பட்டாசு அல்லது வானவேடிக்கை எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் பல கருத்துக்கள் இருந்தாலும் சீன வெடி என்று நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். இன்றும் சிலர் அதை சொல்வதை நாம் அறி வோம்.
கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன் சீனாவில் முதல் பட்டாசு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மூங்கில் குழாய்களினுள் வெடிமருந்தை அடைத்து வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடிகளை வெடிப்பதால், தீய சக்திகள் மிரண்டு ஓடும் என்று சீன மக்கள் நம்பினார்கள். அது மட்டுமல்லாமல், போர் நடக்கும்போது எதிரி நாட்டு வீரர்களை பயப்படவைக்கவும் இவ்வெடிகளை சீனர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.
1800ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, வெள்ளை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் மட்டுமே பட்டாசுகளிலிருந்து வந்திருக்கின்றன. 1800ஆம் ஆண்டுக்குக் பிறகு வேதியல் வல்லுனர்களின் முயற்சியால், நீலம், சிவப்பு, பச்சை என்று விதவிதமான நிறங்களில் பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின.
வானில் சென்று பூப்பூவாக வெடிக்கும் பட்டாசுகளை தொலைவிலிருந்து கவனித்தால், வெளிச்சம் வந்த சில நொடிகளுக்குப் பிறகுதான் வெடிக்கும் சத்தம் கேட்கும். காரணம் சத்தத்தை விட ஒளியின் வேகம் அதிகம். இதனாலேயே, முதலில் வெளிச்சத்தையும் அதன்பின் சத்தத்தையும் கேட்கிறோம்.
உலகில் நடக்கும் பட்டாசு விபத்துகளில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களே 50 சதவீதத்திற்கும் அதிகமாக காயமடைகின்றனர். இன்றுவரை பட்டாசுகள் எந்த மெஷினின் உதவியும் இல்லாமல், கைகளாலேயே உருவாக்கப்படுகின்றன. தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதால், பட்டாசு தயாரிக்கும் பணியிலிருப்பவர்கள் கதர் உடைகளையே அணிய வலியுறுத்தப்படுகிறார்கள்.