Home » கே.ராஜலிங்கம்: மலையக மக்களின் உதிரத்தில் ஜனித்த தலைவன்

கே.ராஜலிங்கம்: மலையக மக்களின் உதிரத்தில் ஜனித்த தலைவன்

by Damith Pushpika
February 18, 2024 6:51 am 0 comment

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், லண்டனில் நிகழ்ந்த ‘மலையக இலக்கிய மாநாட்டில்’ மலையக நூல் அறிமுகத்தில், ‘சிங்களத் தீவினில் தீனர்களின் தொண்டர் கே.இராஜலிங்கம்’ என்ற நூலை அறிமுகம் செய்து பேசினேன். மலையகத்தில் நாங்கள் செய்திருக்கவேண்டிய ஒரு பெரும் பணியைத் தமிழகத்திலிருந்து ஆலம்பட்டு சோ.உலகநாதன் செய்திருக்கிறார் என்று அவரைப் பாராட்டியிருந்தேன். அந்த நூல்கள் விலைப்படாமல் தேங்கி நிற்கிறது என்பது எனக்குப் பெருங் கவலையை ஏற்படுத்தியது.

கே.ராஜலிங்கம் (1909- _1963)பற்றி எழுதப்பட்ட ஒரே ஒரு நூல் நமது அக்கறை இன்றி முடங்கிக் கிடந்தது வேதனையாக இருந்தது. ஆலம்பட்டு சோ.உலகநாதன் மிகச் சுவையாக இந்த நூலை எழுதியிருக்கிறார். அமரர் ராஜலிங்கத்தையும் அவரது குடும்பத்தினரையும் நன்கறிந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சே.ந.ஜெயசீலனிடமிருந்து பெற்ற தகவல்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு ராஜலிங்கம் பற்றிய அரிய நூலை உலகநாதன் நமக்குத் தந்திருக்கிறார். மலையகம் கண்ட அரசியல், சமூகத் தலைவர்களில் கே.ராஜலிங்கத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்வதற்கில்லை.

கே.ராஜலிங்கம் பற்றிய அற்புதமான சித்திரத்தை 1958 ஆம் ஆண்டில் ‘தினகரன்’ பத்திரிகையில் தந்திருக்கிறார் சி.வி.வேலுப்பிள்ளை. ‘மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்’ (2022) என்ற சி.வி.யின் நூலில் அந்தக் கட்டுரை கிடைக்கிறது. ‘மக்கள் இல்லாமல் அவருக்கு வாழ்வில்லை’ என்கிறார் சி.வி.

மலையக மக்கள் மத்தியில் இத்தகைய தன்னலமற்ற, அடக்கமான, தற்பெருமை கிஞ்சித்தும் இல்லாத, விளம்பரம் தேடாத பெருமகனை நாம் சந்தித்ததில்லை. ‘எனக்குச் சொர்க்கமும் வேண்டாம், தேயிலைத் தோட்டமும் வேண்டாம், தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்தால் போதும்’ என்று கணமும் தயங்காமல் சொல்லக்கூடியவர் ராஜலிங்கம் என்று ‘தீனர்களின் தொண்டர்’ என்று அவரைப் பாராட்டி எழுதியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

மலையக மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வு ஏற்படுவது மிக மிக அவசியம் என்ற உயரிய கொள்கையோடு, சங்குவாரித் தோட்டத்திக்கும் புசல்லாவைக்கும் இடையில் 1932 இல் ‘சரஸ்வதி வித்தியாலயம்’ என்ற பெயரில் மலையகக் குழந்தைகளுக்கெனப் பள்ளியை நிறுவிய பெருமகனை மலையகம் ஒருபோதும் மறந்துவிடாது. இருபத்து மூன்று வயதில் ஓர் இளைஞன் செய்திருக்கக்கூடிய உயர்ந்த பட்ச இலட்சியச் சாதனை இது. ‘கல்வி மூலம் தான் மலைநாட்டு மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று அவர் அன்றும் உறுதியாக நம்பினார். இப்பொழுதும் நம்பி வருகிறார்’ என்று சி.வி, மலையகத்தின் கல்வித்தந்தை ராஜலிங்கத்தைச் சரியாகவே அடையாளங் காண்கிறார்.

தோட்டம் தோட்டமாக நடந்துபோய், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புங்கள் என்று பெற்றோரிடம் மன்றாடியிருக்கிறார். அப்பாடசாலையின் வளர்ச்சிக்காக தன் குடும்பச் சொத்து, குடும்ப நகைகள் என்று அனைத்தையுமே அர்ப்பணித்திருக்கிறார். ஓராயிரம் ஆண்டுகளில் எப்போதாவதுதான் இம்மாதிரி மாணிக்கங்கள் ஒரு சமுதாயத்திற்கு வந்து கிடைக்கிறார்கள். ‘வாராது வந்த மாமணி’ என்று இத்தகையோரைப் பாடுகிறார் பாரதி.

