27 நாட்களாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதம் எதிர்க்கட்சியின் பாரிய எதிர்ப்புக்கள் இன்றி நிறைவடைந்தது. வரவு செலவுத் திட்ட காலம் முழுவதும் ஜனாதிபதி பாராளுமன்றத்திக்கு விஜயம் செய்ததால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பவற்றின் போட்டி நாயகனாக இருந்தது ஜனாதிபதி ரணிலாகும்.
“வரவு செலவுத் திட்டத்தையும் வென்றாகிவிட்டது. வற் வரியினையும் வெற்றி. ஐ.எம்.எப் ஐயும் வெற்றி பெற்றுவிட்டோம். இனி இருப்பது நாட்டைக் கட்டியெழுப்புவது மாத்திரமேயாகும்“ என பாராளுமன்ற ஜனாதிபதி ரணில் கூறினார்.
நிதி அமைச்சராக அதிக நாட்கள் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஏனைய பணிகளையும் இடையூறின்றி முன்னெடுத்துச் செல்லச் சிரமமப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்த ரணில், அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வற் வரியினை 3 வீதமாக அதிகரிக்கும் விவாதம் தொடர்பில் அவதானத்துடன் இருந்தார்.
ஜனாதிபதியிடமிருந்து பிரசன்னவுக்கு தொலைபேசி அழைப்பு
வற் வரி விவாதம் கோரமின்மையால் இடைநடுவில் நிறுத்தப்பட்ட செய்தியை வழங்கியது பேராசிரியர் ஆசு மாரசிங்கவாகும். அதையடுத்து உடனே ஆளுங்கட்சி அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவை தொடர்பு கொண்ட ஜனாதிபதி ரணில், “எதிர்க்கட்சி கோரிய விவாதத்தை அவர்களே வேண்டாம் எனக் கூறினால் நாம் இதனை நாளையே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதமின்றியே நிறைவேற்றிக் கொள்வோம்“ எனக் கூறியுள்ளார். அமைச்சர் பிரசன்னவும் இதற்கு இணங்கியதோடு, திங்கட்கிழமை விவாதமின்றியே வற் வரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
திங்கட்கிழமை காலை ஜனாதிபதி NSBM பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹோமாகம பிடிபனவுக்குச் சென்றார். பல்கலைக்கழகக் கல்வியை நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என உரையாற்றிய ஜனாதிபதி ரணில், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்னும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவு தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு அதன் நிறைவேற்றுக்குழு கூட்டம் கடந்த 12ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற இருந்ததோடு, நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பை திங்கட்கிழமை நடாத்துவதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.
ஷெஹான் மற்றும் சியம்பலாபிட்டிய நன்றி கூறிய ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே வழங்கிய அர்ப்பணிப்புக்காக ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வைத்து தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜனாதிபதியின் திட்டமே இதனைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்தது என அவர்கள் கூறினர்.
முன்னாள் ஆளுநரும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலாளர் பதவிகளை வகித்த சிரேஸ்ட நிருவாக சேவை அதிகாரியுமான ஒஸ்டின் பெர்னாண்டோவின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா கொழும்பு பீ. எம். ஐ. சீ. எச் மண்டபத்தில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்கா மற்றும் தலதா அத்துகோரளவும், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்திரிபால சிரிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டிருந்தனர். ஜனாதிபதி ரணிலுக்கு இந்நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்குப் பதிலாக இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கா கலந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் வரலாற்றுப் பாடம்
ஜனாதிபதி அமைச்சரவைக்கு புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார். அது ஆங்கிலேய ஏகாதிபத்தியங்களால் அநியாயமாகக் கொல்லப்பட்ட ஹென்றி பேதிரிஸின் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான குழு நியமிப்பது தொடர்பான பத்திரமாகும். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போது அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரியுமளவுக்கு அவரைப் பற்றிய வரலாற்றை ஜனாதிபதி கூறினார்.
“அவரது சந்ததியினர் வஹும்புரா சாதியில் உயர்நிலையில் இருந்தவர்களாகும். அன்று சிங்கள முஸ்லிம் கலவரத்தில் அவர் கலந்து கொண்டிருக்கவில்லை. எனினும் அவரது தந்தை தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவரைக் பழிவாங்கவே பேதிரிஸ் கொல்லப்பட்டிருக்க வேண்டும். மறுபுறத்தில் வனவாசல, ஹுனுப்பிட்டிய பிரதேசங்களிலும், களனி, பேலியகொட பிரதேசங்களிலும் இந்த சாதியைச் சேர்ந்த பலர் இருந்தனர். அவர்கள் வெளியில் வருவார்கள் என்ற அச்சமும் வெள்ளையர்களுக்கு இருந்தது” எனக் கூறிய ஜனாதிபதி அத்தோடு நின்றுவிடாமல் தனது வரலாற்று அறிவு எப்படிப்பட்டது என்பதைக் காட்டும் வகையில் நீண்ட விளக்கமளித்தார்.
வரவு செலவுத் திட்ட காலத்தில் பிரதமரால் பாரம்பரியமாக வழங்கப்படும் இராப்போசன விருந்து கடந்த செவ்வாய்கிழமை இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணிலும் அங்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்கு பாராட்டு
ஜனாதிபதி புதன்கிழமை பாராளுமன்றத்திற்குச் சென்றது நல்லதொரு செய்தியுடனாகும். அது IMF இரண்டாவது தவணைக்கான அனுமதி தொடர்பான செய்தியாகும். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்றடைந்தவுடன் அங்கு சென்ற அமைச்சர் நிமல் சிறிபால மற்றும் பேராசிரியர் ஆஷு மாரசிங்க ஆகியோர் தேசத்தைக் கட்டியெழுப்பும் எதிர்காலப் பணிகள் வெற்றியடைவதற்காகத் தமது வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். இதனை வெற்றியடையச் செய்வதற்கு அமெரிக்காவிலிருந்து உதவிய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.
