உலகக் கிண்ணத்தில் படு தோல்வியை சந்தித்த பின்னர் முதல் விக்கெட்டாக இலங்கை தேர்வுக் குழு வீழ்த்தப்பட்டிருக்கிறது. பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு பதில் உபுல் தரங்க தலைமையில் புதிய தேர்வுக் குழுவை நியமிக்கப்போவதாக புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டில் அண்மையில் நிகழ்ந்துவரும் குழப்பங்களின் தொடர்ச்சியாகவே இந்த மாற்றம் இடம்பெறுகிறது. உலகக் கிண்ணத்தின் சகிக்க முடியாத தோல்வி, இலங்கை கிரிக்கெட் மீதான ஐ.சி.சி தடை, தொடர்ந்து புதிய அமைச்சர் நியமனம் ஆகிய போக்கை பார்க்கும்போது முதலில் தேர்வுக் குழு மீது கை வைப்பார்கள் என்பது ஊகிக் முடிந்ததே.
பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறியதற்கு அப்பால் இந்த மாற்றம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருக்கவில்லை. ஹரீன் பெர்னாண்டோ போற போக்கிலேயே உபுல் தரங்கவை புதிய தேர்வுக் குழு தலைவராக நியமித்திருப்பதாக கூறி இருந்தார். என்றாலும் அதிரடி மாற்றங்கள் நிகழப் போகிறது என்பது உறுதி.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு அல்லது அதன் கீழ் இயங்கும் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான தேசிய விளையாட்டுச் சபைக்கு இடையில் நீடித்த இழுபறியில் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பாக கிரிக்கெட் தேர்வுக் குழுவை குறிப்பிடலாம்.
பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்து அனுப்பும் அணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர், தாமதித்து ஒப்புதல் அளிப்பது இல்லையென்றால், அந்தத் தேர்வு குறித்து விசாரணைக்கு உட்படுத்துவது என்றே கதை நீண்டது. இந்த இழுபறி மைதானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது வெளிப்படையானது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினாலேயே பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழு நியமிக்கப்பட்டது. அதில் முன்னாள் விக்கெட் காப்பாளர் ருமேஷ் களுவிதாரண, ஹேமன்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு. கர்னைன் மற்றும் பி.ஏ. திலகா நில்மினி குணரத்ன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நியமனம் பெற்ற ஆரம்பத்திலேயே அதிரடி முடிவுகளை எடுக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக முன்னாள் அணித் தலைவர்களான அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்னவை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டினார்கள். 2023 உலகக் கிண்ணத்திற்கு அணியை தயார்படுத்துவதாகக் கூறியே இதனைச் செய்தார்கள்.
ஆனால் அது தொடக்கம் இலங்கை அணியின் பெறுபேறுகள் நிலையானதாக இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதான கிரிக்கெட் தொடர் ஒன்றாக டி20 ஆசிய கிண்ணத்தில் இலங்கை கிண்ணத்தை வென்றது. ஆனால் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் நேரடித் தகுதி பெற தவறிய இலங்கை அணி அதில் தகுதி பெறுவதற்கு சிம்பாப்வே வரை சென்று தகுதிகாண் போட்டியில் ஆட வேண்டி ஏற்பட்டது.
பின்னர் இலங்கையில் நடந்த ஒருநாள் ஆசிய கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டிவரை முன்னேறினாலும் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 50 ஓட்டங்களுக்கு சுருண்டாது அனைத்தையும் கேள்விக்குறியாக்கியது. என்றாலும் அடுத்து வந்த உலகக் கிண்ணத்திற்கு பெரிய மாற்றங்கள் இன்றி அதே அணியை அனுப்ப போட்டிகளில் சோபிக்கத் தவறியது மாத்திரம் அன்றி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது, மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கிய திமுத் கருணாரத்ன மற்றும் இடைநடுவே அஞ்சலோ மத்தியூஸை அழைத்தது போன்ற குழப்பங்கள் தேர்வுக் குழு மீது பெரிதாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதாவது பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவின் காலத்தில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தமாக 121 போட்டிகளில் ஆடி 53இல் வென்று 62 போட்டிகளில் தோற்றிருக்கிறது. இதன் வெற்றி தோல்வி விகிதம் 0.854.
