அரசியல் ரீதியில் ஒற்றுமை இன்றேல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வே இல்லை! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் ரீதியில் ஒற்றுமை இன்றேல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வே இல்லை!

சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான 22 ஆவது திருத்தச் சட்டம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் 21 தடவை திருத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாயின் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்து பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்கள் கோரி வருகின்ற அரசியல் உரிமை கோரும் பிரச்சினைக்குப் புதிய அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்து தமிழர் தரப்பினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வழங்கியுள்ள இந்த உறுதிமொழியை வரவேற்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த அவர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தாம் பங்குபற்றியிருந்ததாகவும், அரசியலமைப்புத் தயாரிப்புக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்பட்ட போதும், இடைநடுவில் அப்பணிகள் கைவிடப்பட்டிருந்ததாகவும் சுமந்திரன் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதைப் போன்று புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறான முயற்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்திருந்தார்.

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதாயின் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியமானதாகும். கட்சி சார்ந்த அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அப்பால் அனைத்து மக்களும் சமமான முறையில் வாழ்க்கையை நடத்துவதற்கும், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை வழங்கும் வகையிலும் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.

கடந்த காலங்களில் மக்கள் வீதியில் இறங்கிப் போராடியிருந்த போது 'சிஷ்டம் சேஞ்ச்' அதாவது கட்டமைப்பு மாற்றமொன்றுக்கான தேவையையே வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறான கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அமையாது என்பதே அரசியல் ஆய்வாளர்கள் பலருடைய கருத்தாகவுள்ளது.

எனவே, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரவேண்டிய கடப்பாடு அரசியல்வாதிகளான அனைவருக்கும் உள்ளது. ஜனநாயக ஆட்சி முறையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்று கொண்டு வரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தமிழர் தரப்பில் காணப்படுகிறது.

இருந்தபோதும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். அதாவது தமிழ்க் கட்சிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அதேவேளை பெரும்பான்மை அரசியல் கட்சிகள் தமக்கிடையில் காணப்படும் தனிப்பட்ட அரசியல் போட்டிகள் மற்றும் அதிகாரத்துக்கு வருவதற்கான ஆசைகளைக் கைவிட்டு மக்கள் மீதும் நாட்டின் மீதும் உண்மையான நேசிப்புடன் புதிய அரசியலமைப்புத் தயாரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டாலேயே இதனைச் சாத்தியமாக்க முடியும்.

குறிப்பாக தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் ஒற்றுமையாகச் செயற்படுவது தேவையான விடயமாகும். நீண்ட காலமாகக் கோரப்பட்டுவரும் அரசியல் தீர்வு விடயத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் குறித்துப் பேசப்பட்ட போதும், அவை எதுவும் சாத்தியமாகவில்லை. தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின் தமிழ் அரசியல்வாதிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று எதனையும் சாதித்து விட முடியாது. தமிழர்களின் பிரச்சினைகள் என்பது ஒவ்வொரு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஏற்ப வேறுபட்ட விடயம் அல்ல.

அதிகாரப்பகிர்வு, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சூழல் போன்ற பொதுவான பிரச்சினைகளே காணப்படுகின்றன. இதில் பிரிந்து நின்று செயற்பட வேண்டிய தேவைப்பாடு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இல்லையென்பதே உண்மை. இந்தக் கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக்ள அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிக் கொண்டு முன்னேறிச் செல்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதால் தமிழ் அரசியல் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபைத் தேர்தல்களை நடத்தச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அரசியல் சூழலை தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறுகிய நலன்களையும், தேர்தல் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும். கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டதைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.

பி.ஹர்ஷன்

Comments