இலங்கையின் கல்வி அமைச்சு (MOE) மற்றும் Microsoft ஆகியன, இலங்கையின் தேசிய பாடசாலை கல்வித் திட்டத்தில் Artificial Intelligence (AI) மற்றும் Machine Learning (ML) ஆகியவற்றை ஒன்றிணைப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த கைகோர்ப்பு, நாட்டில் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தரம் எட்டு மற்றும் அதிலிருந்தான உயர்மட்ட வகுப்புகளுக்காக ஆரம்ப கட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த புரித்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற அறிமுகத்தில் Microsoft 365 கட்டமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பான தொடர்பாடல் மற்றும் கைகோர்ப்பு மையமாக அமைந்திருக்கும்.
அனைவருக்கும் AI அணுகலை ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்குடன், சர்வதேச Microsoft கல்விச் செயலணிகள் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரி (NIE) ஆகியன இணைந்து, கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட இருபது பாடசாலைகளில் ஆரம்பகட்டமாக இந்தப் பாடவிதானம் அறிமுகம் செய்யப்படும். ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஆகக்குறைந்தது ஒரு பாடசாலையேனும் இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்னோடி அளவீட்டுத் திட்டமாக இந்த பாடசாலைகள் அமைந்திருக்கும். இந்த ஆரம்ப கட்டத்திட்டத்தினூடாக, பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிப்பது எனும் மாதிரியினூடாக, பயிலுநர்களுக்கும் கல்வி கற்பிப்போருக்கும் வலுவூட்டப்படுவதுடன், AI யுகத்தில் அவர்கள் இயங்குவதற்கு அவர்களை நன்கு தயார்படுத்துவதாக அமைந்திருக்கும்.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் 2024 மார்ச் 19ஆம் திகதி நடைபெற்றது. இதில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம், கல்வி அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு மற்றும் Microsoft ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் Microsoft இந்தியா மற்றும் தெற்காசியா தலைவர் புனீத் சந்தோக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.