படைப்பாற்றலும் செயல்திறனும் மிக்க பேராளுமை செங்கை ஆழியான் | தினகரன் வாரமஞ்சரி

படைப்பாற்றலும் செயல்திறனும் மிக்க பேராளுமை செங்கை ஆழியான்

ஈழத்து  நாவல் வரலாற்றில் செங்கை ஆழியானுக்கு ஓர் உன்னத இடமுண்டு.  இவர்  நாற்பத்தாறு நாவல்களை எழுதியுள்ளார். இவற்றில் யானை என்ற நாவல் The Feast  என்ற மகுடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காட்டாறு நாவல்  'வன மத கங்க" எனச் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு நாவலாக வெளிவந்துள்ளது.  பிரளயம் (1976) காட்டாறு (1977) மரணங்கள் மலிந்தபூமி (2000) என்பன தேசிய  சாகித்திய மண்டலப் பரிசினைச் சுவீகரித்துக் கொண்டன. இவரது வாடைக்காற்று  நாவல் திரைவடிவம் பெற்றது. இவரது பத்துக் குறுநாவல்கள் அடங்கிய தொகுதி  'ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற மகுடத்தில் வெளியாகியுள்ளது. செங்கை ஆழியான்  பல்வேறு பிரதேச சமூகங்களை ஈழத்து நாவல் இலக்கியத்துக்கு அறிமுகம்  செய்துள்ளார். மீனவர்கள், சலவைத் தொழிலாளர்கள்  சுருட்டுத் தொழிலாளர்கள்,  விவசாயிகள் ஆகியோரது சமூகப் பிரச்சினைகளை அணுகியுள்ள அவரது படைப்புகளில்  சமூகப் பார்வை சிறப்புற அமைவதை அவதானிக்கலாம். ஈழத்து எழுத்தாளர்களுள்  போர்க்கால நிகழ்வுகளை அதிகளவில் இலக்கியமாக்கியவர் செங்கை ஆழியான் என்பதும்  குறிப்பிடத் தக்கதாகும்.

சிறுகதைத் துறையில் செங்கை ஆழியான் சுமார் 160கதைகள்வரை எழுதியுள்ளார்.

சிங்களப்  பத்திரிகைகளான ராவய, சிலுமின, லங்காதீப முதலிய பத்திரிகைகளில் இவரது  சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இதுவரை இவரது ஐந்து  சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 'இரவுநேரப் பயணிகள்" என்ற  தொகுதி வடக்கு கிழக்கு மாகாணப் பரிசினைப் பெற்றது. 'யாழ்ப்பாண  இராத்திரிகள்" என்ற தொகுதி இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசினையும்  தமிழ்நாடு லில்லி தேவநாயகம் நினைவு சிறப்புப் பரிசினையும் பெற்றது.  இரவுநேரப்பயணிகள் என்ற தொகுதி 'ராத்திரி நொன சாய்" எனச் சிங்களத்தில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

செங்கை ஆழியானின் சிறுவர் புதினங்களாக பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

செங்கை  ஆழியான் ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவரது  புனைகதைசாராப் படைப்புகளாக ‘இருபத்து நான்கு மணிநேரம், மீண்டும்  யாழ்ப்பாணம் எரிகிறது, 'களம் பல கண்ட கோட்டை", 'சுனாமி" ஆகியவை  வெளிவந்துள்ளன.

