ஒன்றரை மாதமாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டி வரை வெற்றியுடன் வந்த இந்தியா தோற்க, ஆறாவது முறையாக கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா. நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அரையிறுதி வரை உலகக் கிண்ணத்தை வெல்லப்போவது போல் ஆடிவிட்டு அரையிறுதியில் கோட்டை விட்டு முதல் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
தொடர் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த பாகிஸ்தான் அணி கடைசி வரை அரையிறுதி நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டது பெரிய செய்தி. ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் நான்கில் வென்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் எதிரணிகளுக்கு எச்சரிக்கையையும் கொடுத்திருக்கிறது.
நடப்புச் சம்பியனாக வந்தது மாத்திரமல்ல இம்முறை உலகக் கிண்ணத்திலும் பலமான அணி என்று எல்லோராலும் எதிர்வுகூறப்பட்ட நிலையில் எல்லோரையுமே ஏமாற்றியது இங்கிலாந்து. அஞ்சலோ மத்தியூஸை ‘டைம் அவுட்’ செய்ததைத் தவிர பங்களாதேஷ் அணி பற்றி சொல்லும்படியாக ஒன்றுமில்லை.
காயங்கள், குழப்பங்கள் என்று இலங்கை அணியின் உலகக் கிண்ணமே குழம்பிவிட்டது. கடைசி இடத்தைப் பிடித்த நெதர்லாந்து இம்முறை உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியதே பெரும் சாதனை. அதிலும் இரண்டு போட்டிகளில் வென்றது முன்னேற்றமே.
10 அணிகள், 10 மைதானங்கள் மொத்தம் 48 போட்டிகளுடன் முடிவுற்ற இம்முறை உலகக் கிண்ணப் போட்டியின் போக்கு பற்றி பார்ப்போம்.
பெரும் வெற்றிகளின் தொடர்
2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் மொத்தம் 48 போட்டிகளில் 22 ஆட்டங்கள் 100க்கும் மேற்பட்ட ஓட்ட இடைவெளி அல்லது 4க்கும் மேற்பட்ட விக்கெட் வித்தியாசத்தில் மற்றும் 60க்கும் மேற்பட்ட பந்துகளை மிச்சம் வைத்து வெற்றியீட்டப்பட்டுள்ளன. இந்த 22 இல் 18 போட்டிகள் முழு அங்கத்துவ நாடுகளுக்கு இடையிவான ஆட்டங்களாகும்.
அதாவது இந்த உலகக் கிண்ணப் போட்டி அதிக வீதமான (45.83) ஒரு பக்க முடிவுகள் தந்த உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டது. அது 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ணத்திற்கு மாத்திரமே பின்தங்கியுள்ளது (53.33). 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கிண்ணத்திலும் இம்முறை போன்றே 48 போட்டிகளில் 22 ஆட்டங்கள் பெரும் வெற்றிகளைத் தந்த போட்டிகளாகவே முடிந்தன.
அட்டவணை 1
தொடர் முழுவதும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் பெரும் வெற்றிகளை பெற்றன. இரண்டு முறை 300 ஓட்டங்களுக்கு மேல் துரத்தப்பட்டன. ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இதற்கு முன் இப்படி நடிக்கவில்லை. முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் சாராசரியாக 134.68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றியீட்டி இருக்கின்றன. இது வேறு எந்த உலகக் கிண்ணத்தை விடவும் அதிகமாகும்.
முக்கியமில்லாமல் போன
நாணய சுழற்சி
48 போட்டிகளில் 19 ஆட்டங்களில் மாத்திரமே நாணய சுழற்சியில் வென்ற அணிகள் வெற்றியீட்டின. இதன் வெற்றி தோல்வி விகிதம் 0.655 ஆகும். எந்த ஒரு உலகக் கிண்ணத் தொடரிலும் இது இரண்டாவது மிகக் குறைவான எண்ணிக்கையாகும். 1979 ஆம் ஆண்டு நாணய சுழற்சியில் வென்ற அணிகளின் வெற்றி தோல்வி விகிதம் மிகக் குறைவாக 0.555 ஆக பதிவாக இருந்தது.
அட்டவணை 2
42 பகலிரவு போட்டிகளில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அணிகள் 16 ஆட்டங்களில் வென்றன. இந்த 42 போட்டிகளின் பாதி அளவான ஆட்டங்களில் நாணய சுழற்சியில் வென்ற அணிகள் பந்துவீச்சை தேர்வு செய்தபோதும் எட்டு தடவைகள் மாத்திரமே வெற்றியீட்டின.
முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அணிகளும் 21 ஆட்டங்களில் எட்டில் தான் வென்றன. நடைபெற்ற ஆறு பகல் போட்டிகளில் நாணய சுழற்சியில் வென்ற அணிகள் ஐந்து முறை முதலில் பந்து வீச தீர்மானித்தன. அதில் மூன்று போட்டிகளில் அந்த அணிகள் வெற்றி பெற்றன.
