சாதியத்துக்கு எதிரான முதலாவது சிறுகதையை எழுதிய பண்டிதர் சச்சிதானந்தன் | தினகரன் வாரமஞ்சரி

சாதியத்துக்கு எதிரான முதலாவது சிறுகதையை எழுதிய பண்டிதர் சச்சிதானந்தன்

'12.02.1939இல் ஆனந்தன் என்ற பெயரில் பண்டிதர் சச்சிதானந்தன் எழுதிய தண்ணீர்த்தாகம் என்ற சிறுகதையே சாதியத்துக்கு எதிரான முதலாவது தமிழ்ச் சிறுகதை என்ற கணிப்பைப் பெற்றது. இக்கதை ஈழகேசரியில் வெளிவந்ததாகும். இவரது எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் தண்ணீர்த்தாகமும் ஒன்றாகும். அது எழுதப்பட்ட காலகட்டத்தையும் அது கூறுகின்ற சமூகச் செய்தியையும் கவனத்திற்கு எடுக்கும்போது வியப்பும் பெருமிதமும் ஏற்படும். யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கொடுமையை முதன்முதலில் கருப்பொருளாக்கி மக்கள்முன் தூக்கி வைத்தவர் அவர். சமூகத்தின் எரியும் பிரச்சினையை அவர் கையாண்டிருக்கும் முறைமையும் அதனூடாக அவர் கூறும்  செய்தியும் 1956களின் பின்னரும் ஈழத்தின் நவீன சிறுகதை ஆசிரியர்களால் கையாளப்பட்டு வருகின்றன. இச்சிறுகதை சாதிய அடக்கு முறை அவலத்தையும் மானிட நேயத்தையும் சித்திரிக்கின்றது. 1939இல் இவ்வாறான சமூகப்பிரச்சினை கொண்ட சிறுகதையாக தண்ணீர்த்தாகம் எழுதப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய அம்சமாகும். சாதிய ரீதியான அடக்கியொடுக்கல் உச்சமாக விளங்கிய ஒரு காலகட்டத்தில் ஆனந்தன் துணிந்து இவ்வாறான சிறுகதையைப் படைத்துள்ளமை அவரின் சமூகப்பார்வையின் புரட்சிகரச் சிந்தனையை தெளிவாகக் காட்டுகின்றது'   என கலாநிதி செங்கை ஆழியான க. குணராசா குறிப்பிட்டுள்ளார். (ஞானம் ஆகஸ்ட் 2010 /-12/3)

நடேசையர் என்ற பிராமணர் தன் அனுட்டானத்திற்குச் செம்பில் நிறைத்து வைத்திருந்த நீரை மீனாட்சி என்ற இழிகுலப் பெண் தண்ணீர் தாகத்தால் எடுத்து அசுத்தம் செய்து விடுகிறாள். அதனால் ஆத்திரமடைந்த நடேசையர் அப்பெண்ணைச் செம்பினால் அடித்துக் காயப்படுத்தி விடுகிறார். காலக்கழிவில் மரணதாகத்தினால் படுக்கையில் யாருமின்றித் தவிக்கும் நடேசையருக்கு இறுதியில் மீனாட்சியே தண்ணீர் தருகிறாள். அவர் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு உயிரை விடுகிறார். இதுதான் தண்ணீர்த்தாகத்தின் கதையாகும்.

பண்டிதர் க. சச்சிதானந்தன் தும்பளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவருக்கும் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த தெய்வானைப்பிள்ளைக்கும் 19.10.1921இல் மகனாகப் பிறந்தார்.

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றிலும் பெற்ற பின்னர் தனது உயர்கல்வியை பரமேஸ்வராக் கல்லூரியில் பெற்றார். தனது தந்தையாரிடம் வானியல், சோதிடம் என்பவற்றைக் கற்ற இவர் சிவப்பிரகாசதேசிகர், சுப்பிரமணிய சாஸ்திரிகள், பாலசுந்தரக் குருக்கள் ஆகியோரிடம் சமஸ்கிருதக் கல்வியைக் கற்றார்.

