ஈழத்து உருவகக்கதை முன்னோடி சு.வே. | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து உருவகக்கதை முன்னோடி சு.வே.

“உருவகக் கதை என்கிற கடினமான கதை சொல்லுந்துறையுட் புகுந்து, முதலாவது வெற்றியை ஈட்டிய பெருமை சு.வேலுப்பிள்ளை (சு.வே)யைச் சாரும். பாரதரத்தினம் சக்கரவர்த்தி இராஜ கோபாலச்சாரி ராஜாஜியால் புகழப்பட்ட மணற்கோவிலையும் வாசகர் பலராற் பாராட்டப்பட்ட வெறுங்கோவிலையும் எழுதித் தானொரு பண்பாடான சிந்தனைமிக்க ஒர் எழுத்தாளர் என்பதை நிலை நாட்டிவிட்டார். இவருடைய வர்ணனை அழகுகள், கற்பனை நயங்கள், தனிச்சிறப்பு வாய்ந்தன. நடையிலே சுத்தமும் ஓட்டமும் உண்டு. பாற்காவடி, மண்வாசனை போன்ற பல நல்ல சிறுகதைகளை எழுதி, தாம் ஒரு சிறுகதையாசிரியர் என்பதையும் நிரூபித்துள்ளார்” என கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்றஆய்வு நூலில் சு.வே. பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (பக்கம்: 42). 

தமிழக மூதறிஞரான ராஜாஜி சு.வே. எழுதிய மணற் கோயில்| என்ற உருவகக் கதையைப் படித்துவிட்டு, தன்னுடன் இருந்த அறிஞர்களுக்கு அதனைக் காண்பித்து,“ஆஹா! இதுவல்லவா சிறந்த உருவகக்கதை" என விதந்து பாராட்டினாராம். இக்கதை கலைச்செல்வி சஞ்சிகையில் வெளியானது. 

வாழ்க்கை வெளிப்படுத்துகின்ற உண்மைகளையும் இயற்கையின் தன்மைகளையும் எடுத்துக்கூறி மக்களின் உள்ளங்களில் பதியவைப்பதற்கும் அவர்களைச் சிந்திக்க வைப்பதற்கும் உருவகக்கதைகள் இலக்கிய உலகில் பெரும் பங்களிப்பினைச் செய்கின்றன. வாழ்க்கைத் தத்துவங்களையும் அதன் உண்மைகளையும் பல்வேறுபட்ட மிருகங்கள், ஜீவராசிகள், இயற்கை சக்திகள் வழியாக காண்பிப்பது உருவகக்கதை. 

சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதியினருக்கு 24-05-1921இல் மகனாகப் பிறந்த சு. வேலுப்பிள்ளை ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியர். ஒரு தமிழ்ப் பண்டிதர். திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிபெற்ற பின்னணி இவரைப் புத்திலக்கியப் படைப்பாளியாக உருவாக்கியது. 

1946முதல் 1981வரை ஆசிரியப் பணிபுரிந்தசு. வே, தான் பெற்ற அனுபவங்களையே கருப்பொருள்களாகக் கொண்டு தனது படைப்புகளை ஆக்கித் தந்துள்ளார். 

சு.வே. சிறுகதை,உருவகக்கதை, கட்டுரை, நாடகம் ஆகிய இலக்கியத்துறைகளில் தடம் பதித்தவர். ஈழத்து உருவகக்கதைத் துறையின் முன்னோடிஇவரே. இவரது உருவகக் கதைகள் மித்ர வெளியீடாக 1999இல் மணற்கோயில் என்ற மகுடத்தில் தொகுப்பாக வெளிவந்தது. 

உருவகக் கதைகள் பற்றி சு.வே. தனது மணற்கோயில் தொகுப்பின் கபாடம் திறமினோ| என்ற முன்னுரையில் பின்வருமாறு விளக்கியுள்ளார்: 

“இன்று உருவகக் கதைகள் எனப்படுபவற்றை உற்று நோக்கினால், உருவகக் கதைகளிலே சாதாரண உருவகத்தின் அமைப்பு உண்டு. உள்ளுறை உவமத்தின் சாயல் குறிப்பிடத்தக்க அளவு படிகிறது.

