அறிவார்ந்த அவையோரினால்
அழகோங்கிடும் மன்றத்தில்
வரமாகிய கல்வியில்
வாகைசூடி நானொளிரக்
கரமாடும் காற்றலையில்
கலையாது ஒலியேற்ற
உரமூட்டிய என்னாசான்கள்
எங்கேயென்று தேடுகிறேன்
முற்றாத இளமனமும்
வற்றாத புன்னகையுமாய்
சிட்டான பருவத்தில்
கற்றொழுக சென்றயெனைக்
கனிவோடு வரவேற்று
அடியாது ஏசாது
அகரமூட்டிய என்முதலாசன்
எங்கேயென்று தேடுகிறேன்
வெள்ளைத் துகள்கள்
விசிறியடித்த
எந்தன்
பள்ளியறைக் கட்டடத்தில்
பாகுபாடு காட்டாது
தெள்ளமுதக் கல்வியை
தெளிவாக ஊட்டிய
கள்ளமில்லா என்னாசான்
எங்கேயென்று தேடுகிறேன்
அறிவின் பேருற்றாய்
அன்னையின் மறுவுருவாய்
நெறியூட்டும் அறப்பணியை
நேர்த்தியான முதற்பணியாய்க்
கரமேற்றுச் செயலோச்சித்
துறைகாட்டி மாணாக்கரைக்
கரையேற்றிய என்னாசான்கள்
எங்கேயென்று தேடுகிறேன்
மாய்கின்ற இன்பத்தில்
மகிழ்கின்ற இளவயதில்
சாய்கின்ற இளமனம்
சரியாது எமைக்காத்துச்
சேயாக எமைப்பார்த்துக்
கனியமுதக் கல்வியூட்டிய
கண்ணியமான என்னாசான்கள்
எங்கேயென்று தேடுகிறேன்
பேராளும் துறைகளைப்
பேருலகிற்கு வழங்கிடும்
சீராளும் சிறப்பாலும்
சிந்தையுறும் பண்பாலும்
பாராளும் பணிகளில்
பவளமுத்தாய் விளங்கிடும்
மகத்துவ மிக்க என்னாசான்கள்
எங்கேயென்று தேடுகிறேன்