ஈழத்து தமிழ் நாவலுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து தமிழ் நாவலுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற தனது ஆய்வுநூலில் கலாநிதி நா. சுப்பிரமணியன் இளங்கீரனது நாவல் இலக்கியப் பங்களிப்பு பற்றிப் பின்வருமாறு விபரித்துள்ளார்:  

'ஐம்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர் என்ற வகையில் இளங்கீரன் வரலாற்று முக்கியத்துவம் உடையவராகின்றார். ஏறத்தாழ இருபது நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர் என்ற வகையில் மட்டுமல்லாது சமூகப் பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை அணுகி தீர்வுகூற விழைந்த முதல் நாவல் ஆசிரியர் என்ற வகையிலும் ஈழத்துத் தமிழ் நாவலுக்குத் தேசியச் சாயல் தரமுயன்ற முதல்வர் என்ற வகையிலும் இவருக்குச் சிறப்பானதோர் இடமுண்டு. இவரால் ஈழத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட பத்துத் தொடர் நாவல்களில் நூல்வடிவம் பெற்றவை தென்றலும் புயலும் (1955) நீதியே நீ கேள்! (1959) இரண்டுமாகும்.  

தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! இரண்டும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பகைப்புலத்திற் காதலைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டவை. முதலாவது நாவலிற் சாதியை மீறய காதலும் இரண்டாவது நாவலில் இனத்தை மீறிய காதலும் வெற்றி பெறுகின்றன. இரண்டிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்குட்பட்ட காதல்கள் தோல்வியடைகின்றன.  

யாழ்ப்பாணத்தில் உயர் சாதியைச் சேர்ந்த பாலுவின் குடும்பம் வீட்டை ஏலத்தில் இழந்து அல்லலுறுகின்றது. வேலை தேடிக் கொழும்புக்குச் சென்ற பாலு அங்கு பணக்காரப் பெண்ணான மனோன்மணியைக் காதலித்து உடலுறவும் கொள்கிறான். அந்தஸ்த்து வேறுபாட்டால் மனோன்மணி வேறொருவனுக்கு மனைவியாகிறாள். பாலு காதல் தோல்வியால் மனமுடைந்து வருந்துகிறான். பாலுவின் தங்கை தங்கம் தாழ்த்தப்பட்ட சாதியினன் எனப்படும் பூபதியைக் காதலித்துப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மணம் புரிந்து கொள்கிறான். பாலுவும் தந்தையும் மனத்துயர் தாழாமல் மரணமடைகின்றனர். தென்றலும் புயலும் நாவலின் இக் கதைப்போக்கில் ஆசிரியரின் குரலாக நடராசன் என்ற பாத்திரம் அமைகிறது. யதார்த்த சமூக நிலையை உணர்த்தும் சிந்தனையாளனாக இப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.  

தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோர் மீது உயர்சாதியினரெனக் கூறப்படுவோர் கைக்கொள்ளும் அடக்குமுறை, வெறுப்பு மனப்பான்மை என்பனவும் பொருளாதார நிலையிலே தாழ்ந்த வேளையிலும் சாதிப்பிடிப்பை விட்டு நீங்கா மனவியல்பும் இந்நாவலில் காட்டப்படுகின்றன. தங்கம் தனது சாதியை மீறிப் பூபதியைக் கரம்பற்றுவதாகக் காட்டுவதன் மூலம் இளங்கீரன் தனது சமூக மாற்ற விருப்பத்தின்படியான தீர்ப்பை அவள்மீது சுமத்தியுள்ளார் எனலாம்.  

தென்றலும் புயலும் நாவல் தொட்டுக் காட்டிய வர்க்கவேறுபாட்டை விரித்து வளர்த்துக் காட்டுவது நீதியே நீ கேள்! நாவல். இரண்டு நாவல்களிலும் சில பொதுப்பண்புகள் உண்டு. சமூக ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் பொதுவுடமைத் தத்தவத்தினூடாக அணுகித் தீர்வுகாண விழைகிறார் இளங்கீரன். தென்றலும் புயலும் நாவலில் அரும்பிய இக்கண்ணோட்டம் நீதியே நீ கேள்! நாவலில் விரிவடைந்து அடுத்துவந்த நாவல்களில் மேலும் தெளிவாக வற்புறுத்தப்படுவதைக் காணலாம் (பக் 65-67;)  

இளங்கீரன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் தையல் தொழிலாளியான சுல்தான் மொஹிதீன் - நாச்சியா தம்பதிகளின் புதல்வராகப் 04-01-1927அன்று பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முஹம்மது கலீல். இருந்தபோதிலும் இவர் வீட்டில் சுபைர் என்றே அழைப்பட்டார்.  

1933இல் இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்திலுள்ள கிளினர் கல்லூரியில் கற்றார். இவரது காலில் ஏற்பட்ட சுகயீனம், பொருளாதார வசதியின்மை போன்ற காரணங்களால் 1940ஆம் ஆண்டில் ஏழாம் வகுப்புடன் பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொண்டார். 

இவர் பிறந்தது முதல் இருபதாவது வயதுவரை யாழ்பாணத்திலேயே வாழ்ந்தார். யாழ்ப்பாணத்தின் இயற்கைச்சூழல், சமூக அமைப்பு, சுரண்டல் சீர்கேடுகள் என்பவற்றோடு முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய சாதி அமைப்பு தீண்டாமை போன்ற மனித நேயத்திற்கெதிரான சமூகக் குறைபாடுகளையும் இவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு பல நாவல்களை பிற்காலத்தில் அவரால் எழுத முடிந்தது.  