சோபிக்கத் தவறிவரும் வீரர்களை தொடர்ந்து தேர்வு செய்தது, அதிலும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அணித் தேர்வில் செல்வாக்கு செலுத்தியது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்தத் தேர்வுக் குழுவுக்கு இருந்தது. இதன் அரசியல் பின்னணிகள் பற்றி பேசப்போனால் சொல்ல வந்த கதையே மறந்துவிடும்.
என்றாலும் உலகக் கிண்ணத்தில் தோற்ற பின் பிரமோத்ய அரசியல் தான் பேசினார். இலங்கை கிரிக்கெட்டை வீழ்த்த கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதி நடப்பதாகக் கூற, விளையாட்டு பொலிஸுக்கு அலைக்கழிய வேண்டி ஏற்பட்டது. ஆனால் உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட தோல்விக்கு தன் பக்க தவறுகள் பற்றி அவர் ஒருபோதும் பேசவில்லை.
இப்படியான ஒரு தோல்விக்கு பின்னர் அதற்கு யாராவது பொறுப்பேற்பது அவசியம். தோல்விக்காக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இலங்கை அணி மன்னிப்புக் கேட்டதோடு சரி. அதுபற்றி முறையான மீளாய்வு ஒன்று நடந்ததாகத் தெரியவில்லை.
என்றாலும் தற்போதைய சூழலில் ஓர் அணியின் நிர்வாகம், தேர்வுக் குழு, பயிற்சிக் குழாம் ஏன் அணியிலும் அதிரடி மாற்றங்கள் நடப்பது வழக்கமான ஒன்று. உலகக் கிண்ணத்தில் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை பார்த்தால் எல்லோருமே கூண்டோடு துரத்தப்பட்டு வருகிறார்.
அத்தனை தீவிரத்தை பார்க்க முடியாதபோதும் பிரமோத்ய வெளியேற்றப்பட்டு உபுல் தரங்க அழைக்கப்பட்டது ஓர் அதிரடி முடிவுதான். 38 வயதான உபுல் தரங்க அண்மையில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இன்னும் முதல்தர கிரிக்கெட்டியில் ஆடி வருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் கூட பிரதான கழகங்களுக்கு இடையிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் என்.சி.சி கழகத்திற்காக ஆடி இருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சர்வதேச மட்டத்தில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் ஆடுகிறார்.
இப்படி இருக்க அவர் தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்படுவது சொந்த விருப்புகள் தாக்கம் செலுத்தக் கூடிய ஆதாய முரண் (Conflict of interest) சூழலை ஏற்படுத்தும். என்றாலும், அவர் முதல்தர போட்டிகளில் ஆடியபடி தேர்வுக் குழு தலைவராக செயற்படப்போகிறாரா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தேர்வுக் குழுவில் இயங்குவது என்பது சாதாரணமானது அல்ல. தேசிய அணிக்கான திறமைகளை தேட வேண்டும். கழக மட்ட, மாகாண மட்ட, பாடசாலை மட்ட ஏன் தெருவோரக் கிரிக்கெட்டைக் கூட உண்ணிப்பாக அவதானிப்பது அவசியம்.
லசித் மாலிங்க, டில்ஷான் மதுஷங்க, அஜந்த மெண்டிஸ் போன்ற வீரர்களின் தேர்வு என்பது கழக மட்டத்தில் நன்றாக விளையாடியதைப் பார்த்து நடந்ததல்ல. அவர்கள் விசேட திறமைகளை கண்டறிந்து அணியில் சேர்க்கப்பட்டார்கள். அவ்வாறான விசேட திறமைகளைத் தேடுவது தேர்வுக் குழுவின் பொறுப்பு.
