61
முதன் முதலாக மகனை
விடுதியில் விட்டு
பிரிந்து வரும் அம்மா
உடன் தன்னையும் விட்டு
வருகிறாள்
அதிகம் பேசுபவர்களை கண்டு
முகம் திரும்பும் அம்மா
ஊர் திரும்பி வரும் வரைக்கும்
மகனைத் தவிர
வேறெதுவுமே பேசவில்லை
வரும் வழியில் மகனின் வயதில்
யார் குறுக்கறுத்தாலும்
மகனின் சாயலில் இருப்பதாக
மறுபடியும் கதை அவிழ்க்கிறாள்
சில தருணங்களில்
அங்கேயே தரித்து விடுகிறாள்
இப்போது அம்மாவின்
உடல்தான்
எங்களோடு பயணிக்கிறது
ஆனால் அம்மா மட்டும்
இன்னும் விடுதியில்தான்
மகனோடு தங்கி இருக்கிறாள்
அம்மாவின் வீடு முழுவதும்
நிரம்பி இருக்கின்றன
மகனது விடுதியின் அறைகள்