செங்கை ஆழியான் பல தொகுப்பு நூல்களை வெளிக்  கொணர்ந்துள்ளார். சம்பந்தன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள்,  முன்னோடிச் சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் நானும் எனது  கார்ட்டூன்களும், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் சிறுகதைகள்,  புதுமைலோலன் சிறுகதைகள், மல்லிகைச் சிறுகதைகள், சிங்களச் சிறுகதைகள் என்பன  இவற்றுள் அடங்கும்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி  ஞானம்  சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் செங்கை ஆழியானின் தொகுப்பு முயற்சிகள்  பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“பல்கலைக்கழகத்தில் செய்யவேண்டிய  ஒரு ஆராய்ச்சிக்கான முழுத்தளத்தையும் இத்தொகுப்பு முயற்சிகளின் மூலம்  செங்கை ஆழியான் செய்திருக்கிறார்.  ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப்  பங்களித்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் செய்த பணிகளையும் படைப்பாளிகளின்  படைப்பாக்க முயற்சிகளையும் இலக்கியச் செல்நெறியில் ஏற்பட்ட வளர்ச்சிப்  போக்குகளையும் அறிந்துகொள்ள இத்தொகுப்புகள் உதவுவதோடு வரலாற்றுத் தவறுகளைச்  சரிசெய்வதற்கும் பெரும் பங்காற்றியுள்ளன.”

செங்கை ஆழியானின் ஆய்வு  நூல்களாக ஈழத்தவர் வரலாறு, நல்லைநகர் நூல், யாழ்ப்பாண அரச பரம்பரை, Jaffna  Dynasty, ஈழத்துச் சிறுகதை வரலாறு, சுருட்டுக் கைத்தொழில் என்பன  வெளிவந்துள்ளன. மகாவம்சத்தை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.  யாழ்ப்பாண தேசம், பூதத்தம்பி என்னும் சிறிய நூல்களும் இவரால்  எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் ஈழத்துச் சிறுகதை வரலாறு இவரது ஆய்வு  முயற்சிகளின் மகுடமாகக் கருதப்படுகிறது.

 ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலுக்கு பேராசிரியர் அ. சண்முகதாஸ் வழங்கிய அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“ஈழத்துச்  சிறுகதை வரலாற்றைத் தெளிவாகவும் விரிவாகவும் முதன்முறை எழுதிவெளியிட்டவர்  என்ற பெருமையினைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொள்கிறார். தன்னுடைய  ஆக்கங்களுள் ஒரு துறையாகிய சிறுகதையின் வரலாற்றை முழுமையாக நோக்கியது  வியக்கத்தக்க விடயமல்ல. அது தற்செயல் நிகழ்ச்சியுமல்ல. எங்கள் நாட்டிலே  ஆக்க இலக்கியகாரர்களிற் பெரும்பாலோர் விமர்சகர்களாகவும் உள்ளனர். இந்த  வகையில் ஆக்க இலக்கியக் காரராகிய செங்கை ஆழியான் விமர்சகராகவும் நின்று  ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை நோக்கியுள்ளார்.”

க.குணராசா என்ற  இயற்பெயர் கொண்ட செங்கை ஆழியான் 25.01.1941இல் வண்ணார்பண்ணையில் கந்தையா -  அன்னம்மா தம்பதியினருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக்  கல்வியை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்.  இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும்  பெற்றார். புவியியல் சிறப்புப் பட்டதாரியான இவர், பின்னர் முதுகலைமாணிப்  பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  பெற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலுங்காலத்தில் செங்கை ஆழியான்  சிறுகதைத் துறையிலேயே கவனஞ் செலுத்தி வந்தார். தாம் எழுதியதோடு பிறரையும்  எழுதத் தூண்டி நின்றார். செம்பியன் செல்வனோடு இணைந்து பல இலக்கியச்  செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார். பல்கலைக்கழகச் சூழலில் நூல்  வெளியீட்டுக்கென ஓர் அமைப்பை செம்பியன் செல்வனுடனும் நவஜோதியுடனும் இணைந்து  இவர் உருவாக்கினார். பல்கலைக்கழக வெளியீடு என்ற பெயரில் அமைந்த இந்த  அமைப்பின் மூலம் கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள் ஆகிய  சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்தன. இத்தொகுதிகள் மூலம் பல புதிய எழுத்தாளர்கள்  ஈழத்துத் தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகமானார்கள். இவ்வாறு அன்றைய  காலகட்டத்தில் பலர் தமது ஆற்றல்களை இனங்கண்டு வெளிக்கொணர செங்கை ஆழியான்  ஓர் உந்து சக்தியாகச் செயற்பட்டார். இத்தகைய செயற்பாட்டினை அவர்  தொடர்ந்தும் தனது எழுத்துலக வாழ்க்கை முழுவதிலும் ஆற்றி வந்துள்ளார்.தனது  பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் பின்னர் யாழ். இலக்கிய வட்டத்துடன் இணைந்து  பல்வேறு இலக்கியச் செயற்பாடுகளை ஆற்றியதுடன் புதிய தலைமுறைகள் இலக்கிய  உலகில் அடியெடுத்து வைப்பதற்குத் தூண்டு கோலாக அமைந்தார்.

