Home » சர்ச்சையாக உருவெடுத்துள்ள அரசியலமைப்பு பேரவை விவகாரம்

சர்ச்சையாக உருவெடுத்துள்ள அரசியலமைப்பு பேரவை விவகாரம்

by Damith Pushpika
November 26, 2023 6:00 am 0 comment

பாராளுமன்றத்தில் சில வாரங்களாக பெரும் பூதாகரமெடுத்திருந்த கிரிக்கெட் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் சற்று தணிந்துள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவை தொடர்பில் இந்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்துக்களும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு அவை சர்ச்சைகளுக்கு காரணமாகவும் அமைந்தன.

ஜனாதிபதி, சபாநாயகர், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பலரும் வாதப்பிரதிவாதங்களை சபையில் முன் வைத்த நிலையில், சபையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அது சர்ச்சையாக மாறியதையும் குறிப்பிட வேண்டும். அரசியலமைப்பு பேரவையில் உள்ளவர்களே அதன் நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார். அதன் நடவடிக்கைகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை அடுத்த வாரம் நியமிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் சபாநாயகரும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவோ அரசியலமைப்பு பேரவை சுயாதீனமானது. அதில் நிறைவேற்று அதிகாரம் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றார்.

அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினர்கள் பிளவு பட்டு செயற்படுவதாகவும் அதற்குள்ளேயே சிலர் அதன் செயல்பாடுகளை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது.

அந்த வகையில் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியே என்பதை ஜனாதிபதி சபையில் தெரிவித்தார். இந்த கூற்றுக்கள் சபையில் பெரும் சர்ச்சைகளுக்கு வழி வகுத்தன.

அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன் வைக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் இன்னும் அந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்ற கேள்விகளும் சபையில் எழுந்தன. அதுதொடர்பில் ஜனாதிபதியும் சபையில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களும் குற்றச்சாட்டுகளும் நிறைவடைந்ததாக தெரியவில்லை. பாராளுமன்றத்தில் அவை இன்னமும் தொடர்கின்றன. இனி அரசியலமைப்பு பேரவை தொடர்பில் சபையில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக பார்ப்போம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என அன்று நீதிமன்றத்தில் தெரிவித்த சுமந்திரன் எம்பி, இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறில்லை என மாற்றுக் கருத்தை தெரிவிப்பது விந்தையானது. அவர் ஏன் அவ்வாறு செயற்படுகின்றார் என எனக்குப் புரியாதுள்ளது.

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என நான் தெரிவித்தபோது அது தொடர்பாக சபையில் முரணான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக சுமந்திரன் எம்.பி அதற்கு மாறான கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது அரசியலமைப்பின் 17ஆம் திருத்தத்தின் வழக்குத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவே அரசியலமைப்பு சபையை நாம் ஏற்பாடு செய்தோம். அதேபோன்று 2002இல் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் வழங்கிய தீர்ப்பும் உள்ளது.

அதன் பிரகாரமே தற்போது நாம் செயற்படுகின்றோம். அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என அன்று சுமந்திரன் எம்.பி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறில்லை என தெரிவிக்கின்றார்.அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்திருந்தார். எனினும் சட்டத்தரணிகள் சங்கத்துடன் நான் அது தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் பேசவில்லை

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு அதற்குள்ளேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக பொலிஸாருக்கும் நீதிமன்றத்திற்கும் செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அந்த வகையில் உயர் பதவிகளுக்கு நியமிப்பதற்கு அனுப்பப்பட்டுள்ள பெயர்களை அரசியலமைப்பு பேரவை தாமதப்படுத்துவது ஏன் என்பதை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறும் நான் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன்.

பாராளுமன்ற தெரிவுக் குழு, அரசியலமைப்பு பேரவை என எந்த பெயர்களில் குறிப்பிடப்பட்டாலும் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியே. அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக விசேட தெரிவுக்குழு ஒன்றை அடுத்த வாரம் நாம் நியமிக்கவுள்ளோம்.

அரசியலமைப்பு பேரவை முறையாக செயற்படாததால் தற்போது நாட்டில் பொலிஸ்மா அதிபரும் இல்லை, நீதிபதிகளும் இல்லை. இவ்வாறான நிலையில் நாட்டில் நீதியை நிலைநாட்டமுடியாமல் உள்ளது.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிபதி பந்துல கருணாரத்னவின் பெயரை அடுத்த பதவி உயர்வுக்காக பிரதம நீதியரசரே எனக்கு வழங்கினார். நான் அதனை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பினேன். எனினும் அரசியலமைப்பு பேரவை அதனை தடுத்து வைத்திருப்பது ஏன் என எனக்குத் தெரியாது.

குறிப்பாக அரசியலமைப்பு பேரவையின் சில உறுப்பினர்கள் அதன் நடவடிக்கைகளை குழப்புவதற்கு உள்ளே இருந்து செயற்படுவார்களானால் எமக்கு இந்த முறைமையை செயற்படுத்த முடியாமல் போகும்.

பொலிஸ்மா அதிபர் நியமனம் மற்றும் நீதிபதியின் பதவி உயர்வு தொடர்பாக அரசியலமைப்பு பேரவையால் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாமல் போனதாக சபாநாயகர் எனக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அந்த நியமனத்துக்கு குறித்த பேரவையில் 3பேர் ஆதரவாகவும் 3பேர் எதிராகவும் வாக்களித்திருப்பதுடன் 2பேர் வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

ஒருவர் இன்னும் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படாமல் உள்ளார். இவ்வாறு செயற்படும்போது எவ்வாறு எம்மால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்?

ஜனாதிபதி பெயர்களை முன்மொழிந்தால் பேரவை அப்பெயர்கள் தகுதியானவையா இல்லையா என ஆராய்ந்து பொருத்தமானவர்களின் பெயரை அந்தப் பேரவைக்கு அனுப்புவதே நடைமுறை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

அரசியலமைப்பு பேரவைக்ககான இறுதி நியமனம் இதுவரை இடம்பெறாமை தொடர்பில் எவரும் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் எம்.பியின் பெயரை இதுவரை நியமிக்காமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக சபைக்கு தெளிவுபடுத்தும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கான இறுதி நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளேன். அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நியமனத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட வேண்டும் என்றே சட்டமா அதிபரின் ஆலோசனையும் இருந்தது.

இதனை மீறி செயற்பட எமக்கு சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் கிடையாது. அதனால் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறில்லாவிட்டால், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதானால் அரசியலமைபிலுள்ள அதற்கான உறுப்புரையை மாற்ற வேண்டும். அதனால் அரசியலமைப்பு பேரவைக்கு இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டவரை இதுவரை நியமிக்கவில்லை என யாரும் எவரையும் குற்றம் சுமத்த முடியாது.

அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள குறைபாடே இந்த விடயம் இடம்பெறாமைக்கு காரணமாகும் என்பதை சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச:

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வ தற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதா? அத்துடன் அரசியலமைப்பு பேரவையின் நியமனம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் சபையில் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவை தொடர்பாக பல விடயங்களை சபையில் முன்வைத்துள்ளார். குறிப்பாக அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனத்தை மேற்கொள்ளாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரை குற்றம் சாட்டியுள்ளார். இந்நியமனம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பில் அரசியலமைப்பின் 41 (ஏ) உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சித்தார்த்தன் எம்.பி.யின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் ஏன் அந் நியமனத்தை மேற்கொள்ளப்படவில்லை என நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் வினவியுள்ளேன். எவ்வாறெனினும் இறுதி நியமனம் தொடர்பான பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடையாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு பேரவையின் செயல்பாடுகளை ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவ்வாறு செயற்பட அதிகாரம் இல்லை. நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களை ஓரளவிற்கு குறைக்கும் வகையில் தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்தவே அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்டது. அவ்வாறில்லாமல் ஜனாதிபதி பெயரிட்டு அனுப்பும் அனைத்துக்கும் சம்மதம் எனத் தெரிவிக்க முடியாது.

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை தெளிவாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது.

எனவே அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என்ன என்பதை ஜனாதிபதிக்கு சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பாக நாட்டுக்கு தவறான தகவலே போய்ச் சேரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இடம் பெற்று வரும் நிலையில் விவாதங்களில் அதற்கு வழங்க வேண்டிய முக்கியத்துவங்கள் தவிர்க்கப்பட்டு அரசியலமைப்பு பேரவை தொடர்பான விடயங்கள் பெருமளவு நேரத்தை வீணடிக்கின்றன. அது தொடர்பில் ஆளும் கட்சியினரின் பெரும் அதிருப்தி சபையில் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

உண்மையில் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் மிக முக்கியமான விடயமான மின் சக்தி, எரிசக்தி அமைச்சின் குழு நிலை விவாதம் நடைபெற்ற போது, அன்றைய தினம் அரசியலமைப்பு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அது தொடர்பில் ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரை தொடர்பான விவாதங்களே பெரும் நேரத்தை எடுத்துக் கொண்டன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division