- பாதுகாப்பற்ற கட்டடங்களுடன் நாடுமுழுவதும் 74 பாடசாலைகள்
- ஆத்திரமுற்று அதிபரை தாக்கிய மக்கள்
“அநே மகே ரத்தரம் துவே (எனது தங்க மகளே) உனது அம்மா உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டு இந்த 3 பிள்ளைகளுக்கும் குடியிருக்க வீடொன்றைக் கட்டவே வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றாளே, அவளிடம் நீ இறந்துவிட்டாய் எனச் சொன்னால், அவள் நெஞ்சு வெடித்து செத்து விடுவாளே” என வயது முதிர்ந்த பெண்ணொருவர் தலையில் அடித்தவாறு அழுது புலம்பிக் கொண்டிருந்தார். இம்மாதம் 15 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டியில் உள்ள ஓர் சிங்கள மொழி ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற ஒரு கோர விபத்தில் பாடசாலையில் கல்வி கற்ற ஒரு பிஞ்சு மரணமானது. அந்த பிஞ்சின் பெயர் தக்ஸனி வயது 6. அவள் வெல்லம்பிட்டியில் உள்ள வேரகொட வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றாள். அம் மாணவி இறந்த அன்றான 15ஆம் திகதியே அவளது பிறந்த தினமாகும். அதே நாளிலேயே அவள் மரணமும் சம்பவித்தது. தனது அம்மாவுக்கு, வெளிநாட்டு அழைப்பினை எடுத்து “அம்மா எனக்கு பிறந்த நாள். நான் கேக் வாங்கி ஏனைய சகோதரிகளுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும்.” எனச் சொல்லியிருக்கிறார். அப்பா சாதாரண கூலித் தொழிலாளி.
அவருடம் “நீங்கள் வேலை முடித்து வீடு வரும்போது, எனக்கு கேக் வாங்கி வையுங்கள்” எனக் கூறியிருக்கின்றாள். தனது பெரியதாயிடமும் சொல்லிவிட்டு தனது பிரதேசத்தில் அமைந்துள்ள தனது பாடசாலைக்குச் சென்றாள்.
அவளது வகுப்பாசிரியர் அவளை அழைத்து “இன்று உனக்கு பிறந்தநாள் அல்லவா?” என்று கேட்க, “ஆம் டீச்சர் அப்பா இரவில் வீடு வரும்போது கேக் வாங்கி வைப்பார், அதனை வெட்டி கொண்டாடுவேன்” என்றாள். இல்லை உனது பிறந்த நாளிலேயே எமது பாடசாலை அதிபருக்கும் பிறந்த நாள். அவரே கேக் கொண்டு வந்துள்ளார். வாருங்கள் அதிபரும் நீங்களும் கேக் வெட்டி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் ” என்றார் ஆசிரியை. அதன் பின்னர் அவர்கள் 10.30 அளவில் நீர் அருந்துவதற்காக நீர்க் குழாய்கள் பொருத்திய இடத்துக்குச் சென்றதும் மேலும் 4 மாணவர்கள் அந்த நீர்க்குழாய் பொருத்தப்பட்ட சுவரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதே அந்தச் சுவர் இரண்டாகப் பிளந்து விழுந்தது.
