நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், இளம் உலகத் தலைவராக உலக பொருளாதார மன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக இளம் தலைவர் பதவிக்கு இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும்.
பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல், சமூக நீதிக்காக குரல் கொடுத்தல், அனைத்து இலங்கையர்களுக்கும் சுத்தமான மற்றும் சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரை குறைந்த விலையில் கிடைக்க செய்தல், நீர் துறையில் மறுசீரமைப்பு ஆகியவற்றை தான் அமைச்சு பதவி ஏற்றதிலிருந்து புரட்சிகரமான மாற்றங்களுக்காக அமைச்சர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். அதற்கான வேலைத்திட்டங்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை அவர் வழங்குகின்றார்.
பொதுச் சேவையில் அவரது அர்ப்பணிப்பும் புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசியளவில் சிறந்த, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம் உலக தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் சர்வதேச அளவிலும் அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
YGL சமூகம் என்பது உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைப்பில் உறுதிபாட்டை பகிர்ந்துகொள்ளும் 1000 க்கும் மேற்பட்ட இளம் தலைவர்களை கொண்ட தனித்துவமான சமூகமாகும். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவப் பண்பு மற்றும் அயராத முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமே இத்தெரிவாகும்.