அட்டவணை 3
சாதித்த அறிமுகங்கள்
2023 உலகக் கிண்ணம் அறிமுக வீரர்களுக்கான தொடராக மாறி இருந்தது. குறிப்பாக துடுப்பாட்டத்தில் தனது கன்னி உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற வீரர்கள் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முன்னிலை பெற்றனர். முதல் முறை களமிறங்கிய ரச்சின் ரிவிந்திரா மற்றும் டரில் மிச்சல்ல இருவரும் முறையே 578 மற்றும் 552 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து சார்பில் ஆதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதல் இரு இடங்களை பெற்றனர். தனது கன்னி உலகக் கிண்ணத்தில் ஆட வாய்ப்புக் கிடைத்த ஷ்ராயஸ் ஐயர் 530 ஓட்டங்களுடன் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்தார்.
ரவிந்திரா, மிச்சல் மற்றும் ஐயருக்கு முன்னர் தனது கன்னி உலகக் கிண்ணத் தொடரில் 500க்கு மேல் ஓட்டங்கள் பெற்ற ஒரே வீரராக ஜொன்னி பெஸ்டோ இருந்தார். 2019 உலகக் கிண்ணத்தில் அவர் மொத்தம் 532 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று தனது முதல் உலகக் கிண்ணத் தொடரிலேயே மூன்று சதங்கள் பெற்ற முதல் வீரராகவும் ரிவிந்திரா பதிவானார்.
பாகிஸ்தான் அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்ற மொஹமட் ரிஸ்வான் (395), ஆப்கான் அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்ற இப்ராஹிம் சத்ரான் (376), இங்கிலாந்து அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்ற டேவிட் மாலன் (404) மற்றும் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்ற சதீர சமரவிக்ரம (373) ஆகிய அனைவருமே தமது கன்னி உலகக் கிண்ணத் தொடரில் களமிறங்கியவர்களாவர்.
உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்களில் இருவர் தமது கன்னித் தொடரில் பங்கேற்றவர்களாவர். அவர்கள் டில்ஷான் மதுஷங்க (21) மற்றும் கெரால்ட் கோட்சீ (20) ஆவர். தடுமாறிய இலங்கை அணியில் தடுமாற்றம் இல்லாமல் ஆடிய ஒரே வீரராக மதுஷங்க இருந்தார். இலங்கை அணி வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளில் 42 வீதமானது மதுஷங்க வீழ்த்திய விக்கெட்டுகளாகும். ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனையை கோட்சீ படைத்தார்.
பவர் பிளேயின் பலம்
2023 உலகக் கிண்ணம் அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட உலகக் கிண்ணமாக சாதனை படைத்தது. இம்முறை தொடரில் ஓட்ட விகிதம் 5.82 ஆக இருந்ததோடு அது 2015 உலகக் கிண்ணத்தில் பதிவான 5.65 சாதனையை முறியடித்தது. ஒட்டுமொத்த ஓட்ட விகிதத்தில் முதல் பத்து ஓவர்களில் பெறப்பட்ட பிரமாண்ட ஓட்டங்கள் பெரும் பங்களிப்பு செய்தன. அதாவதது பந்துக்கு பந்து தரவுகள் பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்ட 1999 உலகக் கிண்ணம் தொடக்கம் முதல் பத்து ஓவர்களில் அதிக ஓட்ட விகிதம் பதிவான உலகக் கிண்ணமாக இம்முறை தொடர் சாதனை படைத்தது. அது 5.52 ஆக இருந்தது. அதாவது 2023 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட மொத்த ஓட்டங்களில் 21.54 வீதமான ஓட்டங்கள் முதல் பத்து ஓவர்களுக்குள் பெறப்பட்டுள்ளன. இது 2003 ஆம் ஆண்டு தொடருக்கு அடுத்து (22.73) இரண்டாவது அதிகபட்சமாகும்.
அட்டவணை 4
முதல் பத்து ஓவர்களில் வேகமாக ஓட்டங்கள் பெற்ற அணிகள் வரிசையில் 6.97 ஓட்ட விகிதத்துடன் இந்தியா முதலிடத்தில் இருப்பதோடு சம்பியனான அவுஸ்திரேலியா ஓவருக்கு 6.5 ஓட்டங்கள் என இரண்டாவது இடத்தை பிடித்தது. முதல் பத்து ஓவர்களுக்குள் 90 அல்லது அதற்கு மேல் ஓட்டங்கள் ஐந்து தடவைகள் பெறப்பட்டன. இதில் மூன்று முறை இந்தியா இடம்பெற்றது. முந்தைய ஆறு ஒருநாள் உலகக் கிண்ண தொடர்களை எடுத்துக் கொண்டால் வெறுமனே இரு முறை தான் முதல் பத்து ஓவர்களுக்கும் 90க்கு மேல் ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளன.