உலக வங்கியின் அனுசரணையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்று வரும் ‘Transport Transformation’ தொடர்பான 21ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று ஞாயிற்றுக்கிழமை (17) வாஷிங்டன் பயணமாகிறார். இந்த மாநாடு நாளை (18) ஆரம்பமாகி, 20ஆம் திகதிவரை நடைபெறும். இன்று வாஷிங்டன் பயணமாகும் அமைச்சர் பந்துல, நாளை (18) உலக வங்கியின் பிரதான வளாகத்தை (World Bank Group Buildings. Main Complex (MC) Building) சென்றடைவார். அமைச்சர் பந்துல குணவர்தனவை (Senior Transport Specialist at the World Bank) திருமதி Fei Deng வரவேற்பார். அன்றையதினம் செயற்குழு கூட்டமொன்றிலும் அமைச்சர் பந்துல கலந்து கொள்வார். நாளை மறுதினம் (19) போக்குவரத்து தொடர்பான முதல் அமர்வு நடைபெற்று, அன்று பிற்பகல் பயணிகள் பஸ்களின் சீர்திருத்தம், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பணிகள் குறித்து அதன் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடுவார்.
இதனைத் தொடர்ந்து 20ஆம் திகதி பிரஸ்டன் ஆடிட்டோரியத்தில் கொள்கை வகுப்பாளர்களுடன் சிறப்புக் கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்கும் அமைச்சர் பந்துல, அன்றையதினம் இந்தியா, பிரேசில், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு கலந்துரையாடலிலும் பங்கேற்பார்.