“தமிழ் மக்கள் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொது வேட்பாளராக களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன். ஆனால், அதற்கு அவர் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களை அறிவூட்டக்கூடிய விதத்தில் தொலைக்காட்சியில் சிங்களமொழியில் உரையொன்றை நிகழ்த்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இருப்பினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கின்றார். இது பற்றிய உங்களது கருத்து என்ன?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை போன்று மும்மொழிகளையும் அறிந்த ஒரு பொது வேட்பாளரால் தமிழ் மக்களுக்கு அளப்பரிய சேவையாற்ற முடியும். வாக்காளர்கள் மத்தியில் இடம்பெறக்கூடிய ஆள் மாறாட்டத்தையும் குறைக்க முடியும். போதியளவான வாக்குப்பதிவு இடம்பெறுவதை உறுதிசெய்ய முடியும்.
மேலும், மும்மொழிகளையும் அறிந்த பொது வேட்பாளரொருவரை களமிறக்குவதன் மூலம் தொலைக்காட்சிகளில் வேட்பாளர் ஒருவருக்காக ஒதுக்கப்படக்கூடிய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்றளவிலே சிங்களமொழி மூலமான எந்தவொரு ஊடகமும் குறிப்பாக வட, கிழக்கு தமிழர் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை என்றார்.