தரீக்கத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்து அண்மையில் காலமான மறைந்த ஷெய்குல் காமில், ஆரிஃப்பில்லாஹ், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் (கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அழீம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குல வழியில் 34ஆம் தலைமுறை வாரிசாகவும் மெய்நிலை கண்ட ஞானி முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் 21ஆம் தலைமுறைப் பேரராகவும் 1937 டிசம்பர் 20ஆம் திகதி வெலிகமவில் பிறந்தார்.
உலகின் பல நாடுகளிலும் வாழும் தனது முரீதீன்களாலும் முஹிப்பீன்களாலும் வாப்பா நாயகம் என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர்கள் அறபு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சம பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். இவர் எழுதி வெளியிட்ட ஆக்கங்கள் இவரது ஆழ்ந்த தமிழ்ப் புலமையையும் அபார அறபு ஆற்றலையும், ஆன்மீக உச்சத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
வாப்பா நாயகத்தின் தாய்வழி மூதாதையர் 250 ஆண்டுகளுக்கு முன் பக்தாதில் இருந்து தென்னிலங்கைக்கு முதன் முதல் குடியேறிய ஒரே ஒரு ஜீலானி வமிசத்தினர் என அறியக் கூடியதாக உள்ளது. இவர்கள் காதிரிய்யாத் தரீக்கத்தின் பெரும் ஞான மகான்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,
தனது ஆரம்பக் கல்வியை வெலிகம அறபா வித்தியாலயத்தில் ஆரம்பித்த இவர் எஸ்.எஸ்.சி வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றாலும் தமிழ் மீது அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆர்வத்தினால் அடுத்த ஆண்டே தமிழில் எஸ்.எஸ்.சி பரீட்சை எழுதி தேறினார்கள்.
காலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்ற இவர், தமிழில் பண்டிதப் பரீட்சையும் எழுதி தேர்ச்சி பெற்றார். ஆசிரியராக 1963ஆம் ஆண்டில் பொதுவாழ்வை ஆரம்பித்த இவர் வெலிகம, பண்டாரக்கொஸ்வத்தை, சிலாபம், புத்தளம், அனுராதபுரம் ஆகிய ஊர்களில் 1990 வரையில் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் (அதிபராகவும்), வட்டாரக் கல்வி அதிகாரியாகவும் (அறபு), கல்வி அதிகாரியாகவும் பணியாற்றினார். ஆசிரியராக பணிபுரிந்த வேளை ஆங்கிலம், அறபு, தமிழ் இலக்கணம், இலக்கியம், இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு போதித்துள்ளார். அரச பணியில் இருந்த போதும் ஆன்மீகப் பணியையும் அவர் முன்னெடுத்து வந்தார்.
“மனிதனை மனிதனாக வாழவைப்பதே அற்புதம். அதனையே முஹம்மது (ஸல்)அவர்கள் செய்தார்கள். அதை தானும் பேணி ஏனையவர்களுக்கும் அடிக்கடி வலியுறுத்துபவராக இருந்தார். குறிப்பாக ஷரீஅத்தைப் பேணி ஐந்து நேரத் தொழுகையையும் பஜ்ருடைய நேரத்தில் குர்ஆன் ஓதுவதையும் கடைபிடித்து வரும்படியும் போதனை செய்தார்.
அன்பால், பண்பால் ஒன்றுபட்ட ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக “ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை” என்ற ஆன்மீக அமைப்பை இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் நிறுவி அதனூடாக தமது சீடர்களுக்கு மார்க்க ஞானம் கற்றுக்கொள்வதன் அவசியத்தைப் போதித்தார்.
பெற்றோரை இழந்த மற்றும் கல்வி கற்க வசதியற்ற ஏழைப் பிள்ளைகளுக்கு முற்றிலும் இலவசமாக மார்க்கக்கல்வியையும் உலகக் கல்வியையும் பெற்றுக்கொடுக்கவென தமிழகத்தின் திருச்சியில் “மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன்” என்ற அறபுக் கல்லூரியை நிறுவி அதன் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு வழிவகுத்துள்ளார். அத்தோடு அவ்னிய்யா பப்ளிக் ஸ்கூல் எனும் பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய ஆங்கில மொழிமூல பாடசாலையையும் நிறுவியுள்ளார். ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கிலும் இயற்கை அனர்த்த வேளைகளின் போது உடலாலும் பொருளாலும் உதவிகளைச் செய்யவுமென அவ்னிய்யா என்ற உலக அமைதி அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி பணிகள் பல்லாண்டு காலமாக முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ள ஸெய்யத் அவ்ன் கலீல் மௌலானா (ரஹ்) ஆன்மீகத் துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்புக்களும் அளப்பரியது.