ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதையே வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டிருக்கிறான். தனிமனிதன் சந்தோஷப்படுவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கலாம். அந்தச் சந்தோஷங்கள் அவனுக்கு மட்டுமானதாக, அவனது உற்றார், உறவினருக்கு மட்டுமானதாக பெரும்பாலும் அமைந்து விடுவதுண்டு. இவ்வாறான சந்தோஷங்களின் போது அவனைச் சூழ உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்தச் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத ஏக்கங்கள் நிலவுவதால் அவனுடைய சந்தோஷம் முழுமை பெறுவதில்லை.
அந்த வகையில் தன்னைச் சூழ உள்ள அனைவரும் ஒரேயடியாக சந்தோஷப்பட முடியுமாக இருக்கும் பொழுது தான், மனிதன் முழுமையாகச் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகிறது. அந்த நாள் தான் பெருநாளாக அமைகிறது. இவ்வாறு மனிதனின் சந்தோஷத்தை முழுமையாக்கக் கூடிய இரண்டு தினங்களை மனித உணர்வுகளை மதிக்கின்ற இஸ்லாம் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றது. இந்த இரண்டு பெருநாட்களையும் கொண்டாடுவதை இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டாயமாக்கியிருக்கிறது. இந்தப் பெருநாள் தினங்களில் யார் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் சந்தோஷப்படுபவர்களுடன் சேர்ந்து குதூகலிக்க வேண்டும்.
நபித்தோழர் அபூபக்கர் (ரழி) அவர்கள் நபியவர்களின் வீட்டுக்கு வந்தபோது இரண்டு இளம் பெண்கள் ரபான் அடித்து குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் போர்வையால் மூடிக் கொண்டு படுத்திருந்தார்கள். அவர்களது செயலைக் கண்டு அபூபக்கர் (ரழி) அவர்கள் அந்தப் பெண்களை ஏசினார்கள். அப்போது நபியவர்கள் போர்வையிலிருந்து முகத்தைத் திறந்து, இன்று பெருநாள் அல்லவா, அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். (புகாரி)
பெருநாள் என்பது மனிதர்கள் சந்தோஷம் அனுபவிக்கும் நாள். அவர்களது சந்தோஷத்துக்கு யாரும் தடைபோட முடியாது. அல்லாஹ்வை மறக்கடிக்காத எந்தச் செயற்பாட்டினாலும் தங்களது சந்தோஷத்தை அவர்கள் வெளிப்படுத்த முடியும். நபியவர்கள் பெருநாட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது அது உண்டு பருகி அல்லாஹ்வை நினைவுபடுத்தும் நாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நபியவர்கள் பெருநாட்களை களியாட்டங்கள் மூலமும் குதூகலமாக்கியிருக்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நானும் நபியவர்களும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது சிறுவர்களின் இரைச்சலும் கூச்சலும் கேட்டது. நபியவர்கள் எழுந்து பார்த்தார்கள். ஒரு எத்தியோப்பியப் பெண்மணி ஆடிக் கொண்டிருந்தாள். அவளைச் சூழ சிறுவர்களும் குதூகலமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். வந்து பாருங்கள் ஆயிஷா என நபியவர்கள் என்னை அழைத்தார்கள். நான் நபியவர்களின் தோளில் முகத்தை வைத்துக் கொண்டு அவருடைய தலைக்கும் தோளுக்கும் இடையால் பார்த்தேன். போதுமா, போதுமா என்று நபியவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நபியவர்களுடன் தொடர்ந்து அவ்வாறு இருப்பதை நாடியவளாக நான் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன் என அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.
பெருநாளுடைய இவ்வாறான கொண்டாட்டங்கள் அவை சமூகமாக இருந்து கொண்டாடப்படும் போது தான் சந்தோஷத்தை இரட்டிப்பாக்குவதை புலப்படுத்துகின்றன. பெருநாளின் பிரதான அம்சமாக அமைகின்ற பெருநாள் தொழுகை கட்டாயமாக கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டியதாகும்.
