கடைகளில் வெள்ளை நிற முட்டைகளுடன் அதிகம் பிரவுன் நிற கோழி முட்டைகளும் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இரண்டு முட்டைகளுக்கும் என்ன வித்தியாசம்?
கவனித்துப்பார்த்தால், பிரவுன் நிற முட்டைகளின் விலை அதிகமாக இருக்கும். விலை அதிகமாக இருப்பதாலேயே, அந்த முட்டைகள் தான் சத்தானவை என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் இரண்டு நிற முட்டைகளுக்கும் சத்துகள் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலும் ஒரே அளவில் தான் எல்லா சத்துகளும் உள்ளன.
சில சமயங்களில் முட்டை ஓடுகளில் வித்தியாசம் தெரியலாம். இதற்குக் காரணம் கோழிகளின் வயது. சின்ன வயது கோழிகளின் முட்டை ஓடுகள் மொத்தமாகவும், வயதான கோழிகளின் முட்டை ஓடுகள் கொஞ்சம் ஒல்லியாகவும் இருக்கும்.
மற்றபடி பிரவுன் நிற முட்டைக்கும் வெள்ளை நிற முட்டைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பிறகேன் விலை மட்டும் அதிகம்?
இந்த பிரவுன் நிற முட்டைகளை இடும் கோழிகள் மற்ற கோழிகளை விட அளவில் பெரியவை. அதே மாதிரி மற்ற கோழிகளை விட அதிக உணவு உட்கொள்ளக்கூடியவை. சுருக்கமாகச் சொன்னால், பராமரிப்பு செலவு இவற்றுக்கு அதிகம். அதனால் தான் முட்டைகளின் விலையும் அதிகம்.