சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் இணைந்து கொண்டுவந்த இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எதிர்க்கட்சியில் உள்ள 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சமர்ப்பித்திருந்த இந்தப் பிரேரணையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனப் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் நிராகரித்திருப்பதையே வாக்கெடுப்பின் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.
சபாநாயகர் பக்கச்சார்பாகக் செயற்படுகின்றார் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் எதிர்க்கட்சியினரின் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இரண்டு பிரதான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியிருந்தது.
முதலாவதாக, தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் உள்ளடக்கப்படவில்லையென்பதாகும். உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் 9 பரிந்துரைகள் தற்பொழுது நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இல்லையென்பது எதிர்க்கட்சியினரின் வாதமாக இருந்தது.
இரண்டாவது குற்றச்சாட்டு என்னவெனில், சபாநாயகர் தலைமையில் உள்ள அரசியலமைப்புப் பேரவையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் குறித்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் இரு சிவில் பிரதிநிதிகள் நடுநிலை வகித்திருந்தனர்.
இது விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கக் கடிதமொன்றை அனுப்பியிருந்த சபாநாயகர், சிவில் பிரதிநிதிகள் இருவரின் வாக்குகள் எதிர்ப்பானவை எனக் கருதப்படும் பட்சத்தில், தனது அறுதியிடும் வாக்கை நியமனத்துக்கு ஆதரவாக வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
நிகழ்நிலைக் காப்புச் சட்ட விவகாரத்தில் சபாநாயகர் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என்பது தெளிவாகிறது. குறித்த சட்டமூலத்தில் உச்சநீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகள் சில உள்ளடக்கப்படவில்லை எனக் கூறி எம்.ஏ.சுமந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது.
அது மாத்திரமன்றி, ஒரு சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது மற்றும் அதனை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பணி. இதன்போது திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதை அரசாங்கத்துடன் கலந்துரையாடி அல்லது சட்டமா அதிபரை அழைத்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் அவ்வாறு தெளிவுகளைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பலவற்றை உதாரணமாகவும் கூற முடியும். இவ்வாறான நிலையில், பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்ட பின்னர் சபாநாயகர் அதற்கு சான்றுரை வழங்கியதும் அது சட்டமாக மாறும். நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் அதில் தனது சான்றுரையை சபாநாயகர் வழங்கக் கூடாது என முன்னர் எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.
இருந்தபோதும், அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகருக்கு அவ்வாறு சான்றுரைப்படுத்தலை வழங்காது இருக்க முடியாது. குறித்த சட்டமூலத்தில் சிக்கல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து சபாநாயகர் இதுவிடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றிருந்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் உச்சநீதிமன்றத்தின் சகல பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளது என சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே சபாநாயகர் தனது சான்றுரையை வழங்கினார்.
எனவே, இது விடயத்தில் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு எதுவித அடிப்படையும் இல்லை. அவ்வாறு சான்றுரைப்படுத்தாமல் இருந்தால் அரசியலமைப்பை மீறினார் என்ற பழிச்சொல்லுக்கு சபாநாயகர் ஆளாக வேண்டியிருக்கும்.
அதேநேரம், நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் மேலும் திருத்தங்களை கொண்டுவரவிருப்பதுடன், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியினர் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் திருத்தங்களைக் கூடிய விரைவில் கொண்டுவருவோம் என அரசாங்கம் உறுதியளித்திருந்த பின்னணியிலும், எதிர்க்கட்சியினர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தமை வெறுமனே அரசியல் நோக்கத்திலானது என்பது தெளிவாகின்றது.
பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் சபாநாயகர் பதவிக்குத் தெரிவுசெய்யப்படும் நபர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் நபராகவே பொதுவாக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே வாக்கெடுப்பு நடத்தப்படும். எனினும், தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இரு தரப்பினதும் இணக்கப்பாட்டுடன் தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் என்பதையும் நாம் இங்கு மறக்கக் கூடாது.