ஊரிலுள்ள அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது தான் இந்தத் தொழுகையின் சிறப்பம்சமாகும். தொழுகைக்காக ஒன்று கூடுகின்ற இடத்தில் மக்கள் முஸாபஹா மற்றும் முஆனகா செய்து அடுத்தவர்களை ஆரத்தழுவி தமது அன்பைப் பரிமாறிக் கொள்வது பெருநாளின் சந்தோஷங்களில் முக்கியமானதாகும்.
நபியவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியையும் திரும்பி வருவதற்கு வேறு வழியையும் பயன்படுத்தியிருப்பதும் அதிகமானவர்களைச் சந்திக்க முடியுமான நோக்கிலாகும். அந்த வகையில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருடனும் உறவுகளைப் பேணுவதற்கு பெருநாள் வழியமைத்துத் தருகிறது. பெருநாளின் முக்கியமான ஸுன்னத்துகளில் ஸதகாவும் ஒன்றாகும். அன்பளிப்புக்களைப் பரிமாறுவதன் மூலம் மக்களின் சந்தோஷம் பெருகுவது இதன் சிறப்பம்சமாகும்.
பெருநாள் அனைவருக்கும் ஒரே நாளாக அமைவது தான் பெருநாளின் சந்தோஷத்தை பன்மடங்காக்குகிறது என்ற வகையில் இந்தப் பெருநாள் குதூகலங்களில் அனைவரையும் இணைத்துக் கொள்வது முக்கியமாகிறது. குறிப்பாக அண்டை அயலவர்களை இணைத்து விருந்துகள் பரிமாறுதல், சிற்றுண்டி வேளைகளை ஏற்படுத்திக் கொள்ளல், வீடுகளுக்குச் செல்லுதல், அயலவர்கைளை மையப்படுத்திய கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தல் என இதற்கான செயற்பாடுகள் விரிந்து செல்ல முடியும்.
அயலவர்கள் என்கின்ற போது அது முஸ்லிம்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். அதனால் அயலவர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களையும் எமது சந்தோஷத்தில் இணைத்துக் கொள்வதில் தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிறாரப் புசிப்பவன் உண்மை முஸ்லிமாக மாட்டான் என்ற வகையில் அண்டை வீட்டில் இருப்பவர் மாற்று மதத்தினர் என்பதற்காக அவர்களைப் பசியில் வாட விட்டு முஸ்லிம்களை மட்டும் அழைத்து விருந்து பரிமாறுவதில் உண்மையான சந்தோஷத்தைப் பெற முடியாது. பெருநாள் கொண்டாட்டத்தில் முஸ்லிம் சிறுவர்கள் திளைத்திருக்கும் பொழுது பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் அவர்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்பதற்காக ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பது உண்மையான பெருநாள் கொண்டாட்டமாக அமைய முடியாது.
முஸ்லிம்களுடைய இரண்டு பெருநாட்களும் என்பது அயலவர், ஊர், பிரதேசம், நாடு என்பதைதையெல்லாம் தாண்டி மனிதர்களின் சந்தோஷத்தைப் பரிமாறிக் கொள்ளும் உலகளாவிய சந்தோஷப் பெருக்காகும். இவ்வாறிருக்கையில் தனது அண்டை வீட்டான் அவன் முஸ்லிமல்லாதவன் என்பதற்காக அவனை மகிழச் செய்யாமல் தவிர்ப்பது இந்த உலகளாவிய சந்தோஷப் பெருக்கை தடை செய்வதாக அமையும்.
எனவே பெருநாள் என்ற சந்தோஷத்தில் அனைத்து மனிதர்களையும் இணைத்து பெருநாளையாவது அனைவரும் சந்தோஷமாகக் கழித்தோம் என்ற திருப்தி அடுத்த பெருநாள்வரை நிலைக்கும் என்றிருந்தால் அவர்கள் தான் உலகிலே சந்தோஷத்தையும் அமைதியையும் நிம்மதியையும் பரப்பியவர்களாக அமைய முடியும்.
உலக மக்களுக்கு வழிகாட்டியாக அருளாக அல் குர்ஆன் அருளப்பட்ட ரமழானை நிறைவு செய்து கொண்டாடும் இந்தப் பெருநாளை அனைத்து மக்களுக்குமான பெருநாளாக மாற்றுவோம்.
ஈத் முபாரக்