Home » சுயநினைவை இழக்கச் செய்யாமல் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை

சுயநினைவை இழக்கச் செய்யாமல் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை

by Damith Pushpika
March 17, 2024 6:00 am 0 comment

பதுளை வைத்தியசாலையிலிருந்து கடந்த வாரம் ஒரு ஆச்சரியமான செய்தியைக் கேட்க நேர்ந்தது. மயக்கமருந்து இல்லாமல் முதுகுத் தண்டுவடத்தில் செய்யப்பட்ட எண்டோஸ்கோபிக் (ENDOSCOPIC) அறுவைச் சிகிச்சை தொடர்பான செய்தியே அதுவாகும். பதுளை வைத்தியசாலைக்கும், ஒட்டுமொத்த சுகாதாரத் துறைக்கும் புகழைக் கொண்டு வந்த இந்த சத்திரசிகிச்சையானது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணருமான டொக்டர் லக்மால் ஹெவகே தலைமையிலான முன்னணி மருத்துவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, ​​உலகின் பல நாடுகளில், முதுகுத்தண்டில் ENDOSCOPIC அறுவை சிகிச்சை, மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படுகிறது, ஆனால் இந்த அறுவைச் சிகிச்சை இலங்கையில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுவதால், இந்த நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு தனி முத்திரை பதிக்கும்.

இலங்கையில் முதற்தடவையாக மயக்கமடையச் செய்யாமல் முதுகெலும்பு என்டஸ்கோபிக் சத்திரசிக்சைக்கு முகங்கொடுத்திருப்பவர் 72 வயதுடைய முத்துமெனிக்கே என்ற பெண்ணாகும். அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த அப்பெண் சில காலமாக முதுகெலும்பு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததோடு, அதற்காக பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொண்டு அவற்றினால் பலன் கிடைக்காமல் மூன்று வருடங்களாக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். சத்திரசிகிச்சையின் மூலம் நோயைச் குணமாக்குவதற்கு அவரது இருதய நோயே தடையாக இருந்துள்ளது. அதனால் மயக்கமடையச் செய்து மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சை அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற நிலை காணப்பட்டது. முதுகுத்தண்டு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு அது எந்தளவு வேதனையானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் பின்னணியில் அம்பாறையைச் சேர்ந்த முத்துமெனிக்கே பதுளை வைத்தியசாலையில் விசேட வைத்தியர் நிபுணர் டாக்டர் லக்மால் ஹேவகேவைச் சந்திக்கிறார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டொக்டர் லக்மால் ஹெவகேவிடம் இது பற்றிய கூடுதல் தகவல்களைக் கேட்டோம்.

“உலகின் பல நாடுகளில், இந்தியாவில் கூட, இந்த அறுவைச் சிகிச்சை முறை மிகவும் பிரபலமானது. ஆனால் இலங்கையில் இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதற் தடவையாகும். இதற்கு முன் இந்த நாட்டில் உள்ள எந்த அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் சுயநினைவை இழக்கச் செய்யாமல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.

பொதுவாக, முதுகெலும்பைச் சுற்றி நினைவை இழக்கச் செய்து அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் போது வெட்டுக்கள் போடப்படுகின்றன. இதன் காரணமாக, நோயாளிக்கு கடுமையான வலி ஏற்படும். முதுகெலும்பு கோளாறுகளுக்கு முக்கிய காரணங்கள் முதுகெலும்புத் தசைகளின் பலவீனமாகும். இத்தகைய பலவீனம் உள்ள நோயாளிக்கு முன்பு குறிப்பிட்டது போன்ற அறுவைச் சிகிச்சை செய்யும்போது, ​​தசைகளை வெட்டும் போது, தசைகள் மேலும் வலுவிழந்து போகின்றன. அதனால்தான் அறுவை சிகிச்சை மூலம் நோய் குணமாகினாலும் மீண்டும் அதே நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணருமான ​ெடாக்டர் லக்மால் ஹேவகே இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டார்.

எனினும், எண்டோஸ்கோபிக் (ENDOSCOPIC) அறுவைச் சிகிச்சை முறை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் மயக்கமடையச் செய்யத் தேவையில்லை என்பதால், இந்த அறுவை சிகிச்சை நுட்பத்தை மயக்க மருந்தினால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். அதேபோன்று, சாதாரண அறுவைச் சிகிச்சையினைப் போன்று, பெரிய தசை வெட்டுக்கள் இதில் இல்லை, எனவே அறுவைச் சிகிச்சை இடம்பெறும் இடத்தில் கடுமையான வலி ஏற்படாது. தசை வெட்டு இல்லாததால், தசை பலவீனமடைவதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே, நோயாளி மீண்டும் அந்த நோய்க்கு உள்ளாகும் ஆபத்து குறைவாகும்.

