சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் சந்தானம் பேசும்போது, “ எனக்கு இதுதான் முதல் பெரிய பட்ஜெட் படம். ‘டிடிரிட்டர்ன்ஸ்’ பட ஸ்டைலில் ஒரு காமெடி படம் எடுத்து ஹிட் கொடுக்க ஆசைப்பட்டேன். அப்படி வந்த கதைதான் இது. இந்தப் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது. அனைவரும் சிரித்து ரசிக்கும்படியாக இருக்கும். நானும் ஆர்யாவும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். இடையில் சேர்ந்து நடிக்கவில்லை. விரைவில் இருவரும் இணைந்து அட்வென்சர் ஃபேன்டஸி படம் பண்ண இருக்கிறோம். ஆர்யா தயாரிப்பிலும் நடிக்க இருக்கிறேன்” என்றார். விழாவில் நடிகர்கள் ஆர்யா, அல்லு சிரிஷ், இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.