எரிபொருள் விலைக் குறைப்பு, மின்சாரக் கட்டணத்தில் குறைப்பு உள்ளிட்ட மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்திகள் இந்த வாரம் ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்தவையாக இருக்கின்றன. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கத் தொடங்கினர். அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான செலவினங்கள் கணிசமாக அதிகரித்தன.
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்குக் காணப்பட்ட நீண்ட வரிசைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், வாழ்க்கைச்செலவு விடயத்தில் மக்கள் கணிசமான சவால்களை எதிர்கொண்டே வந்தனர். இவ்வாறான நிலையில் நாட்டை ஓரளவு ஸ்திரமான கட்டத்துக்குக் கொண்டுவந்துள்ள அரசாங்கம், மக்களுக்குத் தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதுடன், எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இவற்றை அடிப்படையாகக் கொண்டு அதிகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் உள்ளிட்டவை எதிர்வரும் நாட்களில் குறைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதன் வெளிப்பாடே இவை எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை வழங்கவிருப்பதாக இலங்கையின் நிதி அமைச்சரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி, இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அது மாத்திரமன்றி பெறுமதி சேர்வரி அறவீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அப்பியாசக் கொப்பிகள் மற்றும் காகிதாதிகள், மருந்துகள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை விலக்குவதற்கான திட்டங்களும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த நாடு 2024 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சியை அடையும் நிலைக்கு வந்திருப்பது அரசாங்கத்தின் உறுதியான முன்னேற்றத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால் மிக்க நாட்டைப் பொறுப்பேற்றது முதல் நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தையும் நாட்டையும் தெளிவுபடுத்தி வருகின்றார். முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும்போது கூட்டுப் பொறுப்புடன் எடுக்கப்பட வேண்டியதன் அடையாளமாகப் பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்துவார்.
இந்த வகையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனாக நாடு அடைந்துள்ள நன்மைகளை சில குறிகாட்டிகளின் அடிப்படையில் ஜனாதிபதி விளக்கியிருந்தார். ஜனாதிபதியின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
‘2022 முதல் 2023 இரண்டாம் காலாண்டு வரை 6 காலாண்டுகளுக்கு தொடர்ந்து சுருங்கிய நமது பொருளாதாரம், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து புத்துணர்ச்சி பெற ஆரம்பித்தது. இந்த ஆண்டு 2 முதல் 3 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அரச வருமானத்தை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்தது. கடந்த ஆண்டு முதன்மைக் கணக்கில் உபரித் தொகையைப் பெற முடிந்தது. இதனால் மூன்று, நான்கு ஆண்டுகளாக அரசுக்கு சேவை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு அனைத்து நிலுவைத் தொகையையும் முடித்துள்ளோம்.
2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், அரசுக்குச் சொந்தமான 52 பெரிய நிறுவனங்கள் மொத்தமாக ரூ.720 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டன. ஆனால் 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் இந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.313 பில்லியன் இலாபமாகப் பெற முடிந்தது.
பொருளாதார நெருக்கடியால் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியுடன், பல வணிக நிறுவனங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், 17,819 நிறுவனங்கள், கம்பனிப் பதிவாளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023 இல் 22,376 நிறுவனங்கள் பதிவு செய்யயப்பட்டுள்ளன. 2024 ஜனவரியில் 1,995 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பொருளாதார முகாமைத்துவம் காரணமாக, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 70 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5.9 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்கம் குறைந்ததால் 30 சதவீதமாக இருந்த வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டில் 10 சதவீதத்தையும் விடக் குறைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க முடிந்தது.
2022 ஏப்ரல் நடுப்பகுதியில் வெறும் 20 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பை, தற்போது 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க முடிந்தது. தனியார் மோட்டார் வாகனங்கள் தவிர, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
1977 இற்குப் பிறகு முதன்முறையாக, 2023ஆம் ஆண்டில், கொடுப்பனவு கையிருப்பின் நடப்புக் கணக்கில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. இதன் காரணமாக கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் ரூ.363 ஆக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றைய நிலைவரப்படி ரூ.308 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது’ என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நரகத்தில் மீண்டும் விழ வேண்டுமா? இல்லாவிட்டால் தற்போதை பாதையில் சுவர்க்கத்தை சென்றடைவதா? தற்போதைய பாதையைத் தவிர வேறு வழிமுறைகள் எவையும் இல்லை. நாம் இதுவரையில் அடைந்திருக்கும் வெற்றிகள் அதனை உறுதி செய்துள்ளன. அதனால் இதே வழியில் முன்னேறிச் செல்வதற்கான சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் மத்தியில் பிரசித்தமாவதற்காக இவை செய்யப்படவில்லை. பல அரசியல் குழுக்கள் பிரசித்தமாவதற்காக கற்பனைக் கதைகளைச் சொல்கின்றன. கனவுக் கோட்டைகளையும் கட்டுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் யதார்த்தமான நிலைமை புரியவில்லை. அதிகாரத்திற்காக முட்டிமோதிக் கொள்கிறார்கள். அதிகாரத்திற்காகப் பொய் சொல்கிறார்கள். ஆனால் தான் ஒருபோதும் அதிகாரத்துக்காகப் பொய் சொல்லவில்லையென்றும், சொந்த எதிர்காலத்துக்கு அன்றி நாட்டின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் நாட்டை சவாலான காலத்தில் பொறுப்பேற்று ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் வெற்றிகண்டுள்ளார் என்பதே நிதர்சனம்.
மக்கள் ஆதரவு தமக்கே இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எதிர்க்கட்சியின் தலைவர்கள் நாட்டை சவாலான சந்தர்ப்பத்தில் பொறுப்பேற்கத் தயங்கியபோது, தானாக முன்வந்து சவாலைப் பொறுப்பேற்றவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
தன்னைப் பிரபல்யமாக்கிக் கொள்வதற்கான தீர்மானங்களை எடுக்காமல், மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்ற வகையில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்தார். அது மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் அவர் கொண்டிருந்த தொடர்புகளை முழுமையாகப் பயன்படுத்தி பல்வேறு ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டிருந்தார்.
இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டின் காரணமாக முறிவடைந்திருந்த ஜப்பான்-இலங்கை உறவை மீண்டும் புதுப்பித்தது மாத்திரமன்றி, கடன் மறுசீரமைப்பில் ஜப்பான் மத்தியஸ்தம் வகிக்கும் நிலைக்குக் கொண்டுவந்தார். இது அவருடைய இராஜதந்திர உறவுகளுக்கும், நிர்வாகத் திறனுக்கும் சிறந்த எடுத்துக் காட்டுகளாக இருக்கின்றன.
தனியொரு நபராகப் பாராளுமன்றத்துக்குள் நுழைத்த ஜனாதிபதி, ஆட்சியில் இருந்த பொதுஜன பெரமுன தனக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று அரசாங்கத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளார். நான்கு தசாப்தத்துக்கு மேலாக அவருக்கிருக்கும் அரசியல் ஞானம் மற்றும் நிர்வாகத் திறன் காரணமாக நாடு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்து செல்வதுடன், இதன் வெளிப்பாடுகளை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சிக்காது, நாட்டை மீட்சிப் பாதைக்குக் கொண்டு வருவதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.
அது மாத்திரமன்றி, அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் ஒரு சிலர் தமது எதிர்கால அரசியலை நோக்காகக் கொண்டு அரசின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாகத் தெரிகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதுணையாக இருக்காது என்பதை நினைவில் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.