தற்போதைய பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சிக்குக் காணப்படும் பெரும்பான்மையில் இதுவரை எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை. தாம் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை எப்படியும் தோற்கடிக்கப்படும் என்பதைத் தெரிந்து கொண்டே எதிர்க்கட்சியினர் இவ்வாறான அரசியல் நாடகமொன்றை அரங்கேற்றியிருந்தனர்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கான அமர்வு 3 நாட்களாக நடைபெற்றது. பாராளுமன்றம் கூடுவதற்காக ஏற்படும் செலவு பொதுமக்களின் பணத்திலிருந்தே செய்யப்படுகின்றது. இதனடிப்படையில் பார்க்கும்போது 3 நாட்களின் அமர்வுக்காக அதாவது வெற்றிபெற முடியாததொரு நம்பிக்கையில்லா பிரேரணைக்காக 45 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவினால் அவதிப்பட்டுவரும் நிலையில் எதிர்க்கட்சியினர் தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்காக 45 மில்லியன் ரூபாவை 3 நாட்களுக்காக வீண்விரயம் செய்துள்ளனர்.
அத்துடன், வாக்கெடுப்பின் போது 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லையென்பதால் இந்த முயற்சி முழுமையாக வீண் விரயமானது என்றே அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், 2022ஆம் ஆண்டு போராட்டங்கள் உச்சமடைந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை விட்டு விலகியதும் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருந்தபோதும் சபாநாயகர் அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு அவ்வாறான பதவியை ஏற்றுக் கொள்ளாது பொருத்தமான ஒரு நபரிடம் அப்பதவி செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அவ்வாறு ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்புவிடுத்த எதிர்க்கட்சியினரே தற்பொழுது அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருந்தனர்.
சபாநாயகர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது போன்ற மாயையை ஏற்படுத்தவும் எதிர்க்கட்சியினர் முயற்சித்திருந்தனர்.
இது முற்றிலும் தவறானது. இதற்கு முன்னர் பதவியில் இருந்த சபாநாயகர்களில் நால்வருக்கு எதிராக இதுபோன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருப்பதுடன், அவை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். இதில் 40 வருட தனது அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தரப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படவில்லையென்றும், தற்பொழுதும் தான் ஜனாதிபதியின் அழுத்தங்களுக்கு அமைய செயலாற்றவில்லை என்றும் தெளிவாகக் கூறினார்.
சபாநாயகராகப் பதவியேற்ற நாளில் இருந்து சகல தரப்பினருக்கும் நடுநிலையாகச் செயற்பட்டு வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நேரத்தை வழங்குவதில், எதிர்க்கட்சியினருக்கு அதிக நேரம் வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை ஆளும் கட்சியிலிருந்து தான் எதிர்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
எதுவாக இருந்தாலும், அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகத் தான் நடுநிலையாகச் செயற்பட்டுவருகின்றேன் என்றும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார் சபாநாயகர்.
நாடு பாரியதொரு பின்னடைவிலிருந்து மீண்டுவரும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் தமது கடமையிலிருந்து அவர்கள் விலகியிருக்கின்றர். ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்பதைத் தவிர்த்து சம்பிரதாயபூர்வமான எதிர்ப்பு அரசியலையே அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், பொதுமக்களைப் பொறுத்த வரையில் மாற்றமொன்றை எதிர்பார்த்திருக்கும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினரின் இவ்வாறான அரசியல் செயற்பாடுகள் ஒட்டுமொத்த பாராளுமன்ற ஜனநாயகக் கட்டமைப்புக் குறித்த மக்களின் நிலைப்பாட்டையே சந்தேகமடையச் செய்யும். இது எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, இனிமேலாவது எதிர்க்கட்சியினர் தமது பொறுப்பை உணர்ந்து ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதனை விடுத்து தொடர்ந்தும் இவ்வாறான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவார்களாயின் நாட்டு மக்கள் தொடர்ந்தும் பாரிய சவால்களுக்கே முகங்கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.