அமரர் ராஜலிங்கத்தின் அரசியல், சமூக ஈடுபாடுகளைப் பார்க்கும்போது, நமது முன்னைய தலைமுறையினர் எத்தகைய செழுமையான, அர்த்தபுஷ்டிமிக்க அரசியல் பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்று நாம் உறுதியாகப் பெருமைப்பட முடியும்.

காந்தி, நேரு, ராஜாஜி, அம்பேத்கர், சத்தியமூர்த்தி, கே.பி.எஸ். மேனன், வி.வி.கிரி போன்ற பெரும் அரசியல் ஆளுமைகளோடு தொடர்பு கொண்டிருந்தவர் ராஜலிங்கம். 1956 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, அவரை கே.ராஜலிங்கமும் எஸ்.எஸ்.சோமசுந்தரமும் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். இருவரதும் அர்ப்பணிப்பை உணர்ந்த அம்பேத்கர், இருவரையுமே இந்தியா வருமாறும், அங்கு உங்கள் தொண்டு தேவைப்படுகிறது என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்திய வம்சாவளித் தொழிலாள ர்களின் திக்கற்ற நிலையை விளக்கி, தங்களுக்கு இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன என்று அம்பேத்கருக்கு விளக்கியுள்ளனர்.

‘பண்டித நேருவுக்கு இரண்டாவதாக வரும் இராஜாஜி – நுண்ணிய சிந்தனை வல்லாரான இராஜாஜி இராஜலிங்கத்தின் இயல்பான புத்திக் கூர்மையை வளப்படுத்தியுள்ளார். ஆனால், கற்றுத் தேர்ந்த டாக்டர் அம்பேத்கார் வளர்த்த தீயில் அவர் குளிர் காய்வதுதான் இதிலுள்ள முரண்பாடாகும்’ என்கிறார் சி.வி.

இந்தியாவின் அதியுன்னத ராஜதந்திரியான கே.பி.எஸ்.மேனன், இலங்கைக்கான இந்திய அரசின் முகவராக 1929-–1933 ஆண்டுக்காலப் பகுதியில் பணியாற்றிய காலத்தில், தனது சரஸ்வதி வித்தியாலயத்தின் ஆரம்ப விழாவுக்கு மேனனையும் அவரது பாரியாரையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார் ராஜலிங்கம். அவரின் அழைப்பை ஏற்று மேனன் தம்பதியினர் அந்த விழாவிற்குச் சிறப்புச் சேர்த்திருந்தனர்.

1939 ஆம் ஆண்டில் ‘இலங்கை இந்திய காங்கிரஸ்’ தோற்றங் கொண்டபோது, அதன் முதல் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றவர் ராஜலிங்கம். நெருக்கடி மிக்க காலப்பகுதி அது.

நாவலப்பிட்டித் தொகுதியின் பாராளுமன்ற அங்கத்தவராகவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும் செயற்பட்ட ராஜலிங்கம், 1952 இல் ஜெனீவாவில் சர்வதேசத் தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் பங்குகொண்டு, மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைத்தார். 28 ஆகஸ்ட் 1951, 5 நவம்பர் 1951 ஆகிய திகதிகளில் ராஜலிங்கம், சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனத்திடம் முன்வைத்த இரண்டு மகஜர்களில் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டார். இலங்கையில் வாழும் பெரும்பான்மை இனத்துக்கு வழங்கப்படும் உரிமைகள் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் இனரீதியாகப் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் ஆதாரங்கள் காட்டி வாதிட்டிருக்கிறார். மற்ற மகஜரில் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஏற்படுத்தும் தடைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார். தோட்டங்களுக்குள் தொழிற்சங்கங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தோட்டத்தில் வேலை இல்லாது போனால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றி விடுகிறதென்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இலங்கையில் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் நிலையை அறிவதற்கு உண்மை அறியும், நல்லிணக்க ஆணைக்குழு (Fact- finding and Conciliation Commission) விசாரணை மேற்கொள்ளவேண்டுமென்றும் அல்லது சர்வதேசத் தொழிலாளர் சம்மேளனம் இலங்கைக்கு ஓர் ஆணைக்குழுவை நியமித்து, ஆய்வு மேற்கொள்ளவேண்டுமென்றும் ராஜலிங்கம் கோரிக்கை முன்வைத்திருக்கிறார்.

1948 இலிருந்து மூன்று ஆண்டு காலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக ராஜலிங்கம் செயற்பட்ட காலம் சோதனை மிகுந்த காலமாகும். ராஜலிங்கத்தின் அரசியல், சமூகப் பயணம் மலர்ப் பாதையாக ஒருபோதுமே இருந்ததில்லை. கல்லும் முள்ளும் செறிந்த முள்வெளிப்பாதையாகவே இருந்திருக்கிறது. அந்த இருள்வெளியில்தான் தளராமல், ஓய்வின்றி ஒளியை நாடிப் பயணித்திருக்கிறார் அந்தப் பெருமகன். தன்னலமற்ற அரசியற் பெருமக்களின் வழி காட்டலில் மலையக அரசியல் ஊற்றுக்கண்டிருக்கிறது என்பது உண்மைதான்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division