இறைச்சிப் பொருளின் நிழல் பெருமளவில் விழுகிறது. எனவே இந்த உருவகக் கதை என்ற பண்டமானது உருவகம், உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள் என்ற மூன்றின் கூட்டுறவால் பிறந்த ஒன்று எனக்கொள்ளல் பொருத்தமுடைத்து. இது சிறுகதையை வடிவமாக – உருவகமாகக் கொண்டு உலாவிவருவதால் அந்தப் பெயர் பூண்டிருக்கலாம்.   உருவகக் கதை, தன்னாற் கொள்ளப்பட்டுக் கருவுயிர்க்கப்பட்ட வித்தின் வன்மையிலேயே உயிர் வாழ்கிறது. அந்த உயிர்ப் பொருளே உரிப்பொருள். உரிப்பொருள் சம்பிரதாய எல்லைகளுக்குட்பட்டோ, வழிவழியாகப் பலராலும் எச்சிற்படுத்தியவற்றைச் சுற்றியோ எழவேண்டுமென்ற நியதியில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பது பிணத்துக்கு மாலைசூட்டி அழகு பார்ப்பதையொத்தது. முக்கால உலக நிகழ்ச்சிகளுக்குள்ளே பலபல வேளைகளிலே பலபல பொருள்கள் மின்னற் கீற்றுப்போலத் துடித்து நெளிவதைச் சிந்தனையாற்றல் கொண்டு காணல்முடியும். அந்தப் பொருள்களே தத்துவங்கள். உண்மையென்பது அவற்றின் மறுபெயர். அந்த உண்மை சமய தத்துவமாகவோ அரசியற் தத்துவமாகவோ பிறவாகவோ அமையலாம். தத்துவங்கள் கால தேச வர்த்தமானங்களையும் மரபுகள் என்று பெரிதுபடுத்துவனவற்றையுங் கடந்து நிற்கும் நிலைபேறுடையவை. கூர்த்த மதிகொண்டு தேடிக்கண்டறிய வேண்டியவை. அந்தத் தத்துவங்களுளொன்றை மையப் பொருளாக, உரிப் பொருளாகக் கொண்டு அதனை அழகாகவுந் தெளிவாகவும் காட்டுவதற்கு எழுந்த ஓர் உத்தியே உருவகக் கதை. எனவே, அதன் உரிப்பொருள் மிகமிக வலுவுடையதொன்றாக அமைய வேண்டும். அக்கினியைப் போன்ற தூய்மைவாய்ந்த உரிப்பொருளின் வன்மையே உருவகக் கதையின் ஆயுளை நிர்வகிக்கிறது என்று கூறினால் அதுவே எற்புடையதுபோலத் தோன்றுகிறது. 

உருவகக்கதையின் உரிப்பொருளாகிய தத்துவம் மனங்கவரக் கூடிய, அழகியதோர் உருவமாக வடிவங்கொள்ளுதல், அடுத்து இன்றியமையாததாகின்றது. நிர்ச்சலனமான குளத்தின் நடுவிலே எறியப்பட்ட கல்தோற்றுவித்த அலைவட்டங்கள், ஒன்றையொன்று உந்தி விரிவடைந்து பெரியதொரு வட்டமாகக் கரையைத் தொட்டு முடிவதுபோல, மனத்திலே கொள்ளப்பட்ட தத்துவப் பொருளான உரிப்பொருள் கருப் பொருள்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, கற்பனை அலைகளை எழுப்பி விரிபு பட்டுச் செல்லும். நீரிலெழுந்த வட்டங்களின் மையம் கல்லெறியப்பட்ட இடமாகிவிடுவது போல மனத்தெழுந்த கற்பனையலைகளின் மையம் தத்துவப் பொருளாக அமைகிறது. இந்நிலையில் உரிப்பொருளை விரிவு படுத்தற்கேற்ற கருப்பொருளும் அதனைப் பற்றிப் படர்ந்து செல்லும் கற்பனைத் திறமும் உருவகக்கதையின் மற்றைய அமிசங்களாக விளங்குவதைக் காணல்முடியும்.அந்தக் கருப்பொருள் மனிதனாகவோ, மரமாகவோ, மிருகமாகவோ, முகிலாகவோ, நதியாகவோ அன்றி உலகியலக்கப்பாற்பட்ட கடவுளாகவோ, சாத்தானாகவோ இருக்கலாம். இயங்கும் திணைப்பொருளாகவோ, நிலைத்திணைப் பொருளாகவோ இருக்கலாம். ஆனால் அவை கற்பனையின் பூரண மதர்ப்பினாலே ஆட்கொள்ளப்பட்டுப் பேசும், பிணங்கும், உயர்வுதாழ்வு காட்டி வாதிடும், மோனத்தவம் பரியும், சிரித்துக் கும்மாளங்கொட்டும். அவை எச்செயலைச் செய்தாலும் அவைகளும் அவைகளுக்குச் செயல்களைக்கற்பித்து, அவைகளை ஆட்கொண்ட கற்பனையும், தாம்பிறந்த இடத்தை, தத்துவப் பொருளை- குறிப்பாகக் காட்டிக் கொண்டிருக்கும். 

உரி, கரு, கற்பனை என்ற மூன்றின் சேர்க்கையாலும் மனத்தகத்து உருவகக் கதையென்றொரு கர்ப்பம் விளைந்து விட்டாலும் அதனை வெளிக்கொணர்ந்து வாசகர்களிடையே பரிமாற்றஞ் செய்வதற்கேற்ற சொல்லுந்திறன் உருவகக் கதையின் மற்றோரம்சமாக அமைகிறது.” 

சு.வே.யின் முதற் சிறுகதை கிடைக்காத பலன் 1943ல் ஈழகேசரியில் வெளியானது. இவரது சிறுகதைகள் மண்வாசைன, பாற்காவடி ஆகிய மகுடங்களில் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.  

இவரது சிறுகதைத் தொகுதி பாற்காவடிக்கு முன்னுரை எழுதிய செங்கை ஆழியான் தனது முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சு.வே.யின் சிறுகதைகள் வெறும் கற்பனாவாதப் பிரசவங்களல்ல. அவை இந்த மண்ணின் வாழ்வையும் வளத்தையும் அவலத்தையும் ஆழமாகப் பேசுவன. யதார்த்தப் படைப்புகள், தேசிய இலக்கியம் என்பதற்குத் தக்க எடுத்துக் காட்டுகளாக அமைவன. 1943-1950களிலேயே சு. வே.யின் படைப்பிலக்கிய நோக்கு மிகத் தெளிவாக, இந்த மண்சார்ந்ததாக இருந்திருக்கிறதென்பதற்கு பாற்காவடி(1947), மனித மிருகம் (1944), கிடைக்காத பலன் (1943) என்பன தக்க உதாரணமாகும் கதைகளாகும். அந்தத் தேசிய இலக்கிய நோக்கு 1950-1970களில் மிகவும் ஆழமாகவும் கனதியாகவும் மண்வாசனை (1963), பெரியம்மா (1962) ஆகிய சிறுகதைகளில் படிமப்பட்டுள்ளது. சு.வே. தனது சிறுகதையில் இந்த நாட்டினையும் அதில் வாழ்ந்துவரும் மக்களையும் மட்டுமே சித்தரித்துள்ளார் என்பது மிக முக்கியமான அம்சம். மண்வாசனைக் கதைகள் அவருடையவை. நவீன சிறுகதையின் அழுத்தமான பண்புகளைக் கொண்டவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சு. வே. நாடக பிரதியாக்கத் துறையிலும் ஆழமாகத் தடம்பதித்துள்ளார். 1965இல் இலங்கைக் கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டியில் வஞ்சி என்ற ஓரங்கநாடகம் முதற்பரிசு பெற்றது. அடுத்த ஆண்டில் எழிலரசி என்ற முழுநீள நாடகம் முதற்பரிசு பெற்றது. 1960இல் இலங்கை வானொலி நாடகப் போட்டியில் இவரின் மண்வாசனை முதற்பரிசு பெற்றது. 1968இல் ஒருமை நெறித்தெய்வம் என்ற நாடகம் பரிசு பெற்றது.  

சு.வே. பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, ஏட்டிலிருந்து (16வாரங்கள்), கிராமராஜ்யம் (32வாரங்கள்), பொன்னாச்சிக் குளம் (97வாரங்கள்), நவயுகம் (12வாரங்கள்) தொடராக ஒலிபரப்பட்ட நாடகங்களாகும். 

இலங்கை வானொலியில் சு.வே. தொடர் உரைகளையும் நடத்தியுள்ளார். இலக்கிய இரசனை’ (32வாரங்கள்),‘திருக்குறட் சித்திரம்’(36வாரங்கள);,‘நாட்டுக்கு நல்லது’(24வாரங்கள); என்பன இவரது வானொலித் தொடர் உரைச் சித்திரங்களாகும்;. 

சு.வே. எழுதிய சந்திரமதி, குகன் ஆகிய சிறுவர்கதைகள் சு.வே.யின் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்புகளாகும். சு. வே. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் கடமை ஆற்றியவேளை மாணவர்களுக்கான பல பாடநூல்களையும் எழுதியுள்ளார். 

பிரமச்சாரியாகத் தவவாழ்வு வாழ்ந்த சு.வே, 22-.06-.2007இல் அமரரானார். 

Comments