ஈழத்து பா நாடக முன்னோடி முருகையன் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து பா நாடக முன்னோடி முருகையன்

1950ஆம் ஆண்டுகளில் ஈழத்து நவீன கவிஞர்கள் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே இங்கு பா நாடகம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு நாடக வகையாக வளர்ச்சியடைந்தது. ஆகவே ஈழத்துப் பா நாடக வளர்ச்சி 50ஆம் ஆண்டுகளிலிருந்து தொடங்குவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

திருச்சிக் கவிஞர் கலைவாணனின் மணல்வீடு என்ற கவிதை நாடகத்தைக் கேட்ட சூட்டோடு சூடாக 1953இல், தான் எழுதிய நித்திலக்கோபுரம் என்பதே இலங்கையில் முதல் முதலில் எழுந்த பாநாடகம் என்று முருகையன் கூறுவதற்கும் இதுவே காரணம் ஆகலாம்.

இவ்வகையில் பார்த்தால் முருகையனே ஈழத்துப் பா நாடகத் துறையின் முன்னோடி எனலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், ஞானம் சஞ்சிகை நூறாவது இதழில் எழுதிய ஈழத்துப் பா நாடகங்கள் என்ற கட்டுரையில்.

முருகையனின் நித்திலக்கோபுரம் வானொலியில் ஒலிபரப்பாகியது. மேடையை விட, பா நாடகங்களுக்கு வானொலி மிக வாய்ப்பான ஒரு சாதனம் எனலாம். வானொலி நாடகத்துக்கு மேடைக்குரிய காட்சிப்படிமங்கள் அவசியமில்லை. ஒலிப்படிமங்களையே அது அடிப்படையாகக் கொண்டது. மேடைச் சிக்கலிலிருந்து அது கவிஞர்களுக்கு விடுதலை வழங்குகிறது.

1936ஆம் ஆண்டிலே சோமசுந்தரப்புலவர் இயற்றிய உயிர் இளங்குமரன் நாடகம் வெளிவந்தது. இடையிடையே வசன நடையில் உரையாடல்கள் இடம் பெற்றிருப்பினும் பிரதானமாக இது ஒரு பா நாடகமே. சைவசமயக் கருத்தை விளக்குவதற்கு எழுந்த இந்நாடகமே ஈழத்தில் மேடையேற்றப் பட்ட முதலாவது பா நாடகமாகும்.

1960களில் ஈழத்துப்பா நாடக உலகில் ஒரு புதிய பண்பைப் காண்கிறோம். மேடைக்காகத் திட்டமிட்டு நாடகம் எழுதும் முயற்சியே அது.

உயிரிளங்குமரனுக்குப் பிறகு ஈழத்திலே மேடையேறிய பா நாடகம் முருகையனின் குற்றம் குற்றமே என்பதாகும். கொழும்பு சாஹிறாக் கல்லூரியில் இடம்பெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டில் இறுதி நிகழ்ச்சியாக இந்நாடகம் மேடையேற்றப்பட்டது.

 கல்வயல் கிராமத்தில் 23.04.1935இல் முருகையன் பிறந்தார். இவரது தந்தையார் இராமுப்பிள்ளை ஒரு புகழ்பெற்ற தமிழாசிரியர்.  தாயார் பெயர் செல்லம்மா. இவருடன் கூடப்பிறந்தவர் நாடக வல்லுனரும் கவிஞருமான சிவானந்தன். 

முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றிலும் பெற்றார்.

உயர்கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெற்று 1956இல் விஞ்ஞானப் பட்டதாரி ஆனார். 

1961இல் லண்டனில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். 1985இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார்.                                                  

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 1956முதல் விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றிய முருகையன் பின்னர் அரச மொழித் திணைக்களத்தில் அறிவியல் பாடநூல் மொழிபெயர்ப்பாளராகவும், தமிழ்மொழிப் பாடநூல் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாள ராகவும், 1978முதல் -1983காலப்பகுதியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் 1984முதல் முல்லைத்தீவு, வவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றி இறுதியாக 1986இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதுணைப் பதிவாளராகப் பணியாற்றினார்.

1995இல் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் 2002வரை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

கவிதையின் மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த முருகையன் மேடைப் பா நாடகங்கள், வானொலிப் பா நாடகங்கள்,  மொழி பெயர்ப்பு, காவியங்கள்,  விமர்சனம்,  கட்டுரை, பாடலாக்கம் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர்.

முருகையன் ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றைத் தமிழிலும் தமிழ்க்கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.

1950முதல் எழுதத் தொடங்கிய முருகையன் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியவாதம்,  மொழிஉணர்வு சார்ந்த கவிதைகளை எழுதினார்.  அறுபதுகளில்  இருந்து சோஷலிசக் கருத்து நிலையில் தனது படைப்புக்களை வெளிக்கொணர்ந்தார்.  இக்காலகட்டத்தில் இவர் படைத்த அநேகமான படைப்புக்களில் முற்போக்குக் கருத்து நிலையின் செல்வாக்குப் பொதிந்திருந்தது. எண்பதுகளுக்குப் பின்னர் அவரது அநேகமான கவிதைகள் யுத்தகால இராணுவ ஒடுக்கு முறைகள் பற்றியதாக அமைந்தன.  முருகையன்  ஒரு மரபுவழிக் கவிஞர்.

