மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் என்றார் கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை. மங்கையரைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் திகதியில் உலக மகளிர் நினத்தைக் கொண்டாடி வருகிறோம்.
தாய், மனைவி, தங்கை, தோழி, மகள் என்று நம் உறவின் அனைத்துப் பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான்.
இன்றைய காலத்தில் பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆண்களை எதிர்கொள்வது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக கடுமையாக போட்டிபோட்டு முன்னேறி வருகிறார்கள்.
பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்வது, பிள்ளை பெற்றுக் கொள்வது, அல்லது ஆசிரியர், செவிலியர் பணியாற்றுவது இதுதான் அவர்களால் முடியும் என்ற நிலைமாறி, இன்றுள்ள அத்துணை துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையால் முத்திரை பதித்து வருகிறார்கள்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் பெண்கள் கல்வியில் உயர்ந்துள்ளனர். விமானம் ஓட்டுவது, தொடரியை இயக்குவது. அறிவியல் மற்றும் கணனித் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருவது என்று பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
பெண்கள் பல்துறைகளில் சாதித்து வந்தாலும் அவர்களுக்கான அங்கீகரத்தை சமூகம் முறையாக வழங்காமலே இருந்து வருகிறது. ஒரு காலத்தில் பெண்களை அடிமைகளாகவே வைத்திருந்தனர். 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி. வாக்களிக்கும் உரிமையையும் கோரி 15000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூேயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர்.
இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா.
அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து 1911ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1917-க்குப் பிறகு உலக மகளிர் அமைப்புகள் ஒன்றுகூடி மகளிர் தினத்தை மார்ச் – 8 என்று கட்டமைத்தனர்.
அதன் பிறகே உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் சமூகத்தில் திறமை மிக்க பெண்களை அடையாளம் கண்டு கடந்த ஏழு வருடங்களாக தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்கள் என்ற விருது வழங்கி கெளரவம் செய்து வருகிறது.
உலகின் எந்த ஒரு நாட்டில் சாதிக்கும் பெண்கள் இருந்தாலும் அவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து சாதனைப் பெண் விருது வழங்கி சிறப்பிக்கிறார்கள். 27 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான நந்தவனம் சந்திரசேகரன் நந்தவனம் பவுண்டேசனின் தலைவராக உள்ளார். லிம்ரா பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் எம். சாதிக் பாட்சா செயலாளராகவும், கவிஞரும், எழுத்தாளரும், பள்ளி ஆசிரியருமான பா. தென்றல் பொருளாளராகவும் இருந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.
லிம்ரா பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் நந்தவனம் பவுண்டேசன் 2024ஆம் ஆண்டுக்கான சாதனைப் பெண்கள் விருது வழங்கும் விழா இன்று 03-ஆம் திகதி சென்னை, அரும்பாக்கம் விஜய்பார்க் விடுதியில் சிறப்பாக நடைபெறுகிறது.
விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், துபாய் Power flow Middel East LLC. நிறுவனத்தின் Finance Director முனைவர் ஆ. முகம்மது முகைதீன், இலங்கை தினகரன், தினகரன் – வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், K-KCCS நிர்வாக இயக்குநர் கருணாநிதி காசிநாதன், திருச்சிராப்பள்ளி கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ எஸ். தாமோதரன், துபாய் Tech chip Computer Trading நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்தூல் வஜீத். இலண்டன் தொழிலதிபர் எஸ்.ராஜபார்ச்சம் ஆகியோர் கலந்து கொண்டு சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.
விழாவில் சரஸ்வதி பாஸ்கரன் (திருச்சி), திலகவதி பாஸ்கரன் (கும்முடிப்பூண்டி), எஸ்.விஜயலட்சுமி (சென்னை), ஏ. யாஸ்மீன் பேகம் (சென்னை) விஜயலட்சுமி மாசிலாமணி (சென்னை), சுபா பிரபு (திருச்சி), புஷ்பா சுப்பிரமணி (திருச்சி), ரேணுகா தேவி ராமசாமி (திருச்சி) எம். நபிலா பேகம் (புதுக்கோட்டை). அன்புத் தோழி ஜெயஸ்ரீ (கோயமுத்தூர்), எம்.விஜய சாமுண்டீஸ்வரி (புதுச்சேரி), வினோதினி (பெரம்பலூர்), எஸ்.பகவதி மோதிலால் (திருவனந்தபுரம்), ஜயலெட்சுமி (கோழிக்கோடு − கேரளா) பவானி சச்சிதானந்தன் (இலங்கை), விஜி ஆர்.கிருஸ்ணன் (சென்னை). எஸ். சௌமியா (இலங்கை), பிரணீதா கோணேஸ்வரன் (இலங்கை) கவிமகள் ஜெயவதி (இலங்கை) டெயினா மனோஜ் (இலங்கை), பத்மினி சின்னத்தம்பி (மலேசியா) ராக்விந்தர் கவுர் சாது சிங்க் (மலேசியா) சந்திரிகா பூவன் (மலேசியா), விமலா சூரியதாஸ் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் 2024ஆம் ஆண்டுக்கான சாதனைப் பெண் விருது பெறுகின்றனர். இது போல சமூகத்தில் சாதித்து வரும் பெண்களை அடையளம் கண்டு விருது வழங்கி கெளரவிப்பதின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதோடு மேலும் அவர்கள் பல சாதனைகள் செய்ய உந்து சத்தியாக இருக்கும் என்பதால் நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்குவதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதாக தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் தெரிவித்தார்.