இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க, இணையத் தமிழ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள, தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் தமிழின் நிலைகுறித்து ஆராய உயர்கல்வியில் இணையத்தமிழ் குறித்த ஆய்வுகளை முன்னெடுக்க, இளம் திறமைகளை அடையாளம் காணுவது உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாக கொண்டு உலகத் தமிழ் வர்த்தக சங்கம் சார்பில்ஜூன் 28,29 ஆம் திகதிகளில் பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய புதிய அரங்கில் நடைபெற உள்ளது.
அந்நிகழ்வு தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழ்நாடு மென் ஆளுமை முகமை (TNeGA), மென்பொருள் தகவல் தொழில்நுட்ப பூங்கா இந்தியா (STPI) போன்ற அரசு நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாக வளர்ந்திருந்தாலும், தமிழ் மொழி மென்பொருள் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. அதேபோல தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ஆண்டுக்கு 2.25 மில்லியன் டொலரிலும் உள்நாட்டு வர்த்தகத்தில் 2.5 மில்லியன் டொலரிலும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத்துறை செயல்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட் ஆப்ஸ், கணனி நிறுவனங்கள், மென்பொருள் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், மார்க்கெட்டிங் ஏஜென்சி, ரோபோடிக் போன்ற நிறுவனங்கள் அரங்கம் அமைக்க உள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்தரங்கத்தில் கருத்துரைக்கவும் கணனித் துறை சார்ந்த தொழில் வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் அறியவும், தங்களுடைய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி முதலீடுகளை ஏற்கவும், தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பெரு நிறுவனங்களின் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் தமிழ் மென்பொருள் உருவாக்கம், கையடக்கக் கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடு தொழில் நுட்பம்,செயற்கை நுண்ணறிவு, (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), “தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” (Tamil Robotics and Language Processing), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம் மின் ஆளுமை, ஆய்வுக் கட்டுரைகள் படைத்தல், குழு விவாதங்கள், நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதன்மை உரைகள், நிரலாக்கப் போட்டிகள் கண்காட்சி அரங்குகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறும். இந்தப் பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கம் அடுத்துவரும் சவாலான தொழில்நுட்ப யுகத்தை இன்றைய தலைமுறை எதிர்கொள்வதற்கான அடித்தளங்களை அமைத்துத் தரும் என உலகத்தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார். தொடர்புக்கு +60166167708