யாழ். இலக்கிய  வட்டத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும், பின்னர் அதன் தலைவராகவும்  விளங்கினார். இலங்கை இலக்கியப் பேரவையின் தலைவராகவும்  தமிழ் எழுத்தாளர்  ஒன்றியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

செங்கை ஆழியான்  தொழில்ரீதியாகப் பல பதவிகளை வகித்தவர் 1964 - முதல் 1971வரை ஆசிரியராகக்  கடமையாற்றியவர். 1971இல் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்திபெற்று  2001இல் ஓய்வு பெறும்வரை உயர் நிர்வாக சேவை அதிகாரியாகப் பல பதவிகள்  வகித்தவர். காரியாதிகாரி, உதவி அரசாங்க அதிபர், பிரதிக் காணி ஆணையாளர்,  பிரதேசச் செயலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர், வட பிராந்திய  ஆணையாளர், மாநகர ஆணையாளர் என அவர் வகித்த பதவிகள் அவரால் பெருமையுற்றன.

செங்கை  ஆழியான் ஓர் புவியியற் பட்டதாரி என்ற வகையில் பேராதனைப் பல்கலைக்கழகப்  பயிற்சியாளராகவும், கொழும்புப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகவும்  பின்னர் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். அக்காலத்தில்  கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக்கலாசாலை வருகைதரு விரிவுரையாளராகவும்  இருந்து நூற்றுக்கணக்கான புவியியலாளர்களை உருவாக்கியுள்ளார். ஐம்பதுக்கும்  மேற்பட்ட புவியியல் நூல்களை மாணவர்களுக்கென எழுதியுள்ளார்.

செங்கை  ஆழியான் ஞானம் சஞ்சிகைக்கு ஒரு விரிவான தொடர் பேட்டியை அளித்துள்ளார்.  அப்பேட்டி அவரது 50வருடகால இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவுசெய்வதோடு  ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கின் ஒரு வெட்டுமுகத்தை  வெளிக்காட்டுவதாகவும் அமைந்தது.

செங்கை ஆழியானின் பணிகளைப் பாராட்டி பல  நிறுவனங்கள் அவருக்குப் பட்டங்கள் விருதுகள் வழங்கிக் கௌரவித்துள்ளன.  'இலக்கியச் செம்மல்", 'புனைகதைப் புரவலர்", 'ஆளுநர் விருது", 'கம்பன் கழக  விருது" என்பன இவற்றுட் சிலவாகும். இலங்கை அரசின் இலக்கியத்திற்கான  ‘சாகித்தியரத்தினா அதியுயர் விருது இவருக்கு 2009இல் வழங்கப்பெற்றது.

செங்கை ஆழியானின் மனைவி கமலாம்பிகை ஓர் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், இவர்களுக்கு ரேணுகா, பிரியா, ஹம்சா என மூன்று பெண்பிள்ளைகள். ஈழத்து  எழுத்தாளர்களில் அதிக படைப்புகளைத் தந்தவர், அதிக இலக்கியச்  செயற்பாடுகளில் ஈடுபட்டவர், அதிக உயர் பதவிகளை வகித்தவர், அதிக கல்விச்  செயற்பாடுகளில் ஈடுபட்டவர் செங்கை ஆழியான்.

செங்கை ஆழியான் தனது 75ஆவது வயதில் அமரரானார்.

Comments