மக்கள் நலனை மனதில் கொள்ளாத உற்பத்தி நிறுவனங்களை வழிக்குக் கொண்டுவருவது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

மக்கள் நலனை மனதில் கொள்ளாத உற்பத்தி நிறுவனங்களை வழிக்குக் கொண்டுவருவது எப்படி?

சந்தைப் பொருளாதாரங்கள் குறித்த கலந்துரையாடல்களிலே நுகர்வோர் இறைமை (consumer sovereignty) என்ற சொற்றொடர் அடிக்கடி உச்சரிக்கப்படுவதை அவதானித்திருப்போம்.

சந்தையின் அடிப்படையில் இயங்கும் பொருளாதார முறைமையில் நுகர்வோனின் விருப்பு வெறுப்புக்கு அமையவே உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சேவைகளின் வகைகளும் அளவுகளும்

தீர்மானிக்கப்படுகின்றன.

 

நுகர்வோனே சந்தையில் அரசனாகக் (consumer is the king) கருதப்படுகிறான். உற்பத்தியாளன் பொருள்களையும் சேவைகளையும் சந்தையில் நிரம்பல் செய்தாலும் நுகர்வோன் அவற்றைக் கொள்வனவு செய்யாது புறக்கணித்தால் உற்பத்தியாளன் மிகப்பெரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும். எனவே தான் சந்தைப் பொருளாதாரங்களில் இயங்கும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தம் விற்பனை நிறுவனங்கள் நுகர்வோன் அல்லது வாடிக்கையாளன் திருப்தி (consumer/ customer satisfaction) என்பதற்கு அதிகூடிய முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அதேபோல நெடுவாழ்வுப்பொருள்கள் மீதான  நுகர்வோன் திருப்தியைத் தொடர்ந்து பேணி அவரைத் தமது நிறுவனத்தின் பொருள்களைத் தொடர்ந்து கொள்வனவு செய்யும் பொருட்டு விற்பனைக்குப் பிந்திய சேவை வசதிகளையும் நிறுவனங்கள் வழங்கும். அதேபோல் சேவைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமது சேவைகளில் வாடிக்கையாளர்களின் திருப்தி குறித்த பின்னூட்டல்களை பெற்று அதனடிப்படையில் தமது சேவைகளை வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும் வண்ணம் மேம்படுத்திக் கொள்கின்றன. சிறிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்த முடியாதாயின் சந்தையில் நிலைத்திருக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். ஆனால் நடைமுறை உலகில் நுகர்வோனின் முக்கியத்துவம் சரியாக நாம் மேலே குறிப்பிட்டது போல அவதானிக்கப்படுகிறதா? இலங்கையில் இந்த நிலைமை உள்ளதா? இவை முக்கியமான கேள்விகளாகும். உதாரணமாக இலங்கையை சுற்றுலா உலகின் சொர்க்கபுரி என்றும் இங்குள்ளது போல   வே​றெங்கும் இல்லை என்றும் வினோதமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் திருப்திகரமானவையாக உள்ளனவா அவர்களது அனுபவங்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதனடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கிடப்படுவதாக அறிய முடியவில்லை. நான் இதைத்தான் கொடுப்பேன் நீ இதைத்தான் அனுபவிக்க வேண்டும் என்னும் பாணியிலான சேவை வழங்கும் முறைமையினையே இங்கு காண முடிகிறது. உலகின் பல நாடுகள் இந்த நிலைப்பாட்டிலிருந்து கடந்து வந்து விட்டன. ஆனால் இலங்கையால் இதிலிருந்து இன்னமும் விடுபட முடியவில்லை.

நுகர்வோனின் இறைமையானது பணவீக்க காலத்தில் மோசமாகப் பாதிக்கப்படும். தாம் விரும்பிய பொருள்களை அவர்களால் முன்புபோல் கொள்வனவு செய்ய முடியாது. அதேபோல கொள்வனவு செய்யப்படும் பொருள் அத்தியாவசியமான பொருளாக இருப்பினும் நுகர்வோர் இறைமை பாதிக்கப்படும். ஏனெனில் பணவீக்க காலத்தில் விலைகள் அதிகரிக்கின்ற நிலையிலும் கட்டாயம் அவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதனால் விற்பனையாளர்கள் தாம் விரும்பியபடி விலைகளை அதிகரிக்க முடியும். அத்தியாவசிய மருந்து வகைகள், அரிசி, இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்கள், பெற்றோலியப் பொருள்கள், நீர்,  மின்சாரம் போன்றன இவ்வகையில் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றின் விலைகளை பணவீக்க காலத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் தமது இஷ்டப்படி விற்பனையாளர் அதிகரிப்பர். உற்பத்தி செலவில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் அரசாங்கம் வரிகளை அதிகரித்ததால் ஏற்படும் தாக்கம் என்பவற்றால் தாம் விலைகளை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகக் காரணங் கூறுவர். உண்மையில் மேற்படி காரணங்களால் செலவுகள் அதிகரித்த போதிலும் விலை அதிகரிப்பின் சதவீதம் அதைவிடக் கூடுதலாகக் காணப்படுவதே வழமை.

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் போது விற்பனையாளர்கள் தாம் பழையவிலையில் பெற்ற பொருள்களையும் புதிய விலைக்குறியீடுகளை ஒட்டி அதிக இலாபம் பெறலாம். நடைமுறையில் ஒரு சில நேர்மையான விற்பனை நிறுவனங்களே பழைய விலையில் கொள்வனவு செய்த பொருள்களை பழைய விலைகளில் விற்பனை செய்வதைக் காண்கிறோம். இவ்வாறான நிலைமையில் நுகர்வோர் தமது கொள்வனவு நடத்தையை மாற்றியமைக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. குறிப்பாக உணவுப் பொருள் கொள்வனவு குறித்த விடயங்களில் மிகக் கவனமாக மாற்றங்களைச் செய்ய வேண்டும். இப்போதெல்லாம் இறைச்சி, முட்டை மற்றும் மீன் போன்ற புரதச் சத்துள்ள உணவுப் பொருள்களின்  விலைகள் அதிகரித்துள்ளன. ஆனால் இதே சத்துக்களைக் கொண்ட மாற்றீடுகளை தற்போதைய நெருக்கடி நிலை மாற்றமடையும் வரையிலாவது கொள்வனவு செய்வது நல்லது. பயறு, கௌபி போன்ற தானியங்களின் சில்லறை விலைகளும் மிக உயர்ந்துள்ளன. ஆயினும் நமது உணவுக் கூடையில் தற்காலிக மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஓரளவு விலை அதிகரிப்புகளில் இருந்து பாதுகாப்புத் தேடலாம். வைத்தியர்களும் போஷாக்கு நிபுணர்களும் இதுபற்றி இப்போது பரவலாக மக்களைத் தெளிவுபடுத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது. பால் மற்றும் பால் உற்பத்திப் பொருள்கள் இப்போது யானை விலை குதிரை விலையில் விற்கப்படுகின்றன. பால் உற்பத்தியாளர்களோ ஒரு லீற்றர் பாலுக்கு வெறும் நூற்றெட்டு ரூபா மாத்திரமே வழங்கப்படுவதாக அங்கலாய்க்கின்றனர். ஒரு லீற்றர் பைக்கற்றில் அடைக்கப்பட்ட பால் 525ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அவ்வாறாயின் அதில் இடைத்தரகர்களே கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர். முடிந்த வரையில் பால் உற்பத்தியாளர்கள் அருகில் உள்ள கிராமங்கள் நகரங்களுக்கு பாலை விற்பதன் மூலம் இரு தரப்பினரும் நன்மையடையலாம். உற்பத்தியாளர்களுக்கு சங்கங்கள் இருப்பது போல மேலை நாடுகளிலே நுகர்வோர் சங்கங்கள் உள்ளன அவை விலைகள் கட்டுக்கடங்காமல் மோசமாக அதிகரிப்பதை தடுக்கும் வல்லமை கொண்டவை. இலங்கையில் நுகர்வோர் சங்கங்கள் இல்லாவிடினும் இப்போது உள்ள சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நுகர்வோரின் நலன்களைப் பாதிக்கும் விலையதிகரிப்புகள் குறித்து சமூகத்தை தெளிவுபடுத்தி பொது அபிப்பிராயத்தை உருவாக்கலாம்.

அண்மையில் விசுக்கோத்துக் கம்பனிகள் விசுக்கோத்து விலைகளை அதிகரித்தபோது அதற்கெதிராக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அபிப்பிராயத்தினால் அவற்றின் விற்பனைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இப்போது விசுக்கோத்துக் கம்பனிகள் தமது ஒரு சில விசுக்கோத்து வகைகளின் விலைகளைக் குறைத்து அவற்றை வாங்குமாறு காலில் விழுந்து கதறாத குறையாக விளம்பரம் செய்கின்றன. நுகர்வோர் கூட்டாக இயங்கினால் இது போன்ற நியாயமற்ற விலை அதிகரிப்புகளை தடுக்கலாம். வாங்க ஆளில்லாவிடில் எந்தக் கொம்பனாலும் இறங்கி வந்துதான் ஆக வேண்டும்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments