கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு இல்லா இனிப்பு மட்டும் இன்று...!

கடந்த 2021. 10. 24ஆம் திகதி சரியாக காலை பத்தரைக்கு “வரலாற்றில் ஓர் ஏடு” திறக்கப்பட்டது ஓரிடத்தில்!  

அது சாமானிய இடமன்று! ‘நம்ம’ நமக்கே சொந்தமான வானொலி நிலையம்!  

அந்த வரலாற்று நிகழ்வு சிறு கசப்புகளுடன் (குறைகள்) நடந்தாலும் நல்ல பல இனிப்புச் சுவைகளை அள்ளி வழங்கியது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.  

அத்தோடு, வானொலி வரலாற்றில் முதல் தடவை.  

ஆகவே, இவ்வார பத்தி எழுத்துப் பக்கம், ‘கசப்பு இல்லா இனிப்பு மட்டும்’ வழங்கப்போகிறது.  

பேனா முனை தன் விவரிப்பைத் தொடங்கமுன், என் இளமைப்பருவத்து சில முக்கிய அனுபவங்களை தன் வரலாற்றுக் குறிப்பாக வழங்கிட அந்த ‘முனை’க்கு அபிமானிகள் அன்பு கூர்ந்து அனுமதிக்க வேண்டும்.  

அது 11க்கும் 23க்கும் இடைப்பட்ட பருவம்.  

11ல் (1948) ‘தமிழ்வாணன்’ சுவைக்கத் தந்த ‘கல்கண்டு’ இனிப்பைக் கையில் வைத்துக் கொண்டு, வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாததால் தெருவோரத் தேநீர்க் கடையில் பொருத்தப்பட்டிருந்த ‘ரெடிபியூசன்’ பெட்டியில் “ரேடியோ சிலோன்” வர்த்தக சேவை “நமஸ்தே நமஸ்தே” என சமஸ்கிருத ‘வணக்கம் சொல்லி வழங்கும் தமிழ்த் திரைப்பாடல்களில் மதிமயங்கி, அப்புறம் மாலை தேசிய சேவையில் நாலரைக்கு ‘வணக்கம் மருமக்களே’ எனக் குரல் எழுப்பிய சங்காணையூர் ஒரு ‘ரேடியோ மாமா’வுக்கு பதில் வணக்கத்தை ரெடிபியூசன் பெட்டிக்கே சொன்ன ஒருவித வானொலியில் பைத்தியம் நான்.  

அந்த சரவணமுத்து ‘ரேடியோ மாமா’ நான் அனுப்பிய 03சத அஞ்சலட்டையை மதித்து "அருமை மருமகனே அடுத்த வாரம் நிலையம் வந்து உங்களுடைய ‘நாயின் உதவி’ குட்டிக் கதையை எங்களுக்குச் சொல்லுங்கள்" எனச் “சிறுவர் மலர்” மூலமே அழைப்பு விடுக்க, இன்று ஆள் அரவமின்றி அமைதி பேணும் டொரிங்டன் சதுக்க வானொலி நிலையப்படிகளை மிதித்து நேர் ஒலிபரப்பில் ஐந்தே ஐந்து நிமிடக்கதை சொல்லியானேன். மாமா அவர்களுக்கு உதவிய ‘வானொலி அக்கா’ (திருமதி ஞானதீபம் சிவபாத சுந்தரம்). என் நெற்றியில் அரும்பிய வியர்வையை தன் கைலேஞ்சியில் ஒற்றி எடுத்ததையும் இன்றும் மறக்காமல் இருக்கிறேன்.  