இளங்கீரன் 1947ஆம் ஆண்டில் மலேசியா சென்றார். இவரது தந்தை தொழில்தேடி ஏற்கனவே அங்கு சென்றிருந்தார். அங்குதான் இவர் முதன்முதலில் தனது எழுத்துப்பணியை இளங்கீரன் என்ற புனைபெயரில் ஆரம்பித்தார். அங்கு கோலாலம்பூரில் வெளிவந்த ஜனநாயகம் என்ற தினசரியில் இரண்டாவது உலக யுத்தத்தின்பின் உலகநிலை| என்ற கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரையே இளங்கீரனின் எழுத்துலகப் பிரவேசத்தின் கன்னி முயற்சியாகும். தொடர்ந்து பல அரசியல் கட்டுரைகளை எழுதினார்  

அக்காலத்தில் இவர் இனமணி என்ற வார இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் எழுதிய காரசாரமான அரசியற் கட்டுரைகள் அதிகாரவர்க்கத்தினருக்குப் பிடிக்காததால் கெடுபிடிகளுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாக்கப்பட்டார்; நாட்டைவிட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டார்.  

1950ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்றடைந்தார். அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளின் தாக்கம் பெரிதும் காணப்பட்டது. இவர் சென்னையில் இருந்தபோது வெளியிட்ட நாவல்கள் பெரும்பாலும் திராவிட முன்னேற்றக்கழகப் பாணியிலேயே அமைந்திருந்தன.  

இவ்வாறு கடல்கடந்த நாடுகளில் தமது இலக்கிய வாழ்வின் முதற் கட்டத்தை முடித்துக் கொண்டு இளங்கீரன் 1954ஆம் ஆண்டு இறுதியில் தாய்நாட்டுக்குத்திரும்பினார். இக்காலப்பகுதியை அடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் முதன்மை பெற்ற ஸ்தாபனமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற்பட்டது. 1954ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தின் தோற்றத்திற்கு மூலகர்த்தாவாகவும் அதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகவும் இளங்கீரன் செயற்பட்டார. அத்தோடு 1955ஆம் ஆண்டில் யாழ். கிளைத் தலைவராகவும் செயற்பட்டார். இவரது நாவல்கள் பல இக்காலகட்டத்தில் தினகரன் பத்திரிகையில் தொடர்கதைகளாக வந்தன.  

1961ஆம் ஆண்டில் இளங்கீரன் மரகதம் என்ற கலை இலக்கியத் திங்கள் இதழை வெளியிட்டார.; இச்சஞ்சிகை நான்கு இதழ்களுடன் நின்றுவிட்டது.  

1960ஆம் ஆண்டில் இளங்கீரன் கொம்யூனிஸ்ட பத்திரிகையான தேசாபிமானியின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1965ஆம் ஆண்டு தொடக்கம் 1970ஆண்டுவரை தொழிலாளி என்ற பத்திரிகைக்கும் 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1977வரை ஜனவேகம் என்ற பத்திரிகைக்கும் ஆசியராகக் கடமையாற்றியுள்ளார்.  

1970ஆம் ஆண்டு தொடக்கம் 1973ஆம் ஆண்டுவரை மருதமுனையில் வாழ்ந்தார். 1973இலிருந்து 1987வரை கொழும்பில் வாழ்ந்த இளங்கீரன் 1987இல் நீர்கொழும்புக்கு தனது மூத்த மகளுடன் இடம் பெயர்ந்தார். பின்பு 1990ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்.  

இவரது இலக்கிய முயற்சிகளுள் நாவல்களே பிரதான இடம் பெற்றுள்ளன.  

இளங்கீரன் 1950ஆம் ஆண்டில் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். சில சிறுகதைகள் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. இவரது 10சிறுகதைகள் கொண்ட தொகுதி ஷநிறைவைத்தேடி| என்ற மகுடத்தில் வெளிவந்தது.  

இளங்கீரன மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நாடகங்கள் தடயம் என்ற பெயரில் 1992இல் நூலாக வெளிவந்தது.  

வானொலிக்காக 12நாடகள்வரை எழுதியுள்ளார். இவர் எழுதிய வானொலி நாடகங்ளில் ஐந்து நாடகங்களின் தொகுப்பு ஷவெறுங்கனவல்ல| என்ற தலைப்பில் நூலுருவம் பெற்றுள்ளது.  

இளங்கீரன் இலங்கை வானெலியில் பல்துறை சம்பந்தமான உரைகளை ஆற்றியுள்ளார்.  

இவர் எழுதிய கட்டுரைகள் சில நூலுருவம் பெற்றுள்ளன. அவையான, ஆணும் பெண்ணும் (1954) இலங்கையின் இருமொழிகள் (1957) பாரதிகண்ட சமுதாயம் (1955) பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும் (1992) தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கமும் (1994) என்பனவாம்.  

இளங்கீரனது பணிகளைப் பாராட்டி 1992இல் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தாஜுல் இதீப் என்ற பட்டத்தையும் இந்து கலாசார அமைச்சு இலக்கியச் செம்மல் என்ற விருதினை வழங்கியது.

1993ஆம் ஆண்டு சுதந்திர இலக்கிய விழாவிலும் கௌரவிக்கப்பட்டார். மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 80ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 1996ஆம் ஆண்டில் விஷ்வ பிரசாதினி என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  

(சுபைர் இளங்கீரன் பற்றிய விபரங்கள் திருமதி றாஹிலா ஸியாட் எழுதிய ஈழத்துப் புனைகதை உலகின் சாதனையாளர் என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை. அவருக்கு எனது நன்றி)  

இளங்கீரன் 12 செப்டெம்பர் 1997இல் அமரரானார்.  

Comments