இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் 9- ஆவது முறையாக பீஹாரில் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் நிதீஷ்குமார். கடந்த 23 ஆண்டுகளில் 4- ஆவது முறையாக பா.ஜ.க கூட்டணிக்கு தாவியுள்ளார் நிதிஷ்குமார் என்பது வியப்பான செய்தியாகும்.
‘மகாகத்பந்தன்’ கூட்டணியில் இருந்து வெளியேறி 9- ஆவது முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பீஹார் மாநிலத்தின் முதல்வராக தலைநகர் பாட்னாவில் கடந்த வாரம் நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.
பீஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2020 ஆ-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தார்.
இந்நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின்பு, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து முதல்வராக தொடர்ந்து வந்தார். அதுதவிர, அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியிலும் அங்கம் வகித்து வந்தார் நிதிஷ்குமார்.
பதவி ஏற்பு நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதிஷ்குமார், “எங்கு இருந்து சென்றேனோ, அங்கேயே மீண்டும் வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளனர்.
“கூட்டணி இனி அப்படியே இருக்கும். இன்று எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மேலும் மீதமுள்ளவர்கள் விரைவில் பதவியேற்பார்கள். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என நிதீஷ்குமார் தெரிவித்தார்.
பா.ஜ.கவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள ‘இந்தியா’ என்ற பெயரிலான கூட்டணியில் நிதிஷ்குமாரும் ஒருவராக இருந்தார். அவர் மீது பெரும் நம்பிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், குத்துக்கரணம் அடித்து ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து விலகி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நிதீஷ்குமார் .
லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவ்வப்போது கூட்டணிகளை மாற்றிக் கொண்டு வந்தார் நிதீஷ்குமார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் காலத்துக்குக் காலம் கூட்டணி மாறுவது சகஜமானது. ஆனால் நிதிஷ்குமாரின் அரசியல் போக்கு சந்தர்ப்பவாதம் நிறைந்தது என்றுதான் இந்திய அரசியலில் கருத்து நிலவுகின்றது. 18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவுடன் முரண்பாடு கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் முதல்வர் ஆகியவர் நிதிஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் பா.ஜ.கவையும், ஃபாசிசத்தையும் வீழ்த்தப் போவதாகக் கூறி ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியதால் நிதிஷ்குமார் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அக்கூட்டணி வெற்றிபெறும் என்ற நம்பிக்ைகயும் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்ைக இப்போது கவிழ்ந்து விட்டது.
இதனிடையே பீகாரில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. லாலு, தேஜஸ்வி யாதவுடன் முரண்பட்டு மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் நிதிஷ்குமார்.
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியிருப்பது அந்தக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. நிதிஷ்குமாரின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணிக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை அமைத்தன. காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என 28 கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்தன.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முழுமூச்சாக முன்னெடுத்தவர் நிதிஷ்குமார். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில்தான் நடைபெற்றது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசத்தொடங்கிய போது பிரச்சினை ஏற்பட்டது.
இதனால், மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார். மறுநாளே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால், ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்காலம் இனிமேல் என்ன ஆகும் என்று அரசியலில் விவாதங்கள் அதிகரித்தது வந்த நிலையில், கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமாரும் அந்தக் கூட்டணியில் இருந்து இப்போது விலகி விட்டார்.
இது ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தன்னை முன்னிறுத்தவில்லை என்ற அதிருப்தியால் நிதிஷ்குமார் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
“பா.ஜ.கவுடன் இனிச் சேருவதற்குப் பதிலாக உயிரை விடுவேன்” என நிதிஷ்குமார் ஓராண்டுக்கு முன்னர் பேசியிருந்தார். ஆனால், ஓராண்டில் தனது நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக நிதிஷ்குமார் மாற்றியது ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை அதிர்சியில் உறைய வைத்துள்ளது.
மறுபக்கம் பா.ஜ.கவோ, இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று சொல்லிக்கொண்டே வந்தது. தற்போது ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறியிருப்பதை மகிழ்ச்சியோடு ரசித்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கும் இந்நிலையில், நிதிஷ்குமார் தற்போது எடுத்துள்ள முடிவு ‘இந்தியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பா.ஜ.கவுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ள மகாகூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியே வந்துள்ளதால் ‘இந்தியா’ கூட்டணி கவலையில் உள்ளது.
பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் அதிரடியைக் காரணம் காட்டி மாநிலக் கட்சிகள் இனிமேல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் கெடுபிடி காட்டும் வாய்ப்பு உள்ளதாக அனுமானிக்கப்படுகின்றது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மோடியின் செல்வாக்கு மற்றும் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் பலத்துடன் பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளது. அதேவேளையில், ‘இந்தியா’ கூட்டணியோ நிதிஷ்குமார் வெளியேறி இருப்பதால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
முதல்வராகப் பொறுப்பேற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், “நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விட்டேன். இனி எங்கேயும் செல்வதற்கான கேள்வியே இல்லை” என்று கூறியுள்ளார்.
பீகாரில் கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து நிதிஷ்குமார் தேர்தலைச் சந்தித்தார். இந்தத் தேர்தலில் பா.ஜ.க 78 தொகுதிகளிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகளையும் வென்றன. அங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். பா.ஜ.கவை விட குறைந்த இடங்களில் வென்றாலும் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி கிடைத்தது விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சாரங்கன்