இப்படி தேசிய ஒலிபரப்பு சிறுவர் மலரில் குட்டிக்கதை வாசிக்கப்போய், பிறகு இலங்கை வானொலியிலும் அடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் தமிழ் – முஸ்லிம் சேவைகள் இரண்டுக்கும் தட்டெழுத்தாளனாகி, நாளாந்தம் Cue sheet” என்கிற நிகழ்ச்சி விவரக் கொத்தை அறிவிப்புகளுடன் அடித்துக் கொடுக்கிறவனாகவும், நாடகப்பிரதிகள் டைப் செய்கிறவனாகவும், நாளடைவில், நாடகங்கள் இல்லா நேரங்களில் நாடகம் எழுதிய ‘எம்.எம்.மக்கீன்’ என்பவனை நாலுபேருக்குத் தெரியவைத்தும், உச்ச கட்ட உயர்வாக ஆறாம் இலக்க கலையக அரங்க மேடையில் “முத்தாரம்” பல்சுவை நிகழ்ச்சிகளை கிழமைதோறும் ஞாயிறு பொழுதில் நேயர்கள் முன்னிலையில் அரங்கேற்றி தமிழ், முஸ்லிம் வானொலி அபிமானிகளைச் சம்பாதித்த இனிப்பான அனுபவங்களைச் சொல்ல இந்தப் பக்கம் போதாது.  

நல்லது இந்த இடத்தில் என் வரலாற்றை’ நிறுத்தி முன்பந்தியில் குறிப்பிட்ட அந்த ‘ஆறாம் இலக்கக் கலையக’த்திற்கு சிறு அறிமுகம் தருகிறேன்.  

“50,- 60களில் அக்கலையக உள் அரங்கம் (150இருக்கைகள்) பெருநாள் திருநாள் காலங்களில் விழாக் கோலம் காணும். தீபாவளி, பொங்கல் கொண்டாட்டங்களும் நோன்பு, ஹஜ்ஜூப் பெருநாள் பல்சுவை நிகழ்ச்சிகளும், தமிழ்ச்சேவை மாதமொரு கலைவிழாவும், முஸ்லிம் சேவை “முத்தாரம்” கலைக்கதம்ப நிகழ்வும் ஒஹோவென நடந்த வண்ணம் இருந்தன. என்னைப் பொறுத்த வரையில் ‘முத்தாரத்தின் தயாரிப்பாளன் என்ற வகையில் அந்தக் கலையகத்தில் நாளெல்லாம் உருண்டு புரண்டவன்.

பிற்காலங்களில் இருளில் மூழ்கிப் போய் நேயர்கள் வரவும், ஆசையாக அமரவும் நிகழ்ச்சிகளை ரசிக்கவும் இயலாத துர்ப்பாக்கிய நிலையில் மூப்பும் அடைந்து முடங்கிப் போனது.  

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான், ‘தமிழ்ச் சேவைக்கு அகவை 71! முஸ்லிம் சேவைக்கு 60! இணைந்தே நடத்துகிறோம். விழா!ஆறாம் இலக்கக் கலையக இருக்கையில் 10மணிக்கு அமர்ந்து கொள்ள வேண்டுகிறோம்” என அழைப்பு!  

‘சிறுவர் மல’ரில் குட்டிக்கதை சொல்லி, குட்டி நாடகங்கள் எழுதி, ‘முத்தாரம்’ கலைநிகழ்ச்சி தயாரித்தவனின் உணர்வுகளை அபிமானிகள் புரிந்து கொள்ளுங்கள்.  

அன்றையப் பொழுதில் நடந்த விழாக்கள் வானொலி வரலாற்றில் முதல் தடவை. ‘வரலாற்றில் ஓர் ஏடு” எனப் பின்னொரு காலத்தில் வர்ணிக்கப்படக் கூடிய சரியாகக் கடந்த ஞாயிறு 24/10/2021காலை 10.30க்கு அந்தக் கலையகத்தில் மங்களநாதம். (நாதஸ்வரம்) ஒலித்தது. தொடர்ந்து ‘கிராத்’ என்கிற அல்- குர்ஆன் திருமறையின் சில வசனங்களை ஒரு மார்க்க அறிஞர் கணீர்க் குரலில், எடுத்துரைக்க எங்கோ போனது மனசு!  

அப்புறம்  தமிழ்ப்பாடல் ஒன்றுக்கு அபிநய நடனம் ஆடினர் நங்கையர் இருவர்! கண்கள் சொக்கின.  