நீர் அருந்திய மாணவியின் மீதும் மேலும் 3 மாணவிகளின் தலையிலும் சுவர் விழுந்தது. இடிபாடுகளுக்குள் அவர்கள் அகப்பட்டுக் கொண்டனர். உடன் செயற்பட்ட அதிபரும், ஆசிரியர்களும் அவ் வீதியால் வந்தவர்களும் காயத்துக்குள்ளான மாணவிகள் 4 பேரையும் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் தக்ஸனியின் தலையில் சுவர் விழுந்து பாரதூரமான காயம் ஏற்பட்டதால் அவள் உயிர் உடனேயே பிரிந்தது. ஏனைய மாணவிகளில் ஒரு மாணவி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். அவ் வீதியால் வந்தவர்கள் அதிபரை மூர்க்கத்தனமாக தாக்கியதால் அதிபர் தலையில் காயத்துக்குள்ளாகி அவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் அதிபர் பாடசாலையை பொறுப்பேற்று 3 வருடங்கள் மட்டுமே ஆகின்றது. இப் பாடசாலையை முன்னேற்றுவதற்காக அவர் பாடுபட்டு வருவதாகவும். சிறந்த அதிபர் எனவும் பெற்றார் தெரிவிக்கின்றனர். இருந்தும் 10 வருடங்களுக்கு முன்பே இந் நீர்குழாய் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு விட்டது. அதனை அன்று நிர்மாணித்தவர்கள், கொங்கிரிட் கம்பி இடாது வெறும் சீமெந்து கற்களைக் கொண்டு இதன் தூண்களை நிர்மாணித்துள்ளனர். அதனாலேயே மாணவர்கள் அதன் மேல் ஏறியதும் அது உடைந்து விழுந்துள்ளது. அக் கட்டடம் பொருத்தமற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இம் மாணவியின் தாய், தனது மகளுக்கு நேர்ந்த கதியை அறிந்து நேற்றுமுன்தினம் நாடு திரும்பியுள்ளார். தனது 3 பிள்ளைகளும் வாழ்வதற்காக ஓர் வீடொன்றை நிர்மாணிக்கவே, தனது 3 பிள்ளைகளையும் தனது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார். அவர் அங்கு 8 மாத காலமே தொழில் செய்துள்ளார், “மகளுக்கு பிறந்தநாள் கேக்கும் பரிசுப் பொருளாக ஒரு அழகிய ஆடையும் வாங்கி வைத்திருந்தேன். தக்ஸனி எங்களை விட்டு சென்றுவிட்டாள் “என மாணவியின் அப்பா கண்ணீருடன் கூறினார்.
இச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு கிராண்ட்பாஸ் பொலிஸாரும், கொழும்பு மஜிஸ்ரேட் நீதிபதியும் உடன் விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இவ்விடயமாக பாராளுமன்றத்தில் கொலன்னாவை பகுதிக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் கேள்வி எழுப்பினர். இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டு வரும் அதிபரை சிலர் தாக்கியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், மாணவி தக்சனிக்கு உரிய நஷ்ட ஈட்டையும் பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணித்த
ஒப்பந்தக் காரர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
கல்வி அமைச்சர் பதிலளிக்கையில் – இப் பாடசாலை மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ளதாகவும், அம் மாணவியின் குடும்பத்தாருக்கு கல்வி அமைச்சினால் 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் ஹோமாகமவில் உள்ள தேசிய பாடசாலையொன்றில் இதே போன்று ஒரு வகுப்பறைக் கட்டிடம் உடைந்த நிலையில் உள்ளதாகவும், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை உட்பட 74 பாடசாலைகளில் உடைந்து விழக்கூடிய வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பாடசாலைகளில் கட்டடங்களை நிர்மாணிக்கும் போது அந்தந்த பிரதேச கல்வி அலுவலகத்தில் இவற்றினைக் கண்காணிப்பதற்கு பொறியியலாளர்கள் உள்ளனர். அவர்களே இக் கட்டடங்களை பரிசோதித்து கட்டுமானப் பணிகளுக்காக விலைமனுக் கோரும் போது சிறந்த, நீண்ட கால அனுபவமும் அரச கட்டுமானத் திணைக்களத்தில் பதியப்பட்டவர்களுக்குமே பாடசாலைக் கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
சில அரசியல்வாதிகளின் சிபாரிசுகளால், இவ்வாறு மனித வாழ்க்கைக்கு பொருத்தமல்லாத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு சிறிது காலம் சென்றதும் அவை இடிந்து விழுந்து அனர்த்தங்களும் உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன.
அண்மையில் கொழும்பில் மரமொன்று முறிந்து விழுந்து மரணங்கள் சம்பவித்தன. அதேபோன்று பாடசாலையில் கட்டடம் விழுந்து உயிர்ப் பலிகள் ஏற்பட்டுள்ளன. சம்பவங்கள் நடைபெற்ற பின்னரே அதனைப் பற்றிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் எடுப்பார்கள். எவரும் வரும் முன்னர் காக்கும் நடவடிக்கை எடுப்பது அரிதாகவே உள்ளது. ஆகவே தான் அரச கட்டுமான ஒப்பந்தங்களை பெறும் போது அதற்கான சட்ட திட்டங்களுக்கமைய அவற்றை மேற்கொண்டால். இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்க்கலாம். அத்தோடு பொருத்தமற்ற நிர்மாணங்களைச் செய்யும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற தண்டனைகளை பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.
அஷ்ரப் ஏ சமத்