1941ஆம் ஆண்டு இலங்கை இந்தியா இரு நாடுகளிலும் மதுரைப் பண்டிதர் பரீட்சையில் முதன்மைச் சித்தியடைந்தார். பண்டிதக் கற்கை நெறியில் வழிவந்தவராயினும் இலண்டன் பல்கலைக்கழக London Inter Science பரீட்சையில் சித்தியடைந்தார். 1978ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகம் சென்று ஆய்வு செய்து உளவியல்  எம்.பில். பட்டம் பெற்றார்.

1939ஆம் ஆண்டில் இலக்கியப் பிரவேசம் செய்த இவர், கவிதை, நாவல், காவியம், இலக்கணம், வானியல், இலக்கிய ஆய்வு, சமஸ்கிருதப் புலமை, சரித்திர ஆய்வு, நாடகங்கள், சித்திரங்கள், சிறுவர் இலக்கியம் என்பவற்றினூடாக இலங்கைத் தமிழிலக்கிய வளர்;ச்சிக்குப் பெரும் பணியாற்றினார். ஆனந்தன், யாழ்ப்பாணன,; பண்டிதர், சச்சி என்பன இவரது புனைபெயர்களில் சிலவாகும்.

நீர்கொழும்பு சென்ற்மேரிஸ் கல்லூரி, உடுவில் மகளிர்    கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கணித ஆசிரியராகவும், யாழ் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

1962-/1965காலப்பகுதியில் அரசின் பாடநூற்சபை எழுத்தாளராக விளங்கியதுடன், ஆசிரிய கலாசாலையின் உளவியற் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போதே இவருக்கு வெண்பா எழுதும் வல்லமை கைவரப்பெற்றிருந்தது. காதலியின் கையெழுத்து என்ற இவரது முதற்கவிதை இந்திய நவசக்தி சஞ்சிகையில் வெளிவந்தது. 1955இல் இவரது 'ஆனந்தத்தேன்' என்ற கவிதை நூல் வெளியானது.

இவர் எழுதிய முதலாவது  காவியம் யாழ்ப்பாணக் காவியம் ஆகும்.  இது 2088பாடல்களைக் கொண்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு காலகட்ட (கி.பி. 1450-67) சித்திரிப்பாய் அமைந்த இக்காவியம் தமிழ்த் தேசியப்பற்றை எடுத்தியம்புவதாய் அமைகிறது. இக்காவியம் இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு, வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, சம்பந்தர் விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டது.

'பருவப் பாலியர் படும்பாடு' என்ற காவியம் 1983இனக்கலவரம், தமிழ்த்தேசிய எழுச்சி, போர்க் கொடுமைகள், இளம் வயதினரின் பாலியல் நெருக்கடிகள் குறித்துப் பேசுகிறது. இக்காவியத்தில் 4400பாடல்கள் அடங்கியுள்ளன.

எடுத்த மலர்களும் தொடுத்த மாலையும் என்னும்      நூலிலே  மேற்குறிப்பிட்ட காவியத்தின் இரண்டாம் பகுதி இடம்பெற்றுள்ளது. இதுதான் ஆசிரியரின் தொடுத்த மாலையாக அமைகிறது. எடுத்த மலர்களாக பல கவிதைகளும் கவிதை நாடகங்களும் இந்நூலிலே இடம்பெற்றுள்ளன.

இவர் மஞ்சு மலர்க்கொத்து (2003) என்னும் பாலர் பாடத்தொகுதியை வெளிக்கொணர்ந்தார். இப்பாடல்கள் நான்கு வயதுக்கும் ஏழு வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் பாடி மகிழ்வதற்கு ஏற்றவை என நூலில் குறிப்பு உள்ளது. பாடல்களுக்குரிய இசைமெட்டுக்கள், பியானோ வாத்தியக் குறிப்புகள் இந்நூலில் அச்சிடப்பட்டுள்ளன.