சபைக்குள் சென்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து விசேட அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதி ரணில், வீழ்ச்சிப் பாதையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்ததுடன், இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளதை நினைவு கூர்ந்தார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிலியர்ட், கெரம், செஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
45 வருடங்களாக ஆட்டமிழக்காமல் இருக்கும் வீரர் யார்?
“நளீன் பண்டார பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகும். என்றாலும் அவர் அவ்வாறு நடந்து கொண்டாலும் சபையை விட்டு வெளியே வந்து குரோதத் தன்மையுடன் நடந்து கொள்ளமாட்டார். இந்த பாரம்பரியம் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் உள்ளது. விமர்சனமும் விவாதமும் சபையில் மட்டுமே இருக்க வேண்டும். விளையாட்டு என்பது மனதை இலகுபடுத்தும் ஒன்றாகும். எனவே இங்கு நல்ல வீரர்கள் உள்ளனர். நான் அரசியல் விளையாட்டைச் சிறப்பாக விளையாடுவேன். ஏனெனில் நான் சுமார் 45 வருடங்களாக ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறேன்” என ஜனாதிபதி சொன்னதும் எல்லோராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இந்நிகழ்வில் பரிசில்களை வழங்கிக் கொண்டிருந்த ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் தற்செயலாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். “இந்த வரவு செலவுத் திட்ட விவாதங்களில் நீங்கள் பேசுவதை நான் பார்க்கவே இல்லையே? முன்னர் நீங்கள் நன்றாக தயாராகி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர். இந்த முறை என்ன நடந்தது” என ஜனாதிபதி கேட்டபோது, “இன்று பேசப் போகிறேன்”. எனக் கூறிவிட்டு அவர் அங்கிருந்து விலகிச் சென்றார்.
ஜனாதிபதி அவரைக் கடந்து சென்றது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் லொபியின் பக்கத்திற்காகும். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷ டி சில்வா, காமினி வலேபொட உள்ளிட்டோர் இருந்த இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு கதிரை ஒன்றில் அமர்ந்து அவர்களுடன் உரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவ்வழியே சென்ற அநுர குமார திஸாநாயக்கவைப் பார்த்து ஜனாதிபதி, “உங்களின் உரையைக் கேட்கவே வந்தேன். எங்கே நீங்கள் பேசவில்லையே?” எனக் கேட்டபோது, பதிலளித்த அநுர, “அனைத்துக்குமாகப் பேசுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எங்கள் நேரத்தையும் எடுத்து பேசுவார். அவர்தான் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்காகவும் பேசுவார்’’ என்றார்.
“அப்படியாயின் நாம் அவரை வடகொரியாவுக்கு அனுப்புவோம். ஏனெனில் அங்கு உரையாற்றுவது ஒருவர் மாத்திரம்தானே” என ஜனாதிபதி கூறிய போது அங்கிருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியாது போனது.
ரணில், – சஜித் சந்திப்பு
தனது அணியினருடன் இருந்த ஜனாதிபதியைக் கண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் அவரை நோக்கி வந்தபோது ஜனாதிபதி ரணில், “நாங்கள் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று கூறியது அனைவரையும் சிரிக்க வைத்தது.
“நான் மக்களுக்காக எதிர்க்கட்சித் தலைவருக்கான பணிகளைச் செய்கிறேன்” என சஜித் கூறிய போது, “என்றாலும் உங்களின் அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நாலக கொடஹேவாதானே” என ஜனாதிபதி கூறியதையடுத்து, “இல்லை, இல்லை, இன்னும் அவ்வாறில்லை” என பதிலளித்த சஜித் அங்கிருந்து விலகிச் சென்றார்.
ஆனந்த தேரர் மற்றும் பெல்லன்வில தேரர் ஆகியோர் அரசாங்கத்துக்கு வாழ்த்து
இதேவேளை, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் பெல்லன்வில தம்மரதன தேரரை சாகல ரத்நாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன் போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தை பாராட்டிய இரு தேரர்களும், அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் செயற்படுவதால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்குமாறும் சாகலவிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அடுத்த தடை தாண்டல்
கடந்த 14ம் திகதி இரவு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் முக்கியஸ்தர்கள் பலர் அமர்ந்திருந்த ஒரு மேசையின் மீது அனைவரின் கவனமும் சென்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஆர்.பல்லேவெல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன உள்ளிட்டோர் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, “எப்படியும் எதிர்வரும் தேர்தல்களில் மொட்டுக் கட்சியே தீர்க்கமான காரணியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் வஜிர கூறியது,
இந்த மேசையில் அதிக ஜனாதிபதிகள் உள்ளார்கள் என வஜிர கூறிய போது அனைவரும் சிரித்தார்கள்.
“இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளார்கள் என அறியக் கிடைத்துள்ளது” என்றவாறு பேச்சில் இணைந்து கொண்டார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ. அரசியலுக்கு மேலதிகமாக, வேறு பேச்சுக்களாலும் அந்த வட்டமேசை நிரம்பியிருந்ததால், பலரது கவனம் அதன் பக்கம் திரும்பியது.
எம். எஸ். முஸப்பிர்