இந்த அறுவை சிகிச்சை முறையின் சிறப்பு என்னவெனில், சுயநினைவை இழக்கச் செய்யாமல் சிறிய கீறலை மட்டும் ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்வதுதான். கெமராவை உடலில் செருகுவதற்கு மட்டுமே தோலில் ஒரு சிறிய வெட்டு போடப்படுகின்றது. இந்த சத்திரசிகிச்சையின் போது எண்டோஸ்கோபி கெமராவுக்குப் புறம்பாக, மற்றொரு சிறிய வெட்டினுள் அறுவை சிகிச்சை செய்யும் சாதனத்தை நுழைக்க வேண்டும். அதனடிப்படையில் கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ஏனைய உபகரணங்களால் சத்திரசிகிச்சை மேற்கொண்டேன். அறுவைச் சிகிச்சையின் போது, ​​நோயாளியிடம் பேசி, கால் வலி குறைகின்றதா? எனக் கேட்டுக் கொண்டு சிகிச்சையை மேற்கொண்டேன். அதனால் அறுவை சிகிச்சையின் போது நோயாளி பயப்படவோ அல்லது மன அழுத்தங்களுக்கு உள்ளாவதற்கான வாய்ப்போ குறைகிறது.

அறுவை சிகிச்சைக்கு ஒரு சிறிய கீறல் மட்டுமே போடப்படுவதால், அது நோயாளிக்கு கடுமையான வலியை ஏற்படுத்தாது. அதேபோன்று பெரிய வெட்டுக் காய வடுவும் ஏற்படாது. பெரிய வெட்டுக்கள் போடப்படாததால் பெரிய தையல் போட வேண்டிய அவசியமுமில்லை. பொதுவாக அவ்வகை அறுவைச் சிகிச்சை செய்தால் பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த அறுவைசிகிச்சையில் 24 மணி நேரத்திற்கு முன்பே நோயாளி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகிறார். அதுவும் இந்த அறுவைச் சிகிச்சையினால் கிடைக்கும் நன்மையே. நாங்கள் அறுவைச் சிகிச்சை செய்த நோயாளி, அறுவை சிகிச்சை முடிந்த 12 மணி நேரத்தில் மருத்துவமனையை விட்டு வெளியேறினார். ”

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணரான ​ெடாக்டர் லக்மால் ஹேவகே இவ்வாறான ஒரு அற்புதமான சத்திரசிகிச்சையை மேற்கொள்வது இது முதல் தடவையல்ல. மயக்கமடையச் செய்யாமல் நோயாளியுடன் பேசிக் கொண்டே மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை ஒன்றை விசேட வைத்திய நிபுணர் லக்மால் ஹேவகே 2021ஆம் ஆண்டில் மேற்கொண்டார். அவ்வாறான சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்ட இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, பதுளை வைத்தியசாலையில் அவ்வாறான சத்திரசிகிச்சையை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அந்த சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் சிறு வயதிலிருந்தே வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட 31 வயதுடைய ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராகும். வழக்கமாக, சத்திரசிகிச்சைக் கூடத்தில் படுக்கையில் நோயாளி படுத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. எனினும் இந்த அறுவை சிகிச்சையானது நோயாளி நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்தது நோயாளியின் மூளையின் பார்வையை கட்டுப்படுத்தும் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதேயாகும். அத்துடன் பதுளை வைத்தியசாலையில் மயக்க மருந்து இன்றி விசேட வைத்திய நிபுணர் லக்மால் தலைமையில் 8 மூளைச் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவார். அத்துடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிபில பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரின் முதுகுத்தண்டில் தோன்றிய சுமார் ஒன்றரை கிலோகிராம் எடையுள்ள கட்டியை பதுளை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் லக்மால் ஹேவகே வெற்றிகரமாக அகற்றியுள்ளார். அந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு பெறுமதியான ஒத்துழைப்புக்களை வழங்கிய பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளர், மயக்க மருந்து நிபுணர்கள், உதவி வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலையின் முழு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்கு விசேட வைத்திய நிபுணர் மறக்கவில்லை.

அறுவைச் சிகிச்சை என்பது ஆபத்தான ஒன்றாகும். காரணம், மிகச் சிறிய தவறினால் நோயாளியின் உயிருக்குக் கூட ஆபத்து நேரலாம். குறிப்பாக இவ்வாறான புதிய சத்திரசிகிச்சை முறைகளைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் நரம்பியல் அறுவை சிகிச்சை விசேட நிபுணர் ​ெடாக்டர் லக்மால் ஹெவகேவிடம் கேட்டோம்.

“பதுளை வைத்தியசாலையில் மூளைச் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் எண்டோஸ்கோபி கெமரா இருந்த போதிலும், முதுகுத்தண்டு சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய பல உபகரணங்கள் எம்மிடம் இல்லை. வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் முதுகுத் தண்டு அறுவைச் சிகிச்சைக்கு சிறப்பு கெமராக்கள் உள்ளன. பதுளை வைத்தியசாலையில் மூளைச் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கெமரா மற்றும் கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இலவசமாக வழங்கிய உபகரணங்களைப் பயன்படுத்தியே நான் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டேன். இந்த வகையான அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லை என்பதே தற்போது நாங்கள் எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது”

நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட நிபுணர் ​ெடாக்டர் லக்மால் ஹேவகே ஹொரண தக்ஷிலா வித்தியாலயம் மற்றும் ஹொரண ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு, பதின்மூன்று வருடங்களாக வைத்தியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றும் அவர், இவ்வாறான சத்திரசிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையுடன் இணைந்து கொள்கிறார். இறுதியாக, ஆரோக்கியமான வாழ்க்கையைப் பேணிச் செல்ல விரும்பும் அனைவருக்கும் முக்கியமான ஒரு செய்தியை அவர் கூறினார்.

சுரேக்கா நில்மினி இலங்கோன் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division