இவர் ஈழகேசரியில் 12-.07-.1942முதல் 20.12-.1942வரை தொடராக எழுதிய அன்னபூரணி என்ற நாவல் பின்னர்  நூலுருப் பெற்றது. இந்நாவல் பல புனைகதை ஆசிரியர்கள் உருவாக முன்னோடியாக அமைந்தது. 

இவர் ஆங்கிலத்தில் 2002இல் எழுதிய Fundamental of Training Prosody (தமிழ் யாப்பிலக்கண அடிப்படைகள்) என்ற நூல் கவிதைக்கு ஓசை முக்கியம் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. இந்நூல் தமிழிலக்கணத்தை உலகுக்கு அறிவிக்கும் நூலாக அமைந்தது. Foot Printed of our Fathers தமிழினத்தின் வரலாற்றையும் அரசியலையும் உலகுக்கு விளங்க வைக்கும் நூலாகும்.

1945-_-1946காலப்பகுதியில் யாழ்நூல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுவாமி விபுலானந்தருக்கு ஆராய்ச்சித் துணைவராக விளங்கியவர் இவர். அதனால் ஆய்வுத்துறையில் இயல்பாகவே இவருக்கு மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் இருந்தன. 'தமிழர் யாழியல்' (1997) என்ற இவரது ஆய்வு நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசைப்பெற்றது.

இவரது மற்றுமொரு ஆய்வு நூல் 'மஞ்சுகாசினியம்: இயங்கு தமிழியல்' (2001). இந்நூல் தொல்காப்பியம்    நன்னூல் ஆகிய இலக்கண நூல்களின் அடிப்படையில் தமிழ் இலக்கணத்தை புதியவகையிலும் எளிமையாகவும் எடுத்துச் சொல்லியது.

இலங்கைத் தமிழரின் அரசியலில் முக்கிய பங்காற்றிய தமிழரசுக் கட்சியின் தோற்றுவாயாக, மூலகர்த்தாவாக விளங்கியவர்களில் இவரும் ஒருவர். தமிழரசுக் கட்சியின் அகிம்சை வழிப் போராட்டங்களில் இணைந்து தடுப்புக்காவலில் வைக்கப் பட்டவர். அக்காலத் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் இவரது 'சாவிற்றமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்' என்ற பாடல் பிரபலம் பெற்றிருந்தது.

இவர் ஆங்கிலத்தில் Ceylon Daily News பத்திரிகையில் எழுதிய உளவியற்கட்டுரை, யாழ். பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது சமர்ப்பித்த வானியல் ஆராய்ச்சி பற்றிய கட்டுரை, ஆரிய திராவிடபாஷா விருத்திச் சங்கத்தில் படிக்கப் பட்ட தமிழ்ஒலி மூலகங்கள் (1989) தொடர்பான கட்டுரை, கலாநிதி கு.சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல் (1990) கட்டுரை, யாழ். பல்கலைக் கழகத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (1991) பற்றியகட்டுரை உள்ளிட்ட ஏராளமான முக்கிய கட்டுரைகள் தொகுக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன.

பண்டிதர் சச்சிதானந்தன் ஆரிய திராவிடபாஷh விருத்திச் சங்கத்தின் உப தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து சங்கத்தின் வளர்ச்சிப்பாதையில் பங்கேற்றவர். பிற்பட்ட காலத்தில் இச்சங்கத்தின் காப்பாளராகவும் பரீட்சகராகவும் விளங்கியவர்.

இவரது இலக்கியப் பணிகளைக் கௌரவிக்கும் முகமாக, சம்பந்தன் விருது (2001), வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது (2004), தந்தை செல்வாக நினைவு விருது (2004), இலங்கை இலக்கியப் பேரவை விருது (2005), கலாகீர்த்தி தேசிய விருது (2005) ஆகியவை  வழங்கப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. அரச உயர் இலக்கிய விருதான சாஹித்யரத்னா விருதினை  2006ஆம் ஆண்டு பெற்ற பண்டிதர் சச்சிதானந்தன் தனது 87ஆவது வயதில் 21-.03.-2008 அன்று அமரரானார்.

Comments