தாலச்சக்கரம் ஒரு புறம் வேகமாகச் சுழன்றுகொண்டிருந்தாலும், மற்றொரு புறம் உலகமும் மனித வாழ்க்கையும் சுற்றிச் சுழன்றுகொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது சக்கரம்.
சக்கரத்தைக் கண்டுபிடித்தது ஒரு அறிவியல் வெளிப்பாடா, ஒரு விபத்தா அல்லது எண்ணற்ற பயன்களைத் தரக்கூடிய ஒற்றை மந்திரமா? இந்தக் கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்காமல் போகலாம். தீயை உருவாக்குவது எப்படி என்பதைக் கண்டுபிடித்த பிறகு, மனிதனின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம்தான். சக்கரத்திற்குக் கண்டுபிடிப்புகளின் தொட்டில் என்றொரு பெயரும் உண்டு.
உலகின் எந்த மூலையிலோ இருந்த ஒரு குகை மனிதன் ஒருவன்தான் முதன்முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். அல்லது ஏற்கனவே பானை செய்யப் பயன்பட்ட சக்கரத்தை மேட்டிலிருந்து அந்த நபர் கீழே உருட்டி விட்டிருக்க வேண்டும். அது உருண்டு ஓடிய அந்தத் தருணம், ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு உருக்கொண்டது. அது அளவிட முடியாத வகையில் இந்த உலகைப் புரட்டிப் போட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் பொருள்களை உருட்டி விடுவதற்கு உருளையான மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த உருளைகளுக்குப் பதிலாக, அச்சு இல்லாத சக்கரங்கள் வந்தன. பிறகு ஒரு அச்சில் சுழலும் சக்கரங்கள் வந்தன. உலகின் பண்டைய நாகரிகங்களான மெசபடோமியா நாகரிகத்தில் கி.மு. 3,500ஆவது ஆண்டில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏர், சூரிய விளக்கு போன்ற கண்டுபிடிப்புகள் இயற்கையில் உள்ள பொருட்கள் அளித்த உத்வேகத்தின் அடிப்படையில் உருவானவை. ஆனால், சக்கரம் இயற்கையின் எந்த முன்மாதிரியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவில்லை. சக்கரம் உருவான காலம் குறித்துத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடையே விவாதம் இருந்தது. அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக்கழகம் மேற்கண்ட காலத்தைக் குறிப்பிட்டுள்ளது.
சக்கரம் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாக, மண்ணைக் குழைத்துப் பானை செய்வதற்குப் பயன்பட்டிருக்கிறது. ஆரம்ப கால மண் பாத்திரங்கள் கையால் வனையப்பட்டுக்கொண்டிருந்தபோது, அவற்றைத் தெளிவான வட்ட வடிவத்தில் உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் மண்பாண்டக் கலைக்கு அடிப்படையான சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. சுழலும் சக்கரம் மூலம் பாத்திரத்தின் அனைத்துப் பகுதிகளையும், ஒரு மண்பாண்டக் கலைஞர் இருந்த இடத்திலேயே சமமான அளவில் வடிக்க முடிந்தது.
அந்த வகையில் நாகரிக வளர்ச்சியில் சமையலுக்கான மண்பாத்திரங்களின் உருவாக்கத்திலும் சக்கரங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. பண்டைய நாகரிகங்களில் சக்கரங்கள் மூலம் மண் பாத்திரங்கள் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் புதைபடிமங்களாகக் கிடைத்துள்ளன. மண்பாண்டங்கள் செய்ய ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு, மெசபடோமியர்கள் சக்கரங்களைக் கொண்டு ஒரு பொருளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்லவும் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டுகொண்டனர்.
அந்தக் காலத்தில் சக்கரங்கள் மரத்தினாலேயே செய்யப்பட்டன. இன்றைக்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பழைய சக்கரங்களில் பல ஐரோப்பாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட கி.மு. 2000 ஆம் ஆண்டில் பண்டைய எகிப்தில் சக்கரங்கள் கொண்ட தேர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அந்தக் காலத்தில்தான் சக்கரங்களில் ஆரங்கள் சேர்க்கப்பட்டுச் சக்கரங்களின் வலு அதிகரித்தது, எடையும் குறைந்தது. உலகில் இதுவரையிலான இயந்திரவியல் கண்டுபிடிப்புகளில் சக்கரமே மிகப் பெரிய கண்டுபிடிப்பு.
அன்றைய தேர் தொடங்கி, இன்றைய கார், பஸ், சைக்கிள், தொழிற்சாலை இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள், திரைப்பட புரொஜெக்டர்கள், ஏன் கீ கொடுக்கும் பொம்மைகள் வரை சக்கரங்கள் இன்றி எதுவும் அசையாது. அன்று முதல் இன்று வரை மண்பாண்ட உருவாக்கத்திலும், பொதியைச் சுமந்து செல்லும் வண்டிகளிலும் சக்கரங்கள் பயன்பட்டு வருகின்றன.