மேகாலயாவின்
மவ்சின்ராமில் பெய்யும்
மழைப் பொழிவினும்
பன்மடங்கு
மனதுக்குள்
மழை பெய்விக்கின்றாய்!
இடைவெளியின்றி
அறு பொழுதும்
அடைமழையாய்
ஆக்கிரமிக்கின்றாய்!
எக்கணமும்
சிந்தாமல் சிதறாமல்
என்னுள் ‘மாரி’யாய்
குளிர்விக்கின்றாய்!
ஒற்றை மழைத்
துளியாய் ‘ஆவி’யாகி
நின் ஞாபகத்தில்
ஆழ்த்துகின்றாய்!
நினைவில் ஈரமாக்கி
குரல் கேட்காமல்
‘காய’ வைக்கும் தூறலாய்
தேய்மதியாக்குகின்றாய்!
நீயிருக்குமிடத்தில்
எனை ஆகர்ஷித்த
கணத்தில் சாரலாய் புகுந்து
புத்துயிரூட்டுகின்றாய்!
எனது எடையினும்
கூடிய கனமழையாய்
காதலைப் பொழிகிறாய்!
ஆழிமழையாய் வீழ்ந்து
முத்தாக முகிழ்த்திருக்கிறாய்!
முன்நாள் இந்நாள் என்றின்றி
வாழ்நாள் முழுதும்
பேரன்பு மழையில்
நனைத்துக் கொண்டேயிரு!
மழைக்காலம்
327
previous post