தொற்றா நோய்கள் பிரிவு விசேட மருத்துவர் ஷெரில் பாலசிங்கம் அறிவுறுத்து
உலக அளவிலும் குறிப்பாக எமது நாட்டிலும் தொற்று நோய்கள் குறைவடைந்து தொற்றா நோய்கள் வெகுவாக அதிகரித்து வருவதையே இக்காலங்களில் காண முடிகிறது.
அதற்கு முக்கிய காரணமாக அவசர உலகத்துக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ள வாழ்க்கை முறை, உடல் சுகாதாரத்துக்குப் பொருத்தமில்லாத உணவுப் பழக்க வழக்கம், போதிய உடற்பயிற்சிகள் இல்லாமை, புகைத்தல் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட உபயோகங்கள், மதுபான பாவனை, உளநலத்தில் கவனம் செலுத்தாமை, மனரீதியாக ஏற்படும் உளைச்சல் ஆகியவையே இதற்குக் காரணம் என சுகாதாரத் துறை தெரிவிக்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மாரடைப்புக்கு இவை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலங்களில் வயது வரம்பு இல்லாமல் மாரடைப்பு ஏற்படுவதையும் அதனால் ஏற்படும் மரணங்களையும் அதிகமாகக் காண முடிகிறது. இன்றிருப்போர் நாளை இல்லை என்பது போல் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணங்கள் இடம் பெறுவதை பரவலாகக் காண முடிகிறது.
இந்த நிலைமையை தடுக்க முடியும் என மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான அறிவுறுத்தல்களையும் அவர்கள் வழங்குகின்றனர்.
நமது வாழ்க்கை முறையும் உணவுப்பழக்க வழக்கமும் உடற்பயிற்சியும் புகைத்தல், மதுபாவனை போன்ற உடல் நலத்துக்கு ஒவ்வாத விடயங்களையும் கைவிட்டால் இத்தகைய ஆபத்துக்கள், அபாயங்கள், வீண் உயிரிழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தல்.
சாதாரணமாகவே நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்காக மருத்துவர்களை நாடும்போது மேற்படி அறிவுறுத்தல்கள் இயல்பாகவே அடிக்கடி வழங்கப்படுகின்றன. எனினும் அதனை நாம் அலட்சியப்படுத்தி முறையாக அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்குக் கூட நாம் ஆளாக காரணமாகிறது.
அந்தவகையில் காலத்துக்குப் பொருத்தமான ஒரு தொனிப்பொருளில் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பிரிவு சிறந்த ஒரு கருத்தரங்கை அண்மையில் நடத்தியது.
இதுபோன்ற சுகாதார நலன்கள் தொடர்பான பல கருத்தரங்குகளை அந்தப் பிரிவு தொடர்ச்சியாக நடத்தி வருகின்றதை நம்மில் பலர் அறிய வாய்ப்பில்லை.
அதனால் தான் அந்த கருத்தரங்குகளில் ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டு அதற்கான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அங்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அதற்கிணங்க நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்தக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பிரிவின் விசேட மருத்துவர் ஷெரில் பாலசிங்கம் இதன் போது தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவையே மாரடைப்புக்கு முக்கியமான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. அதற்கான காரணங்களையே அவர் இவ்வாறு விளக்கியுள்ளார்.
தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு மேலும் பல சிறப்புக் காரணங்கள் உள்ளன.
ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரைப் பாவனை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு உடல் உழைப்பு குறைந்துள்ளமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகியவையும் இதற்கு குறிப்பிடத்தக்க காரணமாகும்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகி வருகின்றனர்.
அத்துடன் சிறார்கள் ஒரே இடத்தில் அதிக நேரத்தை செலவழித்து கணனியில் ஒன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
வீட்டில் வயதானவர்கள் குறிப்பாக வீடுகளில் பெண்களும் கூட எப்போதும் தொலைக்காட்சிக்கு முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்து நேரத்தைக் கழித்தல் தொடர்கிறது.
வயது வரம்பில்லாமல் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதும் இத்தகைய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய அறிவுறுத்தல்களை முறையாக வாழ்க்கையில் கடைப்பிடித்து நோயற்ற வாழ்வை உரிமையாக்கிக் கொள்வது அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பது போல் நமது சிறந்த உடல் ஆரோக்கியமே நமக்கும் நமது குடும்பத்திற்கும் எதிர்கால சவால்களை துணிவுடன் எதிர்கொள்வதற்கும் வழிவகுக்க முடியும் என்பத எமது தாழ்மையான கருத்து.
லோரன்ஸ் செல்வநாயகம்