பிரமோத்ய விக்ரமசிங்கவை எடுத்துக் கொண்டாலும் அவர் திடுதிடுப்பென்று தேர்வுக் குழுத் தலைவராக வரவில்லை. 2004 ஆம் ஆண்டு ஹசன்த டி மேல் தலைமையிலான தேர்வுக் குழுவில் இடம்பெற்ற அவர் பின்னர் 2013 இல் சனத் ஜயசூரிய தலைமையில் தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டபோதும், பின்னர் 2020இல் மீண்டும் ஹசந்த டி மேல் தலைமையில் தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டபோதும் அதில் அங்கத்தவராக செயற்பட்டு அனுபவம் பெற்ற பின்னரே தலைவராக நியமிக்கப்பட்டார்.
உபுல் தரங்க இலங்கை அணிக்காக 300ஐ நெருங்கும் அளவு சர்வதேச போட்டிகளில் ஆடிய சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர். ஒருநாள் அணிக்கு தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார். சனத் ஜனசூரியவுக்கு அடுத்து ஒருநாள் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது 174) பெற்ற வீரர், ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக சதம் (15) பெற்ற வீரர்களில் ஐந்தாவது இடம், ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக வேகமாக 4000 ஓட்டங்களை பெற்றவர் என்று அவரது சாதனைப் பட்டியல் நீண்டது.
என்றாலும் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் தேர்வு செயற்பாடுகளில் அவரது அனுபவம் பூஜ்ஜியம் தான்.
தேர்வுக் குழுவுக்கு நியமிப்பதற்காக 10 பேர் கொண்ட பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை தந்திருப்பதாகவும், அது பற்றி அவதானம் செலுத்தி புதிய தேர்வுக் குழுவை நியமிக்கப்போவதாகவும் ஹரீன் பெர்னாண்டோ கூறி இருந்தார்.
பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெயர்களில் பிரமோத்ய விக்ரமசிங்க உட்பட தற்போதைய தேர்வுக் குழுவில் இருப்பவர்களின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தெரியவருகிறது. என்றாலும் அமைச்சர் இளம் தேர்வுக் குழு ஒன்றை நியமிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. அதாவது அண்மையில் ஓய்வு பெற்றவர்கள் இந்தத் தேர்வுக் குழுவுக்கு இணைக்க வாய்ப்பு உள்ளது. இதுவே சர்வதேச அளவில் புதிய போக்காக இருக்கிறது.
பாகிஸ்தான் புதிய தேர்வுக் குழு தலைவராக 38 வயது வஹாப் ரியாஸை நியமித்ததோடு, இங்கிலாந்து கிரிக்கெட் தேர்வாளராக 37 வயது லுக் ரைட் நியமிக்கப்பட்டார். இந்த இருவருமே அண்மைக் காலம் வரை முதல்தர போட்டிகளில் ஆடி வந்தார்கள்.
உபுல் தரங்க தவிர, புதிய தேர்வுக் குழுவில் டில்ருவன் பெரேரா (41), அஜந்த மெண்டிஸ் (38) மற்றும் தரங்க பரணவிதான (41) ஆகியோரும் நியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் கசிகின்றன.
உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் அடுத்து இலங்கை அணி சிம்பாப்வேயுக்கு எதிராக ஜனவரி மாதம் ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது. இலங்கை வரும் சிம்பாப்வே அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் ஆடும்.
இதற்கான இலங்கை அணியை நியமிக்கப்படும் புதிய தேர்வுக் குழுவே தேர்வு செய்ய வேண்டி இருக்கும். அடுத்த ஆண்டில் முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளும் நடைபெறப் போகிறது. உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தருணமாகவும் இது இருக்கிறது.
எனவே புதிய தேர்வுக் குழுவுக்கான பொறுப்புகள் சாதாரணமானதல்ல. இலங்கை அணியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகிறது.
எஸ்.பிர்தெளஸ்