“சொல் அல்ல செயல்” என்பதே இளம் அரசியல் தலைவரான அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அரசியல் அஸ்திரமாக – உயிர் நாடியாக இருந்துவருகின்றது. இதனை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மற்றுமொரு புரட்சிகரமான அபிவிருத்தி திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து, மலையக மறுமலர்ச்சிக்கான பயணத்தை மேலும் துரிதப்படுத்தியுள்ளார் என்றே கூற வேண்டும்.
ஆம், 2017 இல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் – இதுவரையில் இழுபறியில் இருந்து வந்த இந்தியாவின் நிதி உதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘பாரத் – லங்கா’ 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலையகம் வந்திருந்தபோது, மலையக மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்பற்றி அறிவித்தார். அதன்போது இருந்த பொருளாதார சூழ்நிலை இலங்கையில் தற்போது இல்லை. உலக சந்தையிலும் கட்டுமான பொருட்களின் விலைகள் எகிறியுள்ளன. இதனால் அன்று ஒரு வீட்டுக்கு ரூ 9- முதல் 10 லட்சம் வரை மதிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது செலவு இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சு நடத்தி, அதற்கான தொகையையும் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்ைக எடுத்துள்ளார்.
பாரத் – லங்கா 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின்கீழ் இதற்கான பிரதான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் பங்கேற்றிருந்தார்.
நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
7 பேர்ச்சஸா, 10 பேர்ச்சஸா?
எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வீடமைப்பு திட்டத்தை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னரைப்போல வீடுகளை மட்டும் நிர்மாணித்துவிட்டு, நீர், மின்சாரம், வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை வழங்காமல் விடாது, சகலவிதமான உட்கட்டமைப்பு வசதிகளுடனும்தான் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்படும். அதுமட்டுமல்ல வீடுகளை வழங்கும்போது சட்டபூர்வமான காணி உரித்தும் வழங்கப்படும்.
10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது, வீடுகளை அமைப்பதற்கு காணிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஜனாதிபதியும் 10 பேர்ச்சஸ் என அறிவித்துவிட்டார். இருந்தும் 7 பேர்ச்சஸ் எனவும் புரளி கிளப்பி விடப்படுகின்றது.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான வீட்டுத்திட்ட அறிவிப்பை இந்தியா விடுத்த நிலையில், அப்போதைய அமைச்சர் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதில் 4 ஆயிரம் வீடுகளை மலையகத்துக்காக பெற்றெடுத்தார்.
இதற்கமைய வடக்கு, கிழக்கில் முதல் இரு கட்டங்களாக 46 ஆயிரம் வீடுகளையும், மூன்றாம் கட்டமாக மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகளையும் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. அந்த 4 ஆயிரம் வீட்டுத் திட்டத்தைக்கூட உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறைவுசெய்து கொடுத்தது அமைச்சர் ஜீவன் தொண்டமான்தான் என்பதை கூறியாக வேண்டும்.
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளின் பிரகாரம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதன்ஓர் அங்கமாக மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையும் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
ஒரு இளம் அரசியல் தலைவராக குறுகிய காலப்பகுதிக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , அபிவிருத்தி திட்டங்கள், உரிமை அரசியல் என்பன மக்கள் மனங்களில் அவருக்கான ஆதரவு அலையை பெருக்கியுள்ளது.
இலங்கை வாழ் மக்கள் முறைமை மாற்றத்தை கோருகின்றனர். அந்த முறைமை மாற்றத்துக்குள் ‘சொல்லுக்கு செயல் வடிவம் என்பதும்’ பிரதானமாகும். ஆக சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்கும் ஜீவனின் அரசியல் இன்று பல்வேறு மட்டங்களிலும் பேசப்படுகின்றது.
க.கிஷாந்தன் ஊடக செயலாளர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு