மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்துள்ள பெறுமதிசேர் வரி மற்றும் ஏனைய வரிகள் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளன. இந்த வரி அறவீடுகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் உணரவில்லையா?
பதில்: நாங்கள் நன்றாக உணர்கிறோம். இது பற்றி நாம் எப்பொழுதும் கலந்துரையாடுவோம். இங்கே பிரச்சினை வரி அல்ல. வரி பற்றிய கொள்கை மற்றும் வரி விதிப்பு முறை என்பனவே கவனிக்கப்பட வேண்டியவை ஆகும். விதிக்கப்படும் வரிகளில் பெறுமதிசேர் வரி, வருமான வரி, மாதாந்த சம்பளம் மற்றும் வங்கி வைப்புக்கள் மீதான வரிகள் என்பன அடங்குகின்றன. உண்மையில் எடுத்துக் கொண்டால், வரி செலுத்த வேண்டிய 105,000 பேரில் 31,000 பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இதில் கவனம் செலுத்தி வருமான வரி செலுத்தாதவர்களை வருமான வரி செலுத்த வேண்டியவர்களாக மாற்ற வேண்டும். இதன் ஊடாகவே அரசாங்கத்தின் உண்மையான வரி வருமானத்தை அதிகரிக்க முடியும்.
கே: அது அரசாங்கத்தின் தவறு. வரி ஏய்ப்புச் செய்பவர்கள் நீண்ட காலமாகத் தலைமறைவாக இருப்பது ஏன்?
பதில்: புதிய முறையின்படி, வரி செலுத்துவதைத் தவிர்க்கும் தொழிலதிபர்கள் மற்றும் நபர்களைக் கண்டறிய முடியும். வரி செலுத்தாதவர்களை அப்போது எளிதில் அடையாளம் காண முடியும். அதற்காக வருமான வரி சட்டத்திலும் திருத்தம் செய்தோம். மற்றைய நாடுகளைப் போல, எதிர்காலத்தில், வரி ஏய்ப்பு செய்பவர்களை நேரடியாகக் கண்டுபிடிக்கும் முறைகளைக் கொண்டு வருவோம்.
கே: வரி மறுசீரமைப்புக்களை அரசாங்கமே உரிய நேரத்தில் கொண்டு வர வேண்டாமா? வர்த்தக வரிகள், வருமான வரிகளை அரசாங்கம் முறையாக வசூலிக்காமல் பொதுமக்களை பாதிக்கும் வகையில் பெறுமதி சேர் வரி போன்றவற்றின் ஊடாக அவர்களை ஒடுக்குவதற்கு வரிகளை அறிமுகப்படுத்துகிறதா?
பதில்: இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். எந்த விருப்பமும் இல்லாமல் வரியையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. ஜனாதிபதியினாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இலங்கை இனிமேலும் கடன் வாங்கியவாறு பயணிக்க முடியாது. வரிகளை வசூலிக்காமல் அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? ஓய்வூதியம் எவ்வாறு வழங்கப்படுகிறது? மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும். வரிப்பணம் இல்லாமல் அனைத்து சமூகநலப் பணிகளையும் அரசால் செய்ய முடியாது. அதுதான் யதார்த்தம்.
கே: சர்வதேச நாணய நிதியம் தவிர, ஆசிய அபிவிருத்தி வங்கியிலும் அரசாங்கம் கடன் பெற்றுள்ளது அல்லவா?
பதில்: ஆம்… ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் மூலம் நமது பொருளாதார நிலையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பொருளாதார நெருக்கடிக்காக எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.
கே: சர்வதேச நாணய நிதியம் அந்தக் கடன்களில் திருப்தி அடைகிறதா?
பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் விரைவாக மீண்டெழுந்த நாடு இலங்கை என்பதை அவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். அந்த வகையில் இலங்கைக்கு தமது பாராட்டுக்களை சர்வதேச நாணய நிதியத்தினர் தெரிவித்துள்ளனர்.
கே: இவ்வாறு மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் காட்டுகிறதா?
பதில்: இல்லை. சர்வதேச நாணய நிதியமும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை.
கே: பல அரசாங்க நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதில் உண்மை உள்ளதா?
பதில்: ஆம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்க மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான உண்மைகளை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அந்த நிறுவனங்களின் மோசடி மற்றும் ஊழல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். வரி நிலுவையை வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கே: அரசாங்க வங்கிகளில் பங்குகளைக் கொண்டுள்ள பல தொழிலதிபர்கள் உள்ளனர். அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து வசூலிக்க ஏன் வழியில்லை?
பதில்: ஆம், அது உண்மைதான். அரசாங்க வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கிய பின்னர் தொழில்கள் வங்குரோத்தாகி விட்டன என்று காட்டுகிறார்கள். ஆனால் நல்ல இலாபம் ஈட்டும் வேறு தொழில்கள் உள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் அனைவரும் வரி செலுத்துவதையும், வங்கிக் கடன் செலுத்துவதையும் தவிர்க்கின்றனர்.
கே: சாதாரண நபர் ஒருவர் வங்கியில் இரண்டு இலட்சங்களைக் கடனாகப் பெறுவதாயின் பல ஆவணங்கள் கோரப்படுகின்றன. இதற்குப் பல பிணைகள் கேட்கப்படுகின்றன. ஆனால் எந்தவித பிணையும் இன்றி கடன்களைப் பெற்றவர்களிடமிருந்து பணம் மீட்கப்படவில்லையே?
பதில்: அதைத்தான் நான் முன்பே சொன்னேன், அரசு நிறுவனங்களில் ஊழல் அதிகாரிகள் நிறைந்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தனியார் வங்கிகளில் அந்த நிலை இல்லை.
கே: ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மகிழ்ச்சியடைகின்றீர்களா?
பதில்: 70 வீதமாக இருந்த பணவீக்கம் இன்று 5 வீதமாகக் குறைந்துள்ளது. நானூறு என்று இருந்த ெடாலர் இன்று சுமார் 320 ஆகக் குறைந்துள்ளது. டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது. எரிபொருள் உள்ளது, எரிவாயு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
கே: நீங்கள் முன்னர் அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தாலும் தற்போதைய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே அங்கம் வகிக்கின்றீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்டுச் செல்லவில்லை. கட்சிக்காக அதிகம் பேசுபவன் நான். மக்களுக்கு சேவை செய்ய எனக்குப் பதவிகள் தேவையில்லை. எனக்கு அமைச்சு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னால் முடிந்ததைச் செய்வேன்.