்த குடும்பத்தின் இளைய மகனான பத்து வயதுடைய சிறுவன் மேலதிகநேர வகுப்புக்குச் சென்றிருந்ததால் இந்த அனர்த்தத்தில் இருந்து தப்பியுள்ளார்.

அவர் தமது தந்தை, தாய், சகோதரனையும் இழந்து வீட்டையும் இழந்து இப்போது அவரது நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பது மேலும் கவலையளிப்பதாக உள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல்களை வெளியிட்டது. கடும் மழை, மண் சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என்றும் அந்த நிலையம் கேட்டுக் கொண்டது. அத்துடன் வெள்ளம் காரணமாக பியகம, மல்வானை பெலும்மஹர பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

களனி கங்கை, களுகங்கை அத்தனகலுஓயா, ஆகியவற்றின் நீர்மட்டங்கள் அதிகரித்து காணப்படுவதால் அதனை அண்டியுள்ள பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அப்பகுதிகளில் கணிசமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளரான பொறியியலாளர் எஸ். பி. சி .சுகீஸ்வர தெரிவித்துள்ளார். அதனையடுத்து மீரிகம அத்தனகல்ல, மகர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலைப்பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையையும் அந்த திணைக்களம் விடூத்துள்ளது.

எவ்வாறெனினும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக அன்றாடம் தொழிலுக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்ததுடன் சேரிப்புறங்களில் குறைந்த வசதியுடனான குடியிருப்புகளில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.தொடர்ந்து மழை இல்லாமல் வறட்சியினால் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெய்வங்களை வேண்டி மழையை தருவிப்பதும் இந்த நாட்டில் அடிக்கடி நிகழ்வது

ஆனால் மழை பெய்ய ஆரம்பித்தாலும் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு பல உயிர்களையும் காவு கொண்டு விட்டுச் செல்கின்ற நிலையையும் அடிக்கடி காண்கிறோம்.

இவ்வாறான கடும் மழை நாட்டில் பெய்யும் போதெல்லாம் அது பெரும் அழிவுகளையே தந்திருக்கின்றது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments