இத்தாலியன் ஏர் ஃபோர்சில் மெக்கானிக்காக இருந்த Ferruccio Lamborghini, தன் உழைப்பால் உயர்ந்து “லம்போகினி” என்ற டிராக்டர் தொழிற்சாலையைத் துவங்கினார்.
இவர் கார்கள் தயாரிக்கத் துவங்கியதற்குப் பின்னால் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. டிராக்டர் தயாரிக்கும் கம்பெனியாக இருந்த லம்போகினியை கார்கள் தயாரிக்கும் கம்பெனியாக மாற்றிய பெருமை ஃபெராரி காரையும், அதன் கம்பெனி சொந்தக்காரரையுமே சேரும் என்றால் நம்ப முடிகிறதா?
கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த லம்போகினி, தன் முதல் ஃபெராரி 250GT மாதிரி காரை 1958ஆம் ஆண்டு வாங்கினார். ஆனால் ஃபெராரி கார்கள் மிகுந்த சத்தத்துடனும், தினசரி பயணங்களுக்கு கடினமானதாகவும் இருப்பதாகவும் நினைத்தார் லம்போகினி, தன் ஃபெராரி காரின் க்ளர்ச் உடைந்துபோனபோது அந்த க்ளர்ச் தன் கம்பெனி டிராக்டர்களின் க்ளர்ச் போலவே இருப்பதைக் கவனித்தார்.
ஃபெராரி கார் சொந்தக்காரரிடம் சென்று தன் க்ளர்ச்சுக்கு வேறு நல்ல மாற்று க்ளர்ச் தரவேண்டினார். கடுப்பான ஃபெராரி லம்போகினியைப் பார்த்து “நீ ஒரு டிராக்டர் தயாரிப்பாளர். உனக்கு ஸ்போர்ட்ஸ் கார் பற்றி எதுவும் தெரியாது” என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட, வெளியே வந்த லம்போகினி எடுத்த முடிவுதான் லம்போகினி கார்கள் பிறப்பதற்கான காரணம். தன் தயாரிப்பில் வரும் கார்கள் வெறும் ஸ்போர்ட்ஸ் கார்களாக மட்டுமில்லாமல் தினசரி உபயோகத்திற்கும் எந்த பிரச்சினையும் தராமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.