காஸா மீது ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த யுத்தத்தின் விளைவான அழிவுகள், இழப்புக்கள், சேதங்கள் அளப்பரியவை. அவை உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன.
மத்திய தரைக்கடலுக்கு அருகிலுள்ள கடற்ரை பிரதேசமான காஸா 41 கிலோ மீற்றர் நீளமும் 6 முதல் 12 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட 365 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது.
23 இலட்சம் பலஸ்தீன மக்களைக் கொண்ட இப்பிரதேசத்திற்கான தண்ணீர், எரிபொருள், மருந்து, உணவு விநியோகம் அனைத்தும் இஸ்ரேலினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய படையினர் நவீன ஆயுதங்களுடன் காஸாவை சுற்றி வளைத்து இந்த யுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். வைத்தியசாலைகள், மக்கள் குடியிருப்புகள், அகதி முகாம்கள், பாடசாலைகள், ஐ.நா. நிவாரண நிலையங்கள், பாடசாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் இந்த யுத்தத்திற்குத் தப்பவில்லை.
இதன் விளைவாக காஸா எங்கும் ஒரே மரணஓலம். இந்த யுத்தம் ஆரம்பமானது முதல் இற்றைவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்டுள்ளனர். அவர்களில் 4500 இற்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளாவர். அதேநேரம் காஸாவில் கடமையாற்றிய 100 இற்கும் மேற்பட்ட ஐ.நா. உத்தியோகத்தர்களும் 45 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் இந்த யுத்தம் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.
காஸா பிரதேசம் முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதனால் யுத்தம் ஆரம்பமானது முதல் செய்வதறியாது அங்கும் இங்கும் ஒட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஸாவில் மக்களின் அவலம், யுத்தத்தின் கோரமுகம் உலகின் அனைத்து ஊடகங்களிலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தினமும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
அதேநேரம் குழந்தைகள், பெண்களை அதிகளவில் பலியெடுக்கும் இக்கொடூர யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறும், மனிதாபிமான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி அனுப்பி வைக்குமாறும் உலகெங்கிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் தினமும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெய்ன் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் அவை இடம்பெற்று வருகின்றன.
இலங்கையிலும் கூட பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புக்கூட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு யாழ்ப்பாணம் பஸ்தரிப்பிடத்திற்கு அருகிலும், மட்டக்களப்பு, வவுனியா நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது.
சர்வதேச பௌத்த அமைப்பின் இலங்கைக் கிளை கொழும்பில் பாரிய எதிர்ப்புக் கூட்டத்தையும் உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் அமைப்பு கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் முதல் ஐ.நா. அலுவலகம் வரை யுத்தத்திற்கு எதிரான ஊர்வலமொன்றையும் நடத்தியுள்ளது.
இவற்றை விட வேறுபட அமைப்புகளும் கூட காஸா மீதான யுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.
இந்த எல்லா ஆர்ப்பாட்டங்களுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இஸ்ரேலின் தலைநகரான டெல்அவிவ் இல் காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை வலியுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இந்த யுத்தத்திற்கு இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கிய பிரதான நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
‘பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். அதற்காக பெண்கள், குழந்தைகள் என அப்பாவி மக்கள் கொல்லப்பட முடியாது’ என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பி.பி.சி உலக சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
இவரது இக்கோரிக்கை உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த யுத்தத்திற்கு இஸ்ரேலுக்கு நேரில் சென்று ஆதரவு நல்கிய பிரான்ஸ் ஜனாதிபதி, பலஸ்தீனுக்கு ஆதரவாக பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும் ஆரம்பத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்தவராவார். அவ்வாறான ஒருவரிடம் இருந்து இவ்வாறான கோரிக்கை வெளியாகி இருப்பதானது அங்கு இடம்பெறும் யுத்த கொடூரத்தின் பிரதிபலிப்பே காரணம் என போரியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டிள்ளனர்.
இதேவேளை, காஸா மீதான யுத்தத்திற்கு இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கிய மற்றொரு நாடான அமெரிக்காவும் யுத்த நிறுத்தத்தை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான சூழலில் கனடாவும் காஸாவில் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஸா மீதான யுத்தத்திற்கு ஆதரவு நல்கிய தலைவர்களே யுத்தத்தை நிறுத்த கோருகின்றார்கள் என்றால் அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இவை இவ்வாறிருக்க, பெல்ஜிய நாட்டின் விமான நிலையத்தில் கடமையாற்றும் த ஏ.சி.பி பிளஸ், பி.ரி.வி, பி.பி.ரி.கே, ஏ.சி.வி.கே ட்ரான்ஸசகா ஆகிய நான்கு தொழிற்சங்களைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட மாட்டோம் என அறிவித்துள்ளனர். அதேபோன்று உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் ஆயுத ஏற்றி இறக்கும் பணிளையும் மேற்கொள்ள மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.
அத்தோடு ஸ்பெய்னின் பாரிசிலோனா துறைமுகத்தில் பணியாற்றும் ஒ.ஈ.பி.பி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 1200 சுமை தூக்கும் தொழிலாளர்களும் இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானிய ஆளும் பழைமைவாதக் கட்சி இந்த யுத்தத்திற்கு ஆதரவு நல்கி வருகின்ற நிலையில், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இது கடும் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் பிரித்தானியாவில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் தொழிற்கட்சி தலைவரின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்கட்சியைச் சேர்ந்த 250 கவுன்ஸிலர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் அக்கட்சியிலிருந்து ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் மேலும் 50 கவுன்சிலர்களும் ஒரு நிழல் அமைச்சரும் விலகுவதாக அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த யுத்தத்திற்கான ஆதரவு நிலைப்பாடு கட்சிகளையும் கூட நெருக்கடிக்களுக்குள் தள்ளியுள்ளதையே இது எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு காஸா மீதான யுத்தத்திற்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எதிர்ப்புக்கள் வலுத்துள்ளமைக்கு மதம் மனிதநேயமே அடிப்படைக் காரணமாகும். ஆயுத வியாபாரிகளைத் தவிர்ந்த அனைத்துத் தரப்பினரும் காஸா மீதான யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றே கோருகின்றனர்.
உலகளாவிய இந்தக் கோரிக்கை, வலியுறுத்தல் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அது காஸாவில் யுத்தநிறுத்தத்தை உடனடியாகக் கொண்டு வரக்கூடியதாக அமைய வேண்டும். அதுவே அமைதி, சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.
மர்லின் மரிக்கார்