அடுத்ததாக காதுக்கு இனிமை சேர்க்க ஒரு அற்புத ‘கஸீதா’ பாடலை எதிர்பார்த்தபொழுது எப்படியோ ‘நிகழ்ச்சி நிரலில் ஒரு தொய்வுதெரிந்தது. திருஷ்டிக் கழிப்பு. மறப்போம். எவ்வாறாயினும் மொத்தமாக இரண்டே கால் மணிநேரம் (பகல் 12.45செய்தி அறிக்கை வரை) நேர் அஞ்சல் ஒலிபரப்பாக நடந்த நிகழ்வில், சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் இளவல் மூவரும் அரசியலைத் தொடாமல் அபூர்வமான உரைகளை நறுக்கென்று நவின்றார்கள்.  

அதிலும், அமைச்சர் டக்ளஸ் முஸ்லிம் சேவை வரலாறு சொல்லி முன்பு பணியாற்றியவர்களை நினைவு கூர்ந்தது அதிசயம்! அற்புதம்!  

அவரைத் தொடர்ந்து அமைச்சர் அலி சப்றி, (தென்னிலங்கையில் சிங்கள – ஆங்கில கற்கை நெறிகளில் கரைகண்டவர்) தமிழின் தொன்மையையும், தமிழ்ச் சேவைகள் இரண்டினதும் பங்களிப்புகளையும் பளிச்சிட்டார்!  

இது, எனக்கொன்றைப் புரிய வைத்தது. அவர் வீட்டார் (அன்னையார் உட்பட) இலங்கை வானொலித் தமிழ், முஸ்லிம் சேவை நேயர்கள் என்பது!  

இராஜாங்க அமைச்சர், ஜீவன் தொண்டமான் இளவலும், தாத்தா வழியில் மலையகப் ‘பாவப்பட்டவர்களை’நினைத்து நெஞ்சுருகிவிட்டு, முஸ்லிம் சமூகத்தவர் நிலை பற்றியும் நெகிழ்ந்து போனார்! அவர் நிச்சயமாக ஓர் ‘ஏறு முகம்’ தான்!   மேலும் அன்றைய இரு பெரும் விழாக்களுடன், இப்போதைய வானொலித் தலைவர் ஒரு கால செய்தி அறிக்கை வாசிப்பாளர், கவிஞர், பாடகர் ஹட்சன் சமரசிங்கவின் பிறந்த நாள் வாழ்த்து வைபவமும் இணைந்து முப்பெரும் விழாவானதும் ஒரு புதுமைதான்!  

“வழக்கமாக நான் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை” என்ற தலைவர், கவியரசர் கண்ணதாசனை அரங்கத்திற்குள் அழைத்து வந்தது ஓர் அதிரடி!  

“சூரிய காந்தி” படத்தின் பிரபல பாடலான ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா’வை அச் சொட்டான தமிழில் பாடி அசத்தினார் அவர்.  

தலைவர் அப்படிப் பாடி பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்றதில் அர்த்தம் உள்ளது! அர்த்தம் உள்ளது!  

'பாம்பும் கருட'னும் யார்   யாரைக் குறிக்குமோ என்னால் கணிக்க இயலவில்லை. ஆனால் அவரிடம் அர்த்தம் இருப்பது போல்பட்டது!  

வாழ்க! வாழ்க! வானொலித் தலைவர்!  

இப்பொழுது இந்த ‘இனிப்’பின் இறுதிப்பகுதிக்கு அபிமானிகளை அழைத்து வருகிறேன்.  

ஆரம்பத்தில் அறபு கஸீதா பாடல் ஒன்றை எதிர்பார்த்ததாகப் பதிந்திருப்பதை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.  

உண்மையில் கஸீதாவுக்குச் சரிசமாக, இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தக்கூடிய பாடல் ஒன்றை, மார்க்க அறிஞர் கொழும்புப் பகுதி விவாகப்பதிவாளர் பாடகர் லாஃபீர் பாடத் தயார் நிலையில் வந்திருந்தார்.  

அவர் கலாபூஷணம், சமாதான நீதவான், பாடலாசிரியர் எம்.சி. முஹம்மது அலி யாத்திருந்த ஒரு பாடலைக் கையில் வைத்திருந்ததும் ஏற்பாட்டாளர்களின்  

 எத்தி வைத்ததும் கைகூடாமல் போனது!  

இறைவனது எண்ணப்படியும் திட்டப்படியும் ‘கசப்பும் இனிப்பும்’ அபிமானிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது நியதியானது.

 மாறுவது எப்படி? இங்கே பெருமகிழ்வுடன் வழங்கப்படுகிறது. எனினும் அன்றைய விழாவில் சிங்கள மொழியிலேயே பாடப்படவிருந்தது. அதுவே சரியுங்கூட சிங்களத்தைத் தமிழில் வாசியுங்கள்.  

 “பலமுவென் ஸலாம்” கியாசாந்தீய பதுரலா ஆயு போவன் கியா சதுடென் சுப பதமி மா....  

வணக்கம் கியா ஸொயுரன் பிலி கன்னெமி மெம ஸாமய ஸமகியய் தே ஷே ஜயகென தெனா....   மஹ ஸங்கருவென ஹிந்து, முஸ்லிம், கித்துனு பூஜக வருன்  

ஸஹ ஜீவனே பதா கெனமய் அத்த மே செபத் வுனே ஹத பிரி சதுட பென் வன்னய் அபித் எக்வுனே...  

ஜனமாத்யயன் அதரின் பலமுவென பிஹிவுனே குவன் விதுலி சேவயப் ஏ லங்கா பூமியே ஸெவொம எக்வெலா புதமு சுபா ஹிங்ஸனே...  

 ஆகம் தஹம் நிஸா எய்மே ஹிடஸக் எதிவுனே... நிஸி மக பஹதலா தென்னய் ஆகம் பிஹிவுனே...மினிஸத் கமய் வடினா தெயய் லோ தலே  

இப்பாடலின் சுருக்கிய கருத்து:சலாம் உரைக்கின்றேன், சாந்தியும் சமாதானமும் வேண்டி...  

வணக்கம் கூறி வரவேற்கின்றேன். ஒற்றுமையே வெற்றிக்குவழி  

பௌத்தத்தோடு இந்து – முஸ்லிம் – கிறிஸ்தவக் குருக்களும் மனிதநேயம் வேண்டி இங்கே கூடி நிற்கின்றோம். ஊடகங்களின் தாயாம் இலங்கை வானொலியில்...

விழாவில் முத்தாய்ப்பு நிகழ்வுரை ஆற்றிய முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபைத்தலைவர் தொழில் அதிபர், மாணிக்க மனிதர், ஹாஜி, முஸ்லிம் சலாஹூதீன் கண்டி கல்ஹின்னைத் தமிழில் ஒலிவாங்கியில் உரைத்தார்.

இப்படி தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வானொலிச் சேவையாளர்கள் செய்த முன்மாதிரி இது!

நாம் வெறும் துரும்புகளாய் இருந்து கண்ட பயனேதுமில்லை. தும்புக் கயிறுகளாக உருமாறி உன்னதம் பெறுவோம் என்றும் அடித்துக் கூறினார்.

ஆம்! அச் சொட்டான வார்த்தைகள்!

ஒரு பேருண்மையை உணர்த்திய ஹாஜி முஸ்லிம் சலாகுதீன் மனம் நிறைந்த பாராட்டுக்குரியவர். அத்தோடு விழா சிறக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நேரில் காணக்கூடியதாக இருந்தது.  

அன்னாருக்கு உறுதுணை நின்ற, மேனாள் முஸ்லிம் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளர், சிறந்த வானொலித் தொகுப்பாளர், அறிவிப்பாளர் ஹாஜி அஹமத் முனவ்வரும் மறக்க இயலாச் சேவையாளர்.  

தமிழ்ச் சேவைப்பகுதி ஏற்பாடுகளைப் பொறுத்தவரையில், இந்த முப்பெரும் விழாக் கரு கட்டிய காலந்தொட்டு கடுமையான உழைப்பைச் சிந்தி பக்கபலமாக நின்ற ஒருவராக மட்டக்களப்பு, கல்லாறு கலைஞர் வீரசிங்கம் – ஜெய்சங்கர் தென்படுகிறார் என் பார்வையில்! அவர் தற்சமயம், வானொலித் தலைவர் ஹட்சன் சமர சிங்கவின் பிரத்தியோகச் செயலாளர்!

நாளை எப்படியோ, கணிக்கக் கடினம்!

அவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் ‘ஓர் ஒற்றுமை விழா’ நடத்திக் காட்டியதற்கு!  

Comments