இவரது முதலாவது நூல் 'ஒரு வரம்" (1964) பன்னிரண்டு ஆங்கிலக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புத் தொகுப்பாகும். நெடும் பகல் - காவியம் (1967), ஆதி பகவன் - காவியம் (1978), அது- அவர்கள் நீண்ட கவிதை (1986), மாடும் கயிறு அறுக்கும் (1990), நாங்கள் மனிதர் (1992), ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001) என்பன அவரது  கவிதை நூல்களாகும். இவருடைய கவிதைகள் தனிக்கவிதை, நெடும்பாட்டு, பாநாடகம் என்ற மூன்று வகையாகக் காணப்படுகின்றன. புதுக்கவிதையை வெறுத்து மரபுக் கவிதையை விரும்பும் இக் கவிஞரின் ஒவ்வொரு கவிதையிலும் ஒலி நயமும், கலையம்சமும், சமுதாயப் பயன்பாடும் இருக்கும். பேராசிரியர் க. கைலாசபதி இவருடைய பாடசாலை நண்பன்.

இருவரும் சேர்ந்து 'கவிதைநயம்" என்னும் நூலை எழுதி வெளியிட்டனர். நண்பர் மஹாகவியுடன் (உருத்திர மூர்த்தி) இணைந்து 'தகனம்" என்ற காவிய நூலையும் எழுதினார். 'தகனம்"  நூலுருப் பெறவில்லை.

மேடைக் கவிஞருக்குத் களமமைத்து தலைமைக் கவிஞராகக் கவிதை படிப்பதுடன் இளங்கவிஞர்களுக்கும் களமமைத்துக் கொடுத்தார். இதனால் பல இளங்கவிஞர்கள் உருவாக்கப்பட்டனர்.

முருகையன் எழுதிய முதல்நாடகம் சிந்தனைப்புயல் என்பதாகும். இந்நாடகம் இந்துக்கல்லூரில் இவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதியது. அதிலே இவரே கதாநாயகியாக நடித்தார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னர் இவர் ஒரு கவிதை நாடகத்தை வானொலிக்காக எழுதினார். முதன்முதலில் இவர் எழுதிய நித்திலக்கோபுரம் (1953) நாடகத்தை தயாரித்தவர்கள் வானொலிக்காரர்கள்தான். அந்த ஊக்கத்தில் இவர் தொடர்ந்து சில வானொலி நாடகங்களை எழுதினார். பின்பு  காலப்போக்கில் மேடை நாடகங்களை எழுதும் நாட்டம் இவருக்கு ஏற்பட்டது.

இலங்கையில் அதிகமான பா நாடகங்களை எழுதியவர் முருகையனே. 

இவரது கடூழியம், அப்பரும் சுப்பரும் (1971) ஆகிய மேடைநாடகங்கள் மிக முக்கியமான அரசியல் நாடகங்கள் எனக் கருதப்படுகின்றன. கடூழியம் மார்க்சிய கருத்து நிலையில் எழுதப்பட்ட நாடகமாகும். இந்த இரண்டு நாடகங்களும் முற்போக்கு எழுத்துக்கு உதாரணமாக விளங்கும் மேடை நாடகங்களாகும்.  இவைதவிர பொய்க்கால், குற்றம் குற்றமே ஆகிய மேடை நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.

இவர் எழுதிய பா நாடக நூல்களாக, வந்து சேர்ந்தன,(1965) தரிசனம், உண்மை, (மொழிபெயர்ப்பு 2002) கோபுர வாசல், (1969) மேற்பூச்சு, (1995) வெறியாட்டு, (1989) சங்கடங்கள்(2000) ஆகியன வெளிவந்துள்ன. மேடைநாடக நூல்களாக கடூழியம், அப்பரும் சுப்பரும் (1971) ஆகியன வெளிவந்துள்ளன.

முருகையன் எல்லாமாக 24நாடகங்களை எழுதியுள்ளார். அவையாவன நித்திலக்கோபுரம், அந்தகனே ஆனாலும், வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், கடூழியம், செங்கோல், கலைக் கடல், கொண்டுவா தீயை கொளுத்து விறகை எல்லாம், சுமசும மகாதேவா, அப்பரும் சுப்பரும், கந்தப்ப மூர்த்தியர், வழமை, அந்தகனே ஆனாலும், இடைத்திரை, குனிந்ததலை, வெறியாட்டு, பொய்க்கால், குற்றம் குற்றமே, தந்தையின் கூற்றுவன், இரு துயரங்கள், கலிலியோ, உயிர்த்த மனிதர் கூத்து, எல்லாம் சரிவரும், என்பனவாம்.

கவிஞர் முருகையனின் ஆங்கிலப்புலமை அசாத்தியமானது. ஷேக்ஸ்பியர் என்னும் சிறப்பிதழை இவர் வெளியிட்டுள்ளார். யாழ். பட்டதாரி மாணவர்களுக்கு 'மொழிபெயர்ப்பு நுட்பம்" பற்றி விரிவுரைகள் ஆற்றியுள்ளார். அவ்விரிவுரைகள் அனைத்தும் அதே பெயரில் நூலுருப் பெற்றுள்ளன. 

இலங்கை அரச மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலைச்சொல்லாக்கத்திற்குக் கணிசமான பங்ளிப்புச் செய்துள்ளார்.

ஒருசில விதி செய்வோம்,  இன்றைய உலகில் இலக்கியம் ஆகிய திறனாய்வு நூல்களையும் முருகையன் எழுதியுள்ளார்.  'திருவெம்பாவையர்"  இவர் எழுதிய உரை நடைச் சித்திர நூலாகவும்,  இளநலம் (வடமொழி குமார சம்பவத்தை ஒட்டியது),  மொழிபெயர்ப்பு நுட்பம் ஆகிய கட்டுரை நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவற்றைவிட  முந்நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகம்  இவரது இலக்கியப் பணியினைப் பாராட்டி கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.

அரச உயர் விருதான சாஹித்யரத்னா விருது இவருக்கு 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

முருகையன் தனது 74ஆவது வயதில் 27.-06.-2009 அன்